டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஜோகோவிச் + "||" + Australian Open Tennis: Jogovich at the finals

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஜோகோவிச்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஜோகோவிச்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

மெல்போர்ன், 

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

ஜோகோவிச் மிரட்டல்

மெல்போர்ன் நகரில் நடந்து வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரரும், 6 முறை சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), 30–ம் நிலை வீரரான லுகாஸ் போலேவுடன் (பிரான்ஸ்) மோதினார். இதில் ஜோகோவிச்சின் ஆக்ரோ‌ஷமான ஷாட் மற்றும் அதிரடியான சர்வீஸ்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் போலே திண்டாடினார்.

ஒரு தரப்பாக நகர்ந்த இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6–0, 6–2, 6–2 என்ற நேர் செட்டில் போலேவை ஊதித்தள்ளினார். இந்த ஆட்டம் வெறும் 83 நிமிடங்கள் மட்டுமே நடந்தது. நாளை நடக்கும் மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் ஜோகோவிச், 2–ம் நிலை வீரர் ரபெல் நடாலுடன் (ஸ்பெயின்) பலப்பரீட்சை நடத்துகிறார். ஜோகோவிச் கூறுகையில், ‘போலேவுக்கு எதிராக முதல் புள்ளியில் இருந்து கடைசி புள்ளி வரை கன கச்சிதமாக விளையாடினேன். அடுத்து இறுதி ஆட்டத்தில் நடாலுடன் மோத இருக்கிறேன். எனது டென்னிஸ் வாழ்க்கையில் மிகப்பெரிய போட்டியாளராக நடாலை கருதுகிறேன். அவருக்கு எதிராக நான் பல போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். சில ஆட்டங்கள் கடும் போராட்டமாக இருந்திருக்கிறது. 2012–ம் ஆண்டு எங்கள் இடையே இங்கு நடந்த இறுதி ஆட்டம் கிட்டத்தட்ட 6 மணி நேரம் நீடித்தது. ஆனால் இந்த முறை ஆட்டம் அவ்வளவு நேரம் இழுக்காது என்று நம்புகிறேன். ஆனால் நிச்சயம் சிறந்த இறுதி ஆட்டமாக இருக்கும்’ என்றார்.

இவர்கள் இருவரும் இதுவரை 52 முறை நேருக்கு நேர் மோதியிருக்கிறார்கள். இதில் 27–ல் ஜோகோவிச்சும், 25–ல் நடாலும் வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இரட்டையர் பிரிவில்...

பெண்களுக்கான இரட்டையர் இறுதி ஆட்டத்தில் சமந்தா ஸ்டோசுர் (ஆஸ்திரேலியா)– சூவாய் ஜாங் (சீனா) ஜோடி 6–3, 6–4 என்ற நேர் செட்டில் நடப்பு சாம்பியன் டைமியா பாபோஸ் (ஹங்கேரி)– கிறிஸ்டினா மிலாடெனோவிச் (பிரான்ஸ்) இணையை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 34 வயதான சமந்தா ஸ்டோசுர், 2005–ம் ஆண்டுக்கு பிறகு இங்கு வென்ற முதல் பட்டம் இதுவாகும்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு)– நவோமி ஒசாகா (ஜப்பான்) மல்லுகட்டுகிறார்கள். இவர்கள் நேருக்கு நேர் மோத இருப்பது இதுவே முதல்முறையாகும். இதில் பட்டம் வெல்லும் வீராங்கனை ரூ.20¾ கோடி பரிசுத்தொகையுடன், தரவரிசையில் முதல்முறையாக ‘நம்பர் ஒன்’ அரியணையிலும் ஏறுவார். இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி 2 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.