மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் சிமோனா ஹாலெப், கிவிடோவா கால்இறுதிக்கு தகுதி


மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் சிமோனா ஹாலெப், கிவிடோவா கால்இறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 26 March 2019 10:00 PM GMT (Updated: 26 March 2019 8:41 PM GMT)

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் சிமோனா ஹாலெப், கிவிடோவா ஆகியோர் கால்இறுதிக்கு தகுதி பெற்றனர்.

மியாமி, 

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் சிமோனா ஹாலெப், கிவிடோவா ஆகியோர் கால்இறுதிக்கு தகுதி பெற்றனர்.

வோஸ்னியாக்கி அதிர்ச்சி தோல்வி

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4–வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2–வது இடத்தில் உள்ள கிவிடோவா (செக்குடியரசு) 6–3, 6–3 என்ற நேர்செட்டில் பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியாவை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா 2–6, 6–3, 7–5 என்ற செட் கணக்கில் புதின்சேவாவை (கஜகஸ்தான்) வீழ்த்தி கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். இன்னொரு ஆட்டத்தில் சீன தைபே வீராங்கனை ஹிக் சு வெய் 6–3, 6–7 (0–7), 6–2 என்ற செட் கணக்கில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான கரோலினா வோஸ்னியாக்கிக்கு (டென்மார்க்) அதிர்ச்சி அளித்து முதல்முறையாக கால்இறுதிக்குள் நுழைந்தார். இந்த ஆட்டம் 2 மணி 15 நிமிடம் நீடித்தது.

கால்இறுதியில் சிமோனா ஹாலெப்

மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6–3, 6–3 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை வீனஸ் வில்லியம்சை சாய்த்து கால்இறுதிக்கு முன்னேறினார். மற்ற ஆட்டங்களில் வாங் கியாங் (சீனா), அனெட் கோன்டாவெய்ட் (எஸ்தோனியா), ஆஷ்லிக் பார்டி (ஆஸ்திரேலியா), மார்கெடா வான்ட்ரோசோவா (செக்குடியரசு) ஆகியோர் வெற்றி பெற்று கால்இறுதிக்கு தகுதி பெற்றனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3–வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 7–5, 6–3 என்ற நேர்செட்டில் பிலிப் காஜினோவிச்சை (செர்பியா) விரட்டியடித்து 4–வது சுற்றுக்குள் நுழைந்தார்.

கெவின் ஆண்டர்சன் வெற்றி

மற்ற ஆட்டங்களில் கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), கிரிகோர் டிமிட்ரோவ் (பல்கேரியா), டானில் மெட்விடேவ் (ரஷியா), சிட்சிபாஸ் (கிரீஸ்), டேவிட் கோபின் (பெல்ஜியம்) ஆகியோர் வெற்றி கண்டு 4–வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தனர்.


Next Story