டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி; 55 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய டென்னிஸ் அணி பாகிஸ்தானுக்கு செல்கிறது


டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி; 55 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய டென்னிஸ் அணி பாகிஸ்தானுக்கு செல்கிறது
x
தினத்தந்தி 28 July 2019 7:03 AM GMT (Updated: 28 July 2019 11:17 PM GMT)

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி தொடரில் விளையாட 55 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய டென்னிஸ் அணி பாகிஸ்தானுக்கு செல்கிறது.

கொல்கத்தா,

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆசிய-ஓசினியா குரூப்-1ல் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் செப்டம்பர் 14, 15-ந்தேதிகளில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி பங்கேற்க இருப்பதை இந்திய டென்னிஸ் சங்க பொதுச் செயலாளர் ஹிரோன்மோய் சட்டர்ஜீ உறுதிப்படுத்தியுள்ளார். “இது இரு நாட்டு தொடர் அல்ல. டென்னிசின் உலக போட்டி. அதனால் நாங்கள் அங்கு சென்று விளையாடித்தான் ஆக வேண்டும். இந்திய அணியில் 6 வீரர்கள் மற்றும் பயிற்சியாளர், உதவியாளர்கள் ஆகியோருடன் நானும் பாகிஸ்தான் செல்ல உள்ளேன். ஒவ்வொருவருக்கும் ‘விசா’ கேட்டு விண்ணப்பிக்க உள்ளோம். உலக கோப்பை ஆக்கி போட்டியில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் ஆக்கி அணி இந்தியா வந்தது. அதே போல் இப்போது நாங்கள் அங்கு செல்கிறோம். இந்த போட்டி புல்தரை மைதானத்தில் நடக்கிறது. மிகச்சிறந்த அணியை கொண்டுள்ள எங்களுக்கு புல்தரை ஆடுகளம் ஒரு பிரச்சினையே இல்லை. இதற்கான இந்திய அணி வருகிற 5-ந்தேதிக்குள் அறிவிக்கப்படும்’ என்றும் சட்டர்ஜீ குறிப்பிட்டார்.

இந்திய டேவிஸ் கோப்பை டென்னிஸ் அணி பாகிஸ்தானுக்கு செல்வது கடந்த 55 ஆண்டுகளில் அதாவது 1964-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ராம்குமார் இடம் பெற வாய்ப்புள்ளது.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தரவரிசையில் இந்தியா 20-வது இடத்திலும், பாகிஸ்தான் 37-வது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story