சானியாவின் ஒலிம்பிக் திட்டம்


சானியாவின் ஒலிம்பிக் திட்டம்
x
தினத்தந்தி 22 Jun 2019 1:45 AM GMT (Updated: 21 Jun 2019 4:07 PM GMT)

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு என்று என்னிடம் ஒரு திட்டமும் இருக்கிறது என்று சானியா மிர்சா கூறியுள்ளார்.

ஐதராபாத்தில் உள்ள சானியா மிர்சாவின் வீட்டில் ஆனந்தம் விளையாடுகிறது.

சானியா- சோயிப் மாலிக் தம்பதியின் குட்டி வாரிசு இஸான், தனது முதல் ரம்ஜானை கொண்டாடி முடித்திருக்கிறான்.

அந்த மகிழ்வும் நிறைவும் இஸானின் புகழ்பெற்ற அம்மா உள்ளிட்ட அனைவர் முகத்திலும் வழிகிறது.

சானியாவின் பேட்டி...

கடந்த ரம்ஜான், உங்களுக்கு மிகவும் ஸ்பெஷல் ஆகிவிட்டது...

ஆம், நான் என் மகன் இஸானுடன் கொண்டாடும் முதல் ரம்ஜான் என்பதால், இயல்பாகவே அது ஸ்பெஷல் ஆகிவிட்டது. இஸானின் அம்மாவாக இருப்பதும், ஐதராபாத்தில் அவனுடன் ரம்ஜானை கொண்டாடியதும் அற்புதமான விஷயங்கள். ஒரே வேடிக்கையும் கொண்டாட்டமுமாக நாட்கள் கழிந்தன. சோயிப் தற்போது இங்கிலாந்தில் உலகக் கோப்பையில் விளையாடிக் கொண்டிருக்கிறார். நாங்கள் இடையிடையே அங்கு சென்று வந்தாலும், பெரும்பாலும் ஐதராபாத்தில்தான் இருக்கிறோம்.

நீங்கள், இஸானுக்கு ஒரு செல்லப்பெயர் சூட்டியிருக்கிறீர்களாமே?

ஆமாம். ஏழு மாதக் குழந்தையான அவன் ரொம்ப ரொம்பச் சுட்டி, அதேநேரம் மிகவும் புத்திசாலி. அவனுக்கு, அவனைச் சுற்றி நடப்பதெல்லாம் தெரியும். வார்த்தைகள் இல்லாமலே பிறருடன் தொடர்புகொள்ள கற்றுக்கொண்டிருக்கிறான். அது எப்படி என்றுதான் எனக்குப் புரியவில்லை! நிறையப் பேர் அவனை ‘இஸு’ என்று கூப்பிடுகிறார்கள். நண்பர்கள், விசிறிகள், அவனை இன்னும் நேரில் பார்த்திராதவர்கள் கூட வெகு இயல்பாக அந்தப் பெயரில்தான் அழைக்கிறார்கள். நான் அவனுக்கு நிறைய செல்லப் பெயர்கள் வைத்திருக்கிறேன். அவற்றில், ‘இஸி’, ‘லட்டு’ என்பதும் அடங்கும்.

அம்மாவான பின் உங்கள் வாழ்க்கை தலைகீழாக மாறியிருக்கிறதா?

ஆமாம். ஆனால் அது நல்லவிதமாகத்தான். அம்மாவானது, ஒரு நபராக நான் வளர உதவியிருக்கிறது என்று நினைக்கிறேன். சின்னச் சின்ன விஷயங்களும் கூட மாறியிருக்கின்றன. இப்போதெல்லாம் நான் என்னைப் பற்றி நினைப்பதில்லை. குழந்தையைச் சுற்றித்தான் எல்லாமே சுழல்கிறது. எல்லாமே இஸானை பற்றித்தான். அவன் என்ன விரும்புகிறான், என்ன சாப்பிடுகிறான், எப்போது சாப்பிடுகிறான்... இப்படி. ஆக, இயல்பாகவே நாம் பின்னுக்குப் போய்விடுகிறோம். அதேநேரம், எனக்கு நிறைய உதவிகள் கிடைப்பதையும் சொல்ல வேண்டும். எனது அன்புக்குரிய பலரும் ஆதரவாக இருப்பதால், இன்னும் எனக்கென்று நேரம் இருக்கிறது. நான் இதுவரை என் வாழ்நாளில் அனுபவித்ததிலேயே, தாய்மைதான் மிகவும் நிறைவான உணர்வு.

சமூக ஊடகத்திலும் இஸான் அதிகம் கவனிக்கப்படுகிறானே?

