இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ்: 3-வது சுற்றில் செரீனா வில்லியம்ஸ் பாதியில் விலகல்


இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ்: 3-வது சுற்றில் செரீனா வில்லியம்ஸ் பாதியில் விலகல்
x
தினத்தந்தி 11 March 2019 11:15 PM GMT (Updated: 11 March 2019 10:20 PM GMT)

இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் உடல் நலக்குறைவு காரணமாக 3-வது சுற்றில் பாதியில் விலகினார்.

இன்டியன்வெல்ஸ்,

இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), உலக தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள கார்பின் முகுருஜாவை (ஸ்பெயின்) சந்தித்தார்.

முதல் செட்டில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற செரீனா வில்லியம்ஸ் அதன் பிறகு விளையாட முடியாமல் திணறினார். தொடர்ந்து 6 கேம்களை தனதாக்கிய கார்பின் முகுருஜா முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் சொந்தமாக்கினார். 2-வது செட்டில் கார்பின் முகுருஜா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது செரீனா வில்லியம்ஸ் போட்டியில் இருந்து விலகினார். இதனால் முகுருஜா 4-வது சுற்றுக்கு முன்னேறினார். வைரஸ் காய்ச்சல் காரணமாக செரீனா வில்லியம்ஸ் விலகியதாக தெரிவிக்கப்பட்து.

போட்டியில் இருந்து வெளியேறிய செரீனா வில்லியம்ஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘நான் நல்ல தொடக்கம் கண்டாலும், சிறந்த உடல் தகுதியுடன் இந்த ஆட்டத்தில் களம் காணவில்லை. ஒவ்வொரு நிமிடமும் எனக்கு தலைச்சுற்றலும், சோர்வும் அதிகரித்தது. சிறந்த உடல் நிலைக்கு திரும்புவதிலும், மியாமி போட்டிக்கு தயாராகுவதிலும் கவனம் செலுத்துவேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் 7-6 (7-3), 6-3 என்ற நேர்செட்டில் தகுதி சுற்று வீராங்கனையான காத்ரினா கோஸ்லாவாவை (உக்ரைன்) தோற்கடித்து 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்ற ஆட்டங்களில் கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து), கியாங் வாங் (சீனா), பியான்சா (கனடா) ஆகியோர் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 6-1, 6-1 என்ற நேர்செட்டில் வைல்டு கார்டு வீரரான அமெரிக்காவின் ஜாரெட் டொனால்ட்சனை விரட்டியடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற ரபெல் நடாலுக்கு 72 நிமிடமே தேவைப்பட்டது.

இன்னொரு ஆட்டத்தில் சுவிடர்சர்லாந்தை சேர்ந்த முன்னணி வீரரான ரோஜர் பெடரர் 6-1, 7-5 என்ற நேர்செட்டில் ஜெர்மனியின் பீட்டர் கோஜோவிச்சை வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்ற ஆட்டங்களில் நிஷிகோரி (ஜப்பான்), ஜான் இஸ்னர் (அமெரிக்கா), மரின் சிலிச் (குரோஷியா), கரென் கச்சனோவ் (ரஷியா), கைல் எட்முன்ட் (இங்கிலாந்து), குய்டோ பெல்லா (அர்ஜென்டினா), டேனில் மெட்விடேவ் (ரஷியா) ஆகியோர் வெற்றி கண்டனர். டேவிட் கோபின் (பெல்ஜியம்), பாபி போக்னினி (இத்தாலி) ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் தோல்வி கண்டு வெளியேறினார்கள்.


Next Story