இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: அரைஇறுதியில் கெர்பர்-பென்சிச்


இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: அரைஇறுதியில் கெர்பர்-பென்சிச்
x
தினத்தந்தி 15 March 2019 11:54 PM GMT (Updated: 15 March 2019 11:54 PM GMT)

இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

இன்டியன்வெல்ஸ்,

இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 14-வது இடத்தில் உள்ள மிலோஸ் ராவ்னிக் (கனடா) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் செர்பியா வீரர் மியோமிர் கெச்மனோவிச்சை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் டொமினிக் திம்மை (ஆஸ்திரியா) எதிர்த்து ஆட வேண்டிய மான்பில்ஸ் (பிரான்ஸ்) காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார். இதனால் ஆடாமலேயே டொமினிக் திம் வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் நுழைந்தார்.

பெண்கள் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனைகளான ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி)-வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினார்கள். விறுவிறுப்பான இந்த மோதலில் கெர்பர் 7-6 (7-3), 6-3 என்ற நேர்செட்டில் வீனஸ் வில்லியம்சை வீழ்த்தி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். அதே சமயம் முன்னணி நட்சத்திரம் கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) 3-6, 6-4, 3-6 என்ற செட் கணக்கில் 23-ம் நிலை வீராங்கனையான பெலின்டா பென்சிச்சிடம் (சுவிட்சர்லாந்து) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். பென்சிச் தொடர்ச்சியாக பதிவு செய்த 12-வது வெற்றி இதுவாகும். பென்சிச் அரைஇறுதியில் கெர்பரை எதிர்கொள்கிறார்.

Next Story