இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ்: இந்திய வீரர் குணேஸ்வரன் அசத்தல் வெற்றி


இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ்: இந்திய வீரர் குணேஸ்வரன் அசத்தல் வெற்றி
x
தினத்தந்தி 10 March 2019 11:00 PM GMT (Updated: 10 March 2019 7:04 PM GMT)

இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த குணேஸ்வரன் முன்னணி வீரர் பாசிலாஷ்விலியை வீழ்த்தி அசத்தினார்.

இன்டியன்வெல்ஸ், 

இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த குணேஸ்வரன் முன்னணி வீரர் பாசிலாஷ்விலியை வீழ்த்தி அசத்தினார்.

குணேஸ்வரன் அபாரம்

இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் தகுதி நிலை வீரரும், தரவரிசையில் 97–வது இடம் வகிப்பவருமான இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், 18–ம் நிலை வீரர் நிகோலாஸ் பாசிலாஷ்விலியை (ஜார்ஜியா) எதிர்கொண்டார். 2 மணி 32 நிமிடங்கள் நடந்த பரபரப்பான இந்த ஆட்டத்தில் குணேஸ்வரன் 6–4, 6–7 (6), 7–6 (4) என்ற செட் கணக்கில் பாசிலாஷ்விலிக்கு அதிர்ச்சி அளித்தார். 10 ஏஸ் சர்வீஸ்கள் வீசி மிரட்டிய சென்னையைச் சேர்ந்த குணேஸ்வரன் 3–வது சுற்றில் ‘சர்வீஸ்’ போடுவதில் வல்லவரான 40 வயதான இவா கார்லோவிச்சுடன் (குரோஷியா) மோத இருக்கிறார். 2–வது சுற்று வெற்றியின் மூலம் 29 வயதான குணேஸ்வரனுக்கு ரூ.34 லட்சம் பரிசுத்தொகையும், 45 தரவரிசை புள்ளி கிடைப்பதும் உறுதியாகியுள்ளது.

மற்றொரு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரும், 5 முறை சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 7–6 (2), 6–2 என்ற நேர் செட்டில் பிஜோர்ன் பிராடாங்லோவை (அமெரிக்கா) வெளியேற்றி 3–வது சுற்றுக்கு முன்னேறினார். இன்டியன்வெல்ஸ் டென்னிசில் அவரது 50–வது வெற்றியாக இது அமைந்தது. 1000 தரவரிசை புள்ளிகளை வழங்கும் ஒரு தொடரில் அவர் 50 வெற்றிகளை எட்டுவது இதுவே முதல் முறையாகும்.

இரட்டையர் பிரிவின் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, கனடாவின் டெனிஸ் ‌ஷபோவலோவ் ஜோடி 6–4, 6–4 என்ற நேர் செட்டில் ஜாமி முர்ரே (இங்கிலாந்து)– புருனோ சோரஸ் (பிரேசில்) இணையை வென்றது.

பழிதீர்த்த ஒசாகா

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2–வது சுற்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான நவோமி ஒசாகா (ஜப்பான்) 6–3, 6–4 என்ற நேர் செட்டில் கிறிஸ்டினா மிலாடெனோவிச்சை (பிரான்ஸ்) தோற்கடித்தார். இதன் மூலம் கடந்த 2 வாரத்திற்கு முன்பு துபாய் சாம்பியன்ஷிப் போட்டியில் மிலாடெனோவிச்சிடம் அடைந்த தோல்விக்கு ஒசாகா பழிதீர்த்துக் கொண்டார்.

முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 5–7, 6–2, 5–7 என்ற செட் கணக்கில் எகடெரினா அலெக்சாண்ட்ரோவிடம் (ரஷியா) அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), அரினா சபலென்கா (பெலாரஸ்), பெலின்டா பென்சிச் (சுவிட்சர்லாந்து) உள்ளிட்டோரும் 3–வது சுற்றுக்கு முன்னேறினர்.


Next Story