மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் சிமோனா ஹாலெப் அரைஇறுதிக்கு முன்னேற்றம்


மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் சிமோனா ஹாலெப் அரைஇறுதிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 28 March 2019 10:15 PM GMT (Updated: 28 March 2019 8:33 PM GMT)

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் அரைஇறுதிக்கு முன்னேறினார்.

மியாமி, 

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் அரைஇறுதிக்கு முன்னேறினார்.

அரைஇறுதியில் பிளிஸ்கோவா

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 3–வது இடத்தில் உள்ள சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6–4, 7–5 என்ற நேர்செட்டில் 18–ம் நிலை வீராங்கனையான வாங் குயாங்கை (சீனா) வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 1 மணி 37 நிமிட நேரம் நடந்தது.

மற்றொரு கால்இறுதியில் தரவரிசையில் 7–வது இடத்தில் இருக்கும் கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) 6–3, 6–4 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீராங்கனை வான்ட்ரோசோவாவை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தார். இந்த வெற்றியை பெற பிளிஸ்கோவாவுக்கு 80 நிமிடமே தேவைப்பட்டது. அரைஇறுதியில் சிமோனா ஹாலெப்–கரோலினா பிளிஸ்கோவா மோதுகிறார்கள்.

கனடா வீரர் சாதனை

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் தகுதி சுற்று மூலம் முன்னேறிய 18 வயதான கனடா வீரர் பெலிக்ஸ் அகெர் 7–6 (7–3), 6–2 என்ற நேர்செட்டில் 13–ம் நிலை வீரரான போர்னா கோரிச்சை (குரோஷியா) வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். இந்த ஆட்டம் 1 மணி 48 நிமிடம் நடந்தது. 35 ஆண்டு கால மியாமி ஓபன் போட்டி வரலாற்றில் அரைஇறுதிக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற பெருமையை பெலிக்ஸ் அகெர் பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஜான் இஸ்னர் (அமெரிக்கா) 1 மணி 45 நிமிடத்தில் 7–6 (7–1), 7–6 (7–5) என்ற நேர்செட்டில் ஸ்பெயின் வீரர் பாவ்டிஸ்டா அகுட்டை வீழ்த்தி அரைஇறுதியை எட்டினார். அரைஇறுதியில் ஜான் இஸ்னர்–பெலிக்ஸ் அகெர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

ரோகன் போபண்ணா ஜோடி வெளியேற்றம்

ஆண்கள் இரட்டையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)–டெனிஸ் ‌ஷபோவாலோவ் (கனடா) ஜோடி 3–6, 4–6 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் பாப் பிரையன்–மைக் பிரையன் இணையிடம் தோல்வி கண்டு வெளியேறியது.


Next Story