பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் 4–வது சுற்றுக்கு ஜோகோவிச் முன்னேற்றம் நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி


பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் 4–வது சுற்றுக்கு ஜோகோவிச் முன்னேற்றம் நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி
x
தினத்தந்தி 1 Jun 2019 10:30 PM GMT (Updated: 1 Jun 2019 9:07 PM GMT)

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் 4–வது சுற்றுக்கு முன்னேறினார். நம்பர் ஒன் வீராங்கனை நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

பாரீஸ்,

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் 4–வது சுற்றுக்கு முன்னேறினார். நம்பர் ஒன் வீராங்கனை நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

ஜோகோவிச் வெற்றி

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3–வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் உள்ள நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6–3, 6–3, 6–2 என்ற நேர்செட்டில் 147–ம் நிலை வீரரான சால்வாடோர் காருசோவை (இத்தாலி) தோற்கடித்து 4–வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 5–வது இடத்தில் உள்ள அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 6–4, 6–2, 4–6, 1–6, 6–2 என்ற செட் கணக்கில் துசன் லாஜோவிச்சை (செர்பியா) வீழ்த்தி 4–வது சுற்றுக்குள் நுழைந்தார். இந்த ஆட்டம் 3 மணி 3 நிமிடம் நீடித்தது. இன்னொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) 7–6 (7–5), 7–6 (7–4), 7–6 (10–8) என்ற செட் கணக்கில் கிரிகோர் டிமிட்ரோவை (பல்கேரியா) வீழ்த்தி 4–வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இது வாவ்ரிங்கா பெற்ற 500–வது வெற்றியாகும். மற்ற ஆட்டங்களில் சிட்சிபாஸ் (கிரீஸ்), பாபி போக்னினி (இத்தாலி) ஆகியோர் வெற்றி கண்டனர்.

ஒசாகா அதிர்ச்சி தோல்வி

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3–வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான்), 42–ம் நிலை வீராங்கனையான கேத்ரினா சினியகோவாவை (செக்குடியரசு) எதிர்கொண்டார். 1 மணி 17 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் நவோமி ஒசாகா 4–6, 2–6 என்ற நேர்செட்டில் கேத்ரினாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். இதன் மூலம் அமெரிக்க ஓபன் மற்றும் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்ற நவோமி ஒசாகா தொடர்ச்சியாக 3–வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6–2, 6–1 என்ற நேர்செட்டில் உக்ரைன் வீராங்கனை லிசி சுரென்கோவாவை 55 நிமிடத்தில் தோற்கடித்து 4–வது சுற்றுக்கு முன்னேறினார். இன்னொரு ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் 6–3, 6–7 (5–7), 6–4 என்ற செட் கணக்கில் அன்னா பிளிஸ்கோவாவை (ரஷியா) வீழ்த்தினார்.

லியாண்டர் பெயஸ் ஜோடி வெளியேற்றம்

ஆண்கள் இரட்டையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் லியாண்டர் பெயஸ் (இந்தியா)–பெனோய்ட் பேர் (பிரான்ஸ்) ஜோடி 0–6, 6–4, 3–6 என்ற செட் கணக்கில் கொலம்பியாவின் ராபர்ட் பராக்–ஜூவான் செபாஸ்டியன் கபால் இணையிடம் தோல்வி கண்டு நடையை கட்டியது.


Next Story