டென்னிஸ்

இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: 3-வது சுற்றில் தமிழக வீரர் குணேஸ்வரன் தோல்வி + "||" + Indianwells tennis: In the 3rd round, Tamil Nadu player Gunasewaran failed

இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: 3-வது சுற்றில் தமிழக வீரர் குணேஸ்வரன் தோல்வி

இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: 3-வது சுற்றில் தமிழக வீரர் குணேஸ்வரன் தோல்வி
இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்றில் தமிழக வீரர் குணேஸ்வரன் தோல்வி அடைந்து வெளியேறினார்.
இன்டியன்வெல்ஸ்,

இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 97-வது இடம் வகிக்கும் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், 89-ம் நிலை இவோ கார்லோவிச்சை (குரோஷியா) சந்தித்தார். முதல் இரு சுற்றில் முன்னணி வீரர்களை வீழ்த்தி வியப்பூட்டிய குணேஸ்வரன், இந்த சுற்றில் 40 வயதான கார்லோவிச்சிடம் தாக்குப்பிடிக்கவில்லை.


16 ஏஸ் சர்வீஸ்கள் போட்டு மிரட்டிய கார்லோவிச் 6-3, 7-6 (3) என்ற நேர் செட்டில் குணேஸ்வரனை தோற்கடித்து 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். 3-வது சுற்று வரை முன்னேறியதன் மூலம் சென்னையைச் சேர்ந்த 29 வயதான குணேஸ்வரனுக்கு ரூ.34 லட்சம் பரிசுத்தொகையும், 45 தரவரிசை புள்ளிகளும் கிடைத்தன.

மற்றொரு ஆட்டத்தில் 3-ம் நிலை வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 3-6, 1-6 என்ற நேர் செட் கணக்கில் சக நாட்டவர் ஜான் லினார்ட் ஸ்டிரப்பிடம் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார்.

ஆண்கள் இரட்டையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ் ஜோடி 4-6, 6-1, 8-10 என்ற செட் கணக்கில் போராடி நோவக் ஜோகோவிச் (செர்பியா)-பாபியோ போக்னினி (இத்தாலி) இணையிடம் வீழ்ந்தது.

பெண்கள் ஒற்றையர் பிரிவிலும் 3-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான நவோமி ஒசாகா (ஜப்பான்) 6-4, 6-2 என்ற நேர் செட்டில் டேனிலி காலின்சை (அமெரிக்கா) விரட்டியடித்தார். இதே போல் முன்னாள் நம்பர் ஒன் நட்சத்திரம் ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 3-6, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் தகுதி நிலை வீராங்கனை நடாலியா விக்லியான்ட்செவாவை (ரஷியா) வீழ்த்தி 4-வது சுற்றை எட்டினார்.

கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), சபலென்கா (பெலாரஸ்), பெலின்டா பென்சிச் (சுவிட்சர்லாந்து), வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) உள்ளிட்டோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.


ஆசிரியரின் தேர்வுகள்...