டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜப்பான் வீராங்கனை ஒசாகா ‘சாம்பியன்’ ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்தார் + "||" + Australian Open Tennis: Japan's Osaka 'champion' 'Number one' took place

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜப்பான் வீராங்கனை ஒசாகா ‘சாம்பியன்’ ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்தார்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜப்பான் வீராங்கனை ஒசாகா ‘சாம்பியன்’ ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்தார்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா, செக்குடியரசின் கிவிடோவாவை வீழ்த்தி பட்டத்தை வென்றதோடு ‘நம்பர் ஒன்’ இடத்தையும் பிடித்தார்.

மெல்போர்ன், 

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா, செக்குடியரசின் கிவிடோவாவை வீழ்த்தி பட்டத்தை வென்றதோடு ‘நம்பர் ஒன்’ இடத்தையும் பிடித்தார்.

ஆஸ்திரேலிய ஓபன்

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று அரங்கேறிய பெண்கள் ஒற்றையர் இறுதிசுற்றில் பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு)– நவோமி ஒசாகா (ஜப்பான்) ஆகியோர் பலப்பரீட்சையில் இறங்கினர்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இருவரும் தங்களது சர்வீஸ்களை மட்டுமே புள்ளிகளாக மாற்றியதால் முதல் செட் டைபிரேக்கருக்கு சென்றது. டைபிரேக்கரில் இந்த செட்டை ஒசாகா தனதாக்கினார். 2–வது செட்டிலும் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய ஒசாகா 5–3 என்று முன்னிலை பெற்று வெற்றியின் விளிம்புக்கு வந்தார். அதன் பிறகு சரிவில் இருந்து எழுச்சி பெற்ற கிவிடோவா ஒசாகாவின் மூன்று சாம்பியன்ஷிப் வாய்ப்புகளில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொண்டு வரிசையாக 4 கேம்களை வசப்படுத்தி இந்த செட்டை சொந்தமாக்கினார்.

ஒசாகா சாம்பியன்

இதையடுத்து கடைசி செட்டில் அனல் பறந்தது. இந்த செட்டில் எதிராளியின் 3–வது கேமில் சர்வீசை ஒசாகா முறியடித்தார். இதனால் ஆட்டத்தின் போக்கு ஒசாகாவுக்கு சாதகமாக திரும்பி வெற்றியும் அவருக்கு கனிந்தது. மணிக்கு அதிகபட்சமாக 192 கிலோமீட்டர் வேகத்தில் சர்வீஸ் போட்டு மிரட்டிய ஒசாகா முடிவில் 7–6 (7–2), 5–7, 6–4 என்ற செட் கணக்கில் கிவிடோவாவை சாய்த்து ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை முதல்முறையாக தட்டிச் சென்றார். இந்த ஆட்டம் 2 மணி 27 நிமிடங்கள் நடந்தது.

கடந்த ஆண்டு அமெரிக்க ஓபனை வென்ற போது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றிய முதல் ஜப்பானிய நாட்டவர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்திய 21 வயதான ஒசாகா அதைத் தொடர்ந்து இப்போது ஆஸ்திரேலிய ஓபனிலும் மகுடம் சூடி பிரமிக்க வைத்துள்ளார். முதல் பட்டத்தை வென்ற பிறகு அடுத்த போட்டியிலேயே இன்னொரு கிராண்ட்ஸ்லாமையும் ஒரு வீராங்கனை வெல்வது 2001–ம் ஆண்டுக்கு பிறகு (அப்போது அமெரிக்காவின் ஜெனீபர் கேபிரியாட்டி இச்சாதனையை செய்திருந்தார்) இதுவே முதல் முறையாகும்.

‘நம்பர் ஒன்’ இடம்

பட்டம் வென்ற ஒசாகாவுக்கு ரூ.20¾ கோடியும், கிவிடோவாவுக்கு ரூ.10½ கோடியும் பரிசுத்தொகையாக கிடைத்தது.

இந்த வெற்றியின் மூலம், உலக தரவரிசையில் 4–வது இடத்தில் இருந்த ஒசாகா ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்துள்ளார். நாளை வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் அவர் ‘நம்பர் ஒன்’ இடத்தை அலங்கரிப்பார். ஆசிய கண்டத்தை சேர்ந்த ஒருவர் தரவரிசையில் முதலிடத்தை பிடிப்பது இதுவே முதல் முறையாகும். கடந்த ஆண்டு இதே நாளில் தரவரிசையில் 72–வது இடத்தில் இருந்த ஒசாகா, நம்ப முடியாத அளவுக்கு முன்னேற்றம் கண்டு இருக்கிறார். 8–வது இடத்தில் இருந்த முன்னாள் விம்பிள்டன் சாம்பியனான கிவிடோவா தரவரிசையில் 2–வது இடத்தை பெறுகிறார்.

ஜோகோவிச்–நடால்

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் ‘நம்பர் ஒன்’ வீரரும், 6 முறை சாம்பியனுமான நோவக் ஜோகோவிச்சும் (செர்பியா), 2–ம் நிலை வீரரும், 2009–ம் ஆண்டு சாம்பியனுமான ரபெல் நடாலும் (ஸ்பெயின்) மோதுகிறார்கள். இவர்கள் இருவரும் இதுவரை 52 முறை நேருக்கு நேர் மோதியிருக்கிறார்கள். இதில் 27–ல் ஜோகோவிச்சும், 25–ல் நடாலும் வெற்றி கண்டுள்ளனர்.

வலிமைவாய்ந்த வீரர்கள் மல்லுகட்டுவதால் இந்த மோதல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி டென்2 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


ஆசிரியரின் தேர்வுகள்...