டென்னிஸ்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி ‘சாம்பியன்’ - ரூ.18 கோடியை பரிசாக அள்ளினார் + "||" + French Open Tennis: Australian woman ashleigh barty 'champion' - Rs. 18 crore as prize win

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி ‘சாம்பியன்’ - ரூ.18 கோடியை பரிசாக அள்ளினார்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி ‘சாம்பியன்’ - ரூ.18 கோடியை பரிசாக அள்ளினார்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில், ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி ‘சாம்பியன்’ பட்டம் வென்றார். இதன்மூலம் ரூ.18 கோடியை பரிசாக அள்ளினார்.
பாரீஸ்,

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த பட்டத்தை ஆஸ்திரேலியர் ஒருவர் வெல்வது 46 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.


‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் 8-ம் நிலை வீராங்கனையான ஆஷ்லி பார்டி (ஆஸ்திரேலியா), 38-ம் நிலை வீராங்கனையான மார்கெட்டா வோன்ட்ரோசோவாவுடன் (செக்குடியரசு) மோதினார்.முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதி சுற்றில் கால்பதித்த இருவரும் ஒருவித பதற்றத்துடனேயே மட்டையை சுழட்டினர். இதில் அனுபவம் வாய்ந்த ஆஷ்லி பார்டியின் கை முதல் புள்ளியில் இருந்தே ஓங்கியது. 70 நிமிடங்களில் வோன்ட்ரோசோவாவின் சவாலை முடிவுக்கு கொண்டு வந்த ஆஷ்லி பார்டி 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் மகுடத்தை சூடினார். பிரெஞ்ச் ஓபனை ஆஸ்திரேலிய வீராங்கனை ஒருவர் வெல்வது 1973-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

23 வயதான ஆஷ்லி பார்டி 2014-ம் ஆண்டில் டென்னிசில் இருந்து விலகி கிரிக்கெட் வீராங்கனையாக உருவெடுத்தார். பெண்களுக்கான பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக விளையாடிய அவர் 2016-ம் ஆண்டில் மறுபடியும் டென்னிஸ் களம் புகுந்து இப்போது சிகரத்தை எட்டியிருக்கிறார்.

இந்த வெற்றியின் மூலம் ஆஷ்லி பார்டி தரவரிசையில் 2-வது இடத்துக்கு முன்னேறுகிறார். அவருக்கு ரூ.18 கோடியும், 2-வது இடம் பிடித்த 19 வயதான வோன்ட்ரோசோவாவுக்கு ரூ.9 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

ஜோகோவிச் தோல்வி

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முந்தைய நாள் மழையால் பாதியில் நிறுத்தப்பட்ட ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா)- டொமினிக் திம் (ஆஸ்திரியா) இடையிலான அரைஇறுதி ஆட்டம் நேற்று தொடர்ந்து நடந்தது. இதில் கலக்கலாக ஆடிய டொமினிக் திம் 6-2, 3-6, 7-5, 5-7, 7-5 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். 3 முறை மழைகுறுக்கிட்ட இந்த ஆட்டம் 4 மணி 13 நிமிடங்கள் நீடித்தது. இதன் மூலம் தொடர்ச்சியாக 3 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றிருந்த ஜோகோவிச்சின் வீறுநடைக்கு அவர் முட்டுக்கட்டை போட்டார்.

தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் 25 வயதான டொமினிக் திம் இன்று நடக்கும் (இந்திய நேரப்படி மாலை 6.30 மணி) இறுதி ஆட்டத்தில் 11 முறை சாம்பியனான ரபெல் நடாலுடன் (ஸ்பெயின்) மோதுகிறார். கடந்த ஆண்டு இதே இறுதி ஆட்டத்தில் நடாலிடம் தோல்வி அடைந்த டொமினிக் திம் இந்த முறை பழிதீர்த்து தனது கிராண்ட்ஸ்லாம் கனவை நிறைவேற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.