விம்பிள்டன் பட்டத்தை முதல்முறையாக வென்று ஹாலெப் சாதனை செரீனாவை வீழ்த்தி அசத்தல்


விம்பிள்டன் பட்டத்தை முதல்முறையாக வென்று ஹாலெப் சாதனை செரீனாவை வீழ்த்தி அசத்தல்
x
தினத்தந்தி 13 July 2019 10:00 PM GMT (Updated: 13 July 2019 8:47 PM GMT)

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலெப் நேர் செட்டில் செரீனா வில்லியம்சுக்கு அதிர்ச்சி அளித்து கோப்பையை தட்டிச்சென்றார்.

லண்டன், 

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலெப் நேர் செட்டில் செரீனா வில்லியம்சுக்கு அதிர்ச்சி அளித்து கோப்பையை தட்டிச்சென்றார்.

விம்பிள்டன் டென்னிஸ்

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற போட்டிகளில் மிகவும் உயரியதும், கவுரவமுமான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனைகள் செரீனா வில்லியம்சும் (அமெரிக்கா), சிமோனா ஹாலெப்பும் (ருமேனியா) மல்லுகட்டினர்.

அனுபவம் வாய்ந்த செரீனாவை தனது அதிரடியான ஷாட்டுகள் மூலம் மிரள வைத்த ஹாலெப் முதல் செட்டில் வரிசையாக 4 புள்ளிகளை வசப்படுத்தினார். அதன் பிறகு செரீனா 2 புள்ளி எடுத்த போதிலும் ஹாலெப்பின் ஆதிக்கத்தை தடுக்க முடியவில்லை. முதல் செட்டை எளிதில் கைப்பற்றிய ஹாலெப் 2–வது செட்டில் எதிராளியின் 6–வது கேமில் சர்வீசை முறியடித்து அதன் மூலம் இந்த செட்டையும் சுலபமாக தனக்குரியதாக மாற்றினார்.

ஹாலெப் சாம்பியன்

வெறும் 55 நிமிடங்களில் செரீனாவின் சவாலை முடிவுக்கு கொண்டு வந்த ஹாலெப் 6–2, 6–2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, விம்பிள்டன் பட்டத்தை முதல்முறையாக கைப்பற்றி அசத்தினார். அதே சமயம் ஆட்டம் உப்பு–சப்பின்றி ஒரு தரப்பாக நகர்ந்ததால் ரசிகர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளானார்கள்.

ஒற்றையர் பிரிவில் விம்பிள்டன் பட்டத்தை ருமேனியா நாட்டவர் ஒருவர் வெல்வது இதுவே முதல் முறையாகும். 27 வயதான ஹாலெப்புக்கு இது 2–வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். ஏற்கனவே கடந்த ஆண்டில் பிரெஞ்ச் ஓபனை வென்று இருந்தார்.

செரீனா ஏமாற்றம்

37 வயதான செரீனா வில்லியம்ஸ் இதுவரை 7 விம்பிள்டன் உள்பட 23 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறார். இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்றிருந்தால் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவரான ஆஸ்திரேலியாவின் மார்கரேட் கோர்ட்டின் (24 கிராண்ட்ஸ்லாம்) சாதனையை சமன் செய்திருப்பார். குழந்தை பெற்றுக்கொண்ட பிறகு செரீனா மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறார். மூன்று முறையும் செரீனாவுக்கு தோல்வியே மிஞ்சியிருக்கிறது.

மகுடம் சூடிய ஹாலெப் ரூ20½ கோடி பரிசுத்தொகையும், 2 ஆயிரம் தரவரிசை புள்ளிகளையும் பெற்றார். செரீனாவுக்கு ரூ.10¼ கோடி பரிசாக கிடைத்தது. தரவரிசையில் 7–வது இடத்தில் உள்ள ஹாலெப் இந்த வெற்றியின் மூலம் 4–வது இடத்துக்கு முன்னேறுகிறார்.

நடாலை வீழ்த்திய பெடரர்

முன்னதாக நேற்று முன்தினம் இரவு ஆண்கள் பிரிவில் நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் 8 முறை சாம்பியனான சுவிட்சர்லாந்து ஜாம்பவான் ரோஜர் பெடரர் 7–6 (7–3), 1–6, 6–3, 6–4 என்ற செட் கணக்கில் 2–ம் நிலை வீரர் ரபெல் நடாலை (ஸ்பெயின்) தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் பெடரர், நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச்சை (செர்பியா) எதிர்கொள்கிறார். இவர்கள் இருவரும் இதுவரை 47 முறை நேருக்கு நேர் மோதி அதில் 25–ல் ஜோகோவிச்சும், 22–ல் பெடரரும் வெற்றி கண்டுள்ளனர். இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story