பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் பெடரர், நடால்


பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் பெடரர், நடால்
x
தினத்தந்தி 2 Jun 2019 10:00 PM GMT (Updated: 2 Jun 2019 8:01 PM GMT)

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்கள் ரோஜர் பெடரர், நடால் கால்இறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

பாரீஸ்,

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்கள் ரோஜர் பெடரர், நடால் கால்இறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

பெடரர்–நடால்

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று 4–வது சுற்று ஆட்டங்கள் நடந்தன.

ஆண்கள் பிரிவில் 3–ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6–2, 6–3, 6–3 என்ற நேர் செட் கணக்கில் லியோனர்டோ மேயரை (அர்ஜென்டினா) வீழ்த்தி பிரெஞ்ச் ஓபனில் 12–வது முறையாக கால்இறுதிக்குள் நுழைந்தார். அத்துடன் 1991–ம் ஆண்டுக்கு பிறகு கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் அதிக வயதில் கால்இறுதியை எட்டிய வீரர் என்ற பெருமையையும் 37 வயதான பெடரர் பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் 11 முறை சாம்பியனும், 2–ம் நிலை வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6–2, 6–3, 6–3 என்ற நேர் செட்டில் ஜூவான் இக்னாசியா லோன்ட்ரோவை (அர்ஜென்டினா) பந்தாடினார். இங்கு நடால் பெற்ற 90–வது வெற்றி இதுவாகும்.

ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3–வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ருமேனியாவின் மாரிஸ் கோபில் கூட்டணி 6–1, 5–7, 6–7 (8–10) என்ற செட் கணக்கில் செர்பியாவின் லாஜோவிச்–டிப்சரேவிச் இணையிடம் போராடி வீழ்ந்தது.

ஹோன்டா வெற்றி

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்தின் ஜோகன்னா ஹோன்டா 6–2, 6–4 என்ற நேர் செட்டில் டோனா வெகிச்சை (குரோஷியா) வெளியேற்றி கால்இறுதிக்கு முன்னேறினார். இதே போல் வோன்ரோவ்சோவா (செக்குடியரசு) 6–2, 6–0 என்ற நேர் செட்டில் செவஸ்தோவாவையும் (லாத்வியா), பெட்ரா மார்டிச் (குரோஷியா) 5–7, 6–2, 6–4 என்ற செட் கணக்கில் கனேபியையும் (எஸ்தோனியா) தோற்கடித்தனர்.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த 3–வது சுற்று ஆட்டம் ஒன்றில் 23 கிராண்ட்ஸ்லாம் வென்ற ஜாம்பவனான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 2–6, 5–7 என்ற நேர் செட்டில் சக நாட்டவரான 20 வயது நிரம்பிய சோபியா கெனிடம் வீழ்ந்தார். 2017–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெண் குழந்தையை பெற்றெடுத்த செரீனா வில்லியம்ஸ் அதன் பிறகு எந்த கிராண்ட்ஸ்லாமும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story