மியாமி ஓபன் டென்னிஸ்: ஆஷ்லி பார்ட்டி ‘சாம்பியன்’ ரூ.9¼ கோடியை பரிசாக அள்ளினார்


மியாமி ஓபன் டென்னிஸ்: ஆஷ்லி பார்ட்டி ‘சாம்பியன்’ ரூ.9¼ கோடியை பரிசாக அள்ளினார்
x
தினத்தந்தி 31 March 2019 9:30 PM GMT (Updated: 31 March 2019 7:37 PM GMT)

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

மியாமி,

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா), முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) எதிர்கொண்டார். 15 ஏஸ் சர்வீஸ் போட்டு மிரட்டிய ஆஷ்லி பார்ட்டி 7–6 (1), 6–3 என்ற நேர் செட் கணக்கில் பிளிஸ்கோவாவை சாய்த்து சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். 22 வயதான ஆஷ்லி பார்ட்டி, தனது டென்னிஸ் வாழ்க்கையில் வென்ற முதல் பட்டம் இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் அவருக்கு ரூ.9¼ கோடி பரிசுத்தொகையும், தரவரிசைக்குரிய ஆயிரம் புள்ளிகளும் கிடைத்தன. தோல்வி அடைந்த பிளிஸ்கோவா ரூ.4¾ கோடியை பரிசுத்தொகையாக பெற்றார். இன்று வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் ஆஷ்லி பார்ட்டி 11–வது இடத்தில் இருந்து 9–வது இடத்துக்கு முன்னேறுகிறார். ஆஸ்திரேலிய வீராங்கனை ஒருவர் டாப்–10 இடத்திற்குள் நுழைவது 2013–ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

ஆஷ்லி பார்ட்டி 2014–ம் ஆண்டு இறுதியில் டென்னிசுக்கு முழுக்கு போட்டு விட்டு இரண்டு ஆண்டுகள் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார். அதன் பிறகு 2016–ம் ஆண்டில் மறுபடியும் டென்னிஸ் களத்திற்கு திரும்பி முன்னணி வீராங்கனைகளில் ஒருவராக உருவெடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story