டென்னிஸ்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம் 12-வது முறையாக பட்டம் வெல்வாரா நடால்? + "||" + French Open tennis tournament Start Today

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம் 12-வது முறையாக பட்டம் வெல்வாரா நடால்?

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம் 12-வது முறையாக பட்டம் வெல்வாரா நடால்?
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடங்குகிறது. 12-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் நடால் ஆயத்தமாகி உள்ளார்.
பாரீஸ்,

ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வருகிற 9-ந்தேதி வரை நடக்கிறது. களிமண் தரையில் நடத்தப்படும் பிரெஞ்ச் ஓபனில் எப்போதும் கில்லாடியாக திகழும் ஸ்பெயின் வீரர் ரபெல் நடாலே இந்த முறையும் வாகை சூடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஏற்கனவே 11 முறை பிரெஞ்ச் ஓபனை உச்சிமுகர்ந்து யாரும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கும் நடால் தனது முதலாவது சுற்றில் தகுதிநிலை வீரரான யானிக் ஹான்ப்மானை (ஜெர்மனி) சந்திக்கிறார்.


நடாலுக்கு, ‘நம்பர் ஒன்’ வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) தான் கடும் சவாலாக இருப்பார். 2018-ம் ஆண்டில் விம்பிள்டன், அமெரிக்க ஓபன், 2019-ல் ஆஸ்திரேலிய ஓபனை கைப்பற்றி இருக்கும் ஜோகோவிச், இங்கும் பட்டம் வென்றால் ‘ஓபன் எரா’ வரலாற்றில் வரிசையாக 4 கிராண்ட்ஸ்லாமையும் இரண்டு முறை வென்ற முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார். சமீபத்தில் இத்தாலி ஓபன் இறுதிசுற்றில் நடாலிடம் தோற்று இருந்த ஜோகோவிச் அதற்கு பழிதீர்க்கும் உத்வேகத்துடன் உள்ளார். ஜோகோவிச் முதல் சுற்றில் ஹூபர்ட் ஹர்காசை (போலந்து) சந்திக்கிறார்.

2015-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக பிரெஞ்ச் ஓபனுக்கு திரும்பியிருக்கும் 20 கிராண்ட்ஸ்லாம் வென்ற சாதனையாளரான ரோஜர் பெடரருக்கு (சுவிட்சர்லாந்து) களிமண் தரை போட்டி என்றாலே கொஞ்சம் அலர்ஜி தான். அதனால் அவர் கோலோச்சுவது சந்தேகம் தான். பெடரர் முதல் சுற்றில் லோரென்ஜோ சோனிகோவை (இத்தாலி) எதிர்கொள்கிறார்.

இவர்களோடு, சிட்சிபாஸ் (கிரீஸ்), டொமினிக் திம் (ஆஸ்திரியா), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), நிஷிகோரி (ஜப்பான்), போக்னினி (இத்தாலி), மரின் சிலிச் (குரோஷியா) ஆகிய நட்சத்திர வீரர்களும் களத்தில் வரிந்து கட்டி நிற்கிறார்கள்.

ஒற்றையர் பிரிவில் பங்கேற்கும் ஒரே இந்தியரான தரவரிசையில் 86-வது இடம் வகிக்கும் சென்னையைச் சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன் முதல் ரவுண்டில் 92-ம் நிலை வீரரான ஹூகோ டெலியனுடன் (பொலிவியா) இன்று பலப்பரீட்சை நடத்துகிறார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவிலும் பட்டம் வெல்வதில் முன்னணி வீராங்கனைகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அமெரிக்க ஓபன், ஆஸ்திரேலிய ஓபனை வென்றவரான ‘நம்பர் ஒன்’ புயல் நவோமி ஒசாகா (ஜப்பான்) பிரெஞ்ச் ஓபனிலும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. அவர் முதல் சுற்றில் அன்ன கரோலினா சிமிட்லோவாவுடன் (சுலோவக்கியா) மோதுகிறார்.

நடப்பு சாம்பியனும், 3-ம் நிலை வீராங்கனையுமான சிமோனா ஹாலெப் (ருமேனியா), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு), ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), ஸ்விடோலினா (உக்ரைன்), வோஸ்னியாக்கி (டென்மார்க்), முகுருஜா (ஸ்பெயின்) உள்ளிட்டோரும் கோதாவில் குதித்து இருப்பதால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.331 கோடியாகும். இதில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வோருக்கு தலா ரூ.18 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும். அத்துடன் 2 ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் கிடைக்கும். இறுதிப்போட்டியில் தோல்வி அடையும், வீரர், வீராங்கனை ரூ.9 கோடியை பரிசாக பெறுவார்கள்.

முதல் நாளில் பெடரர், சிட்சிபாஸ், பிளிஸ்கோவா, கெர்பர் உள்ளிட்டோர் களம் இறங்குகிறார்கள். இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் ஆட்டங்களை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.