டென்னிஸ்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஜோகோவிச் கால்இறுதிக்கு முன்னேற்றம் + "||" + French Open Tennis Jokovic progressed to quarterfinals

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஜோகோவிச் கால்இறுதிக்கு முன்னேற்றம்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஜோகோவிச் கால்இறுதிக்கு முன்னேற்றம்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பியா வீரர் ஜோகோவிச் கால்இறுதிக்கு முன்னேறினார்.
பாரீஸ்,

கிராண்ட்ஸ்லாம் போட்டி அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா), ஜெர்மனி வீரர் ஜான் லினார்ட்டை எதிர்கொண்டார்.


1 மணி 33 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-3, 6-2, 6-2 என்ற நேர்செட்டில் ஜான் லினார்ட்டை எளிதில் தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் பிரெஞ்ச் ஓபன் போட்டியில் தொடர்ச்சியாக 10 முறை கால்இறுதிக்கு தகுதி பெற்ற முதல் வீரர் என்ற பெருமையை ஜோகோவிச் தனதாக்கினார். இந்த ஆண்டில் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இதுவரை ஜோகோவிச் ஒரு செட்டை கூட இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள டொமினிக் திம் (ஆஸ்திரியா) 6-4, 6-4, 6-2 என்ற நேர்செட்டில் 17-ம் நிலை வீரரான மான்பில்சை (பிரான்ஸ்) தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள ஜப்பான் வீரர் நிஷிகோரி 6-2, 6-7 (8-10), 6-2, 6-7 (8-10), 7-5 என்ற செட் கணக்கில் 38-ம் நிலை வீரரான பெனோய்ட் பேரை (பிரான்ஸ்) போராடி வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார். இந்த ஆட்டம் 3 மணி 55 நிமிடம் நீடித்தது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் ஆஷ்லிக் பார்டி (ஆஸ்திரேலியா) 6-3, 3-6, 6-0 என்ற செட் கணக்கில் 35-ம் நிலை வீராங்கனையான சோபியா கெனினை (அமெரிக்கா) வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 14-வது இடத்தில் இருக்கும் மேடிசன் கீஸ் (அமெரிக்கா) 6-2, 6-4 என்ற நேர்செட்டில் 42-ம் நிலை வீராங்கனையான கேத்ரினா சினியகோவாவை (செக்குடியரசு) எளிதில் தோற்கடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-1, 6-0 என்ற நேர்செட்டில் போலந்து வீராங்கனை இகா வியாடெக்கை 45 நிமிடத்தில் தோற்கடித்து கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.