டென்னிஸ்

உலக டென்னிஸ் தரவரிசையில் குணேஸ்வரன் 84-வது இடத்துக்கு முன்னேற்றம் + "||" + Gunnewaraan has improved to 84th in the World Tennis Rankings

உலக டென்னிஸ் தரவரிசையில் குணேஸ்வரன் 84-வது இடத்துக்கு முன்னேற்றம்

உலக டென்னிஸ் தரவரிசையில் குணேஸ்வரன் 84-வது இடத்துக்கு முன்னேற்றம்
உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 84-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.
பாரிஸ்,

உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச டென் னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் நோவக் ஜோகோவிச் (செர்பியா), ரபெல் நடால் (ஸ்பெயின்), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் தொடருகின்றனர்.


இன்டியன்வெல்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற டொமினிக் திம் (ஆஸ்திரியா) 4 இடங்கள் முன்னேறி 2-வது முறையாக 4-வது இடத்தை பிடித்துள்ளார். இறுதிப்போட்டியில் டொமினிக் திம்மிடம் தோல்வி கண்ட ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) ஒரு இடம் சரிந்து 5-வது இடத்தையும், ஜப்பான் வீரர் நிஷிகோரி ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்தையும், தென் ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் ஒரு இடம் சரிவை சந்தித்து 7-வது இடத்தையும், அர்ஜென்டினா வீரர் ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோ 3 இடம் சறுக்கி 8-வது இடத்தையும் பெற்றனர். அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் 9-வது இடத்திலும், கிரீஸ் வீரர் ஸ்டீபனோஸ் சிட்சிபாஸ் 10-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

இன்டியன்வெல்ஸ் போட்டியில் 3-வது சுற்றுக்குள் நுழைந்த இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 13 இடங்கள் ஏற்றம் கண்டு 84-வது இடத்தை பிடித்துள்ளார். இது அவரது சிறந்த தரவரிசையாகும். முழங்காலில் காயம் அடைந்து தேறி வரும் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி 36 இடங்கள் சரிந்து 207-வது இடத்தை பெற்றுள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் முதல்முறையாக யுகி பாம்ப்ரி டாப்-200 இடங்களுக்கு வெளியே தள்ளப்பட்டு இருக்கிறார். இந்திய வீரர்கள் ராம்குமார் ராமநாதன் 139-வது இடத்தையும், சகெத் மைனெனி 251-வது இடத்தையும், சசிகுமார் முகுந்த் 268-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் லியாண்டர் பெயஸ் 2 இடம் முன்னேறி 94-வது இடத்தையும், ரோகன் போபண்ணா 36-வது இடத்தையும், திவிஜ் சரண் 41-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா முதலிடத்தில் தொடருகிறார். செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தையும், சிமோனா ஹாலெப் (ருமேனியா) ஒரு இடம் சரிந்து 3-வது இடத்தையும், இன்டியன்வெல்ஸ் போட்டியில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 4 இடம் முன்னேறி 4-வது இடத்தையும், உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா ஒரு இடம் ஏற்றம் கண்டு 5-வது இடத்தையும், அமெரிக்க வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 2 இடம் சரிந்து 6-வது இடத்தையும், செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா 2 இடம் சறுக்கி 7-வது இடத்தையும், நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்டென்ஸ் ஒரு இடம் சரிந்து 8-வது இடத்தையும் பிடித்துள்ளனர். சபலெங்கா (பெலாரஸ்) 9-வது இடத்திலும், செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 10-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

இன்டியன்வெல்ஸ் பட்டத்தை வென்ற கனடா வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்கு 36 இடம் உயர்வு கண்டு 24-வது இடத்தை பிடித்துள்ளார். அவரது சிறந்த தரநிலை இதுவாகும். பெலின்டா பென்சிச் (சுவிட்சர்லாந்து) 3 இடம் முன்னேறி 20-வது இடத்தை பெற்றுள்ளார். இந்திய வீராங்கனைகள் அங்கிதா ரெய்னா 2 இடம் சரிந்து 168-வது இடத்தையும், கர்மான் தாண்டி 7 இடங்கள் முன்னேறி 203-வது இடத்தையும் தனதாக்கினார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. உலக டென்னிஸ் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி முதலிடம்
உலக டென்னிஸ் தரவரிசையில், ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி முதலிடத்தில் உள்ளனர்.