டென்னிஸ்

களம் திரும்ப கடும் முயற்சி: டென்னிசில் எல்லாவற்றையும் சாதித்து விட்டேன் சானியா மிர்சா பேட்டி + "||" + Attempt to return to the field: I have achieved everything in tennis

களம் திரும்ப கடும் முயற்சி: டென்னிசில் எல்லாவற்றையும் சாதித்து விட்டேன் சானியா மிர்சா பேட்டி

களம் திரும்ப கடும் முயற்சி: டென்னிசில் எல்லாவற்றையும் சாதித்து விட்டேன் சானியா மிர்சா பேட்டி
‘டென்னிஸ் ஆட்டத்தில் நான் எல்லாவற்றையும் சாதித்து விட்டேன்’ என்று டென்னிசில் களம் திரும்ப கடும் முயற்சியில் இறங்கி இருக்கும் சானியா மிர்சா தெரிவித்தார்.

புதுடெல்லி,

‘டென்னிஸ் ஆட்டத்தில் நான் எல்லாவற்றையும் சாதித்து விட்டேன்’ என்று டென்னிசில் களம் திரும்ப கடும் முயற்சியில் இறங்கி இருக்கும் சானியா மிர்சா தெரிவித்தார்.

சானியா மிர்சா பேட்டி

இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. கடந்த ஆண்டு தொடக்கம் முதலே அவர் போட்டிகளில் பங்கேற்கவில்லை. குழந்தையை கவனித்து வரும் சானியா மிர்சா அடுத்த ஆண்டு (2020) களம் திரும்ப திட்டமிட்டுள்ளார். டென்னிசில் தனது 2–வது இன்னிங்சை தொடங்குவதற்கு உடல் தகுதியை எட்டும் முயற்சியில் சானியா மிர்சா ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் சானியா மிர்சா நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:–

எனது டென்னிஸ் வாழ்க்கையில் எல்லாவற்றையும் சாதித்து விட்டேன். அடுத்த எனது டென்னிஸ் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அது எனக்கு போனஸ் போன்றதாகும். இந்த மாதத்திற்குள் களம் திரும்ப முடியும் என்று நான் நினைத்தேன். ஆனால் அதற்கு சாத்தியமில்லை. அனேகமாக அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் டென்னிஸ் அரங்கில் மறுபிரவேசம் செய்ய முடியும் என்று நினைக்கிறேன். இஜான் (மகன்) எனக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசிர்வாதம்.

சாதிக்க வேண்டியது எதுவுமில்லை

என்னால் மீண்டும் களம் திரும்ப முடிந்தால் அது அற்புதமானதாகும். நான் உடல் தகுதியை எட்டுவதற்கு எனது மகன் உத்வேகமாக இருக்கிறான். நான் மீண்டும் களம் திரும்பினாலும் எதனையும் சாதித்து நிரூபிக்க வேண்டியதில்லை. டென்னிஸ் ஆடுவதையும், போட்டியில் பங்கேற்பதையும் விரும்புவதே களம் திரும்ப நினைப்பதற்கு காரணமாகும். நான் போட்டிக்கு திரும்ப எனது உடல் எந்த அளவுக்கு ஒத்துழைக்கும் என்பது தெரியவில்லை. அடுத்த 2 மாதங்களில் உடல் தகுதி குறித்து தெளிவாக தெரிந்து விடும். நல்ல உடல் தகுதியை எட்டாவிட்டால் போட்டியில் பங்கேற்க விரும்பமாட்டேன்.

குழந்தை பெற்ற பிறகும் செரீனா வில்லியம்ஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இது என்னை போன்ற வீராங்கனைகளுக்கு ஊக்கம் அளிக்கிறது. முன்பு போல் வலுவாக திரும்ப வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் முழங்கால் காய பிரச்சினை இன்னும் கொஞ்சம் இருக்க தான் செய்கிறது. நான் கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே முழங்கால் வலியால் தான் விளையாடுவதை நிறுத்தினேன். காயம் மோசமாக இல்லாவிட்டாலும் இன்னும் நீடிக்க தான் செய்கிறது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் கவனம்

நான் தற்போது ஒருநாளில் 4 மணி நேரத்தை பயிற்சிக்காக செலவிடுகிறேன். குழந்தை பெற்ற பிறகு 23 கிலோ எடை அதிகரித்து விட்டேன். தற்போது 26 கிலோ எடையை குறைத்து இருக்கிறேன். சர்வதேச போட்டியில் விளையாட வலுவாக இருக்க வேண்டியது அவசியம். அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். அதற்கு இன்னும் காலம் தேவையாகும். வருங்கால ஆட்டம் குறித்து நான் இலக்கு எதுவும் நிர்ணயிக்கவில்லை. தற்போது களம் திரும்புவதில் தான் எனது கவனம் இருக்கிறது. ஒருவேளை நான் திரும்பி வந்தால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தான் எனது முக்கிய குறியாக இருக்கும்.

இவ்வாறு சானியா மிர்சா கூறினார். 32 வயதான சானியா மிர்சா கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இரட்டையர் பிரிவில் 3 முறையும், கலப்பு இரட்டையர் பிரிவில் 3 தடவையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். உலக பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் 2 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறார். இரட்டையர் பிரிவு தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை அலங்கரித்துள்ளார். ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்றுள்ளார். சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் பல பட்டங்களை வென்று பெருமை சேர்த்துள்ளார்.