பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: 3–வது சுற்றில் நடால், பெடரர்


பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: 3–வது சுற்றில் நடால், பெடரர்
x
தினத்தந்தி 29 May 2019 10:45 PM GMT (Updated: 29 May 2019 10:41 PM GMT)

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் நடால், ரோஜர் பெடரர் 3–வது சுற்றுக்கு முன்னேறினர்.

பாரீஸ், 

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் நடால், ரோஜர் பெடரர் 3–வது சுற்றுக்கு முன்னேறினர்.

நடால்–பெடரர்

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டங்கள் நடந்தன.

ஆண்கள் பிரிவில் 11 முறை சாம்பியனும், 2–ம் நிலை வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்), ஜெர்மனி தகுதி நிலை வீரர் யானிக் மடெனை எதிர்கொண்டார். ‘களிமண் தரை’ போட்டியின் ராஜா என்று வர்ணிக்கப்படும் நடால் வழக்கம் போல் ஆதிக்கம் செலுத்தியதோடு 6–1, 6–2, 6–4 என்ற நேர் செட்டில் யானிக்கை வீழ்த்தி 3–வது சுற்றுக்கு முன்னேறினார். 32 வயதான நடால் அடுத்து பெல்ஜியம் வீரர் டேவிட் கோபினுடன் மோதுகிறார்.

மற்றொரு ஆட்டத்தில் 6–ம் நிலை வீரர் சிட்சிபாஸ் (கிரீஸ்) 4–6, 6–0, 6–3, 7–5 என்ற செட் கணக்கில் ஹூகோ டெலியனை (பொலிவியா) தோற்கடித்தார். இதே போல் முன்னாள் நம்பர் ஒன் வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6–4, 6–3, 6–4 என்ற நேர் செட்டில் ஆஸ்கர் ஓட்டியை (ஜெர்மனி) வீழ்த்தி 3–வது சுற்றை எட்டினார். வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), நிஷிகோரி (ஜப்பான்) ஆகியோரும் 2–வது சுற்றை வெற்றிகரமாக கடந்தனர்.

முகுருஜா அபாரம்

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2016–ம் ஆண்டு சாம்பியனான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 6–4, 6–1 என்ற நேர் செட் கணக்கில் ஜோஹன்னா லார்சனை (சுவீடன்) சாய்த்து 3–வது சுற்றை எட்டினார். தரவரிசையில் 2–வது இடத்தில் உள்ள கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) தன்னை எதிர்த்த கிறிஸ்டினா குகோவை (சுலோவக்கியா) 6–2, 6–2 என்ற நேர் செட்டில் விரட்டியடித்தார். பிளிஸ்கோவா வெறும் 56 நிமிடங்களில் இந்த வெற்றியை சுவைத்தார்.

மற்றொரு முன்னணி வீராங்கனை எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) விளையாடாமலேயே 3–வது சுற்றுக்கு முன்னேறினார். அவருடன் மோத இருந்த சக நாட்டவரான கத்ரினா கோஸ்லோவா உடல் நலக்குறைவால் விலகியதால் ஸ்விடோலினா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்திய வீரர் வெற்றி

முதல் சுற்றில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பருக்கு அதிர்ச்சி அளித்த ரஷிய வீராங்கனை அனஸ்டசியா பொட்டாபோவா 2–வது சுற்றில் 4–6, 0–6 என்ற நேர் செட்டில் செக்குடியரசின் வோன்டோரோசோவாவிடம் வீழ்ந்தார். அதே சமயம் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), செவஸ்தோவா (லாத்வியா), கனேபி (எஸ்தோனியா), சுவாரஸ் நவரோ (ஸ்பெயின்) உள்ளிட்டோர் 2–வது சுற்றில் வெற்றி கண்டனர்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் திவிஜ் சரண், பிரேசில் வீரர் மார்செலோ டெமோலினருடன் கைகோர்த்து களம் இறங்கினார். இவர்கள் தங்களது முதலாவது சுற்றில் 6–3, 4–6, 6–2 என்ற செட் கணக்கில் ராபர்ட் லின்ஸ்டெட் (சுவீடன்)– மார்டோன் புசோவிக்ஸ் (ஹங்கேரி) இணையை தோற்கடித்தனர்.


Next Story