ஆமாம்... அங்கே அவனைக் கொண்டாடுகிறார்கள்! இயல்பாகவே, பொதுவெளியில் உள்ள இருவரின் குழந்தையாக அவனுக்கு நிறைய அன்பு கிடைக்கிறது. எனது மகன் குறித்த நிறைய கமெண்டுகளை நான் பெறுகிறேன். ஒன்றிரண்டு நாட்களுக்கு ஒருமுறை நான் அவனது படத்தைப் பதிவேற்றம் செய்யாவிட்டால், ‘தயவுசெய்து இஸானின் படத்தை அப்லோடு செய்ய முடியுமா?’, ‘நாங்கள் அவனின் புன்னகையைப் பார்க்கலாமா?’ என்று பலரும் வேண்டுகோள் விடுக்கிறார்கள். இஸான் ஒரு குழந்தை, அவனுக்கு எதுவும் தெரியாது என்றபோதும் அவன் மீது கொட்டப்படும் அன்பில் நாங்கள் கொஞ்சம் திணறித்தான் போயிருக்கிறோம்.

இஸானுடன் அவனது தந்தை சோயிப் அதிக நேரத்தைக் கழிக்கிறாரா? நீங்கள் துபாய்க்கும் ஐதராபாத்துக்கும் இடையே பறந்துகொண்டே இருக்கிறீர்களே?

நிச்சயமாக சோயிப்பால் அவர் விரும்பும் அளவுக்கு இஸானுடன் நேரத்தைக் கழிக்க முடியவில்லை. அதுவும் உலகக் கோப்பை நேரம் என்பதால் சொல்லவே வேண்டாம். அதனால்தான் நானும் இஸானும் சோயிப்புடனே பயணித்து ஒரு மாதிரி சமாளிக்க முயல்கிறோம். ஒரு குடும்பமாக நாங்கள் துபாயில் ஒன்றாக இருக்கிறோம். நாங்கள் எங்கள் நேரத்தை, பல்வேறு நாடுகளுக்கு இடையில் பகிர்ந்து கொண்டிருக்கிறோம்.

மகன் அதிக நேரத்தை எடுத்துக்கொள்வதால், டென்னிசுக்கு இரண்டாமிடம் கொடுத்துவிட்டீர்களா?

முழுக்க அப்படிச் சொல்ல முடியாது. சுமார் ஒன்றரை ஆண்டு இடைவெளிக்குப் பின், ஒரு மாதத்துக்கு முன்புதான் நான் மீண்டும் டென்னிஸ் விளையாட ஆரம்பித்திருக்கிறேன். தற்போது வாரத்தில் நான்கு நாட்கள் ஆடுகிறேன். எனக்கு உதவ தேவையான ஆட்கள் இருப்பதால், டென்னிசை நான் பின்னுக்குத் தள்ளிவிடவில்லை. இப்போது என் கையில் மகன் இருந்தாலும், ஏறக்குறைய தினமும் ஒன்றிரண்டு மணி நேரம் உடற்பயிற்சியிலும், டென்னிஸ் பயிற்சியிலும் ஈடுபடவே செய்கிறேன்.

இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஒரே இந்திய டென்னிஸ் வீராங்கனை நீங்கள். 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிதான் உங்களின் அடுத்த பெரிய இலக்கா?

எந்த டென்னிஸ் வீரர், வீராங்கனைக்கும் ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வதுதான் கனவாக இருக்கும். ஆக, நான் 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றிருப்பது அற்புதமான விஷயம். டென்னிஸ் வீராங்கனைகள் அல்லது விளையாட்டு வீராங்கனைகளாக நாங்கள் பேராசைக்காரர்கள். எனவே நான் இன்னும் நிறைய விரும்புகிறேன். நாம் சாதிக்க விரும்புவதற்கு ஓர் எல்லையே கிடையாது. ஆக, நாம் தொடர்ந்து விளையாட விரும்பினால், இன்னும் நிறைய வெல்ல வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும். மீண்டும் என்னால் போட்டிக்களத்துக்குத் திரும்ப முடியும், அதற்கு என் உடம்பு ஒத்துழைக்கும் என்று நம்புகிறேன். கடந்த காலத்தில் எனக்குப் பல பெரிய காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆக, எப்படிப் போகிறது என்று பார்க்கலாம். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு ஓராண்டு காலம் இருக்கிறது, அதற்கு என்று என்னிடம் ஒரு திட்டமும் இருக்கிறது. அது பலன் கொடுக்கும் என்று நம்புகிறேன். நாட்டுக்காக பதக்கம் வென்று கொடுப்பது, எப்போதுமே ஒரு பெரிய கனவு.

உங்களைப் பற்றி உருவாகும் திரைப்படம் பற்றி? உங்கள் வேடத்தில் யார் நடித்தால் சரியாக இருக்கும் என்று எண்ணுகிறீர்கள்?

என்னைப் பற்றிய திரைப்படம் பற்றி இரண்டொரு மாதங்களுக்கு முன்னால்தான் அறிவிக்கப்பட்டது. ஆக அது இன்னும் ஆரம்பநிலையில்தான் இருக்கிறது. இன்னும் நடிகர், நடிகையர் யார் என்பதெல்லாம் முடிவு செய்யப்படவில்லை. ஆனால் நாங்கள் எல்லோருமே இப்படம் குறித்து உற்சாகமாக இருக்கிறோம். நான் என்னைப் பற்றி, எனது பயணம் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். அதை சினிமா வடிவில் திரையில் காண்பதற்கு ஆவலாக இருக்கிறேன்.

Next Story