உலக டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலில் நவோமி ஒசாகா முதலிடம்


உலக டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலில் நவோமி ஒசாகா முதலிடம்
x
தினத்தந்தி 12 Aug 2019 10:53 PM GMT (Updated: 12 Aug 2019 10:53 PM GMT)

உலக டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலில் நவோமி ஒசாகா முதலிடத்தில் உள்ளார்.


* டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆசிய-ஓசியானா மண்டல குரூப்1 சுற்று ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் செப்டம்பர் 14 மற்றும் 15-ந் தேதிகளில் நடக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி பங்கேற்குமா? என்பது குறித்து மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூவிடம் கேட்ட போது, ‘இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் இரு நாட்டு தொடர் என்றால் அரசு முடிவு எடுக்க முடியும். டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி இரு நாடுகள் இடையிலான போட்டி தொடர் அல்ல. உலக டென்னிஸ் அமைப்பு நடத்தும் போட்டியாகும். இதில் இந்திய அணி கலந்து கொள்வது குறித்து அரசு கருத்து சொல்ல முடியாது’ என்று பதிலளித்தார்.

* இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி கூட்டம் மும்பையில் இன்று நடக்கிறது. இந்திய கிரிக்கெட் வீரர்களை தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையின் பரிசோதனைக்கு உட்படுத்த எடுத்த முடிவு குறித்தும், இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தலை அக்டோபர் 22-ந் தேதி நடத்த முடிவு செய்துள்ள நிலையில் அதற்கு முன்பாக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தலை இந்திய கிரிக்கெட் வாரிய புதிய விதிமுறையின் படி நடத்துவது தொடர்பாகவும், புதிய பயிற்சியாளர் தேர்வுக்கான பணியை இறுதி செய்வது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும் என்று தெரிகிறது.

* 19 வயதுக்கு உட்பட்ட இந்தியா, இங்கிலாந்து, வங்காளதேச அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இங்கிலாந்தில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 50 ஓவர்களில் 261 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக மக்முதுல் ஹசன் ஜாய் 109 ரன்கள் சேர்த்தார். பின்னர் ஆடிய இந்திய அணி 48.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

* காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை சமீபத்தில் ரத்து செய்த மத்திய அரசு அதனை யூனியன் பிரதேசமாக அறிவித்தது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் இடையே பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானில் செப்டம்பர் மாதம் நடைபெறும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் விளையாட இந்திய அணி பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் அகில இந்திய டென்னிஸ் சங்க செயலாளர் ஹிரோன்மோய் சட்டர்ஜி, சர்வதேச டென்னிஸ் சம்மேளன செயல் இயக்குனர் ஜஸ்டின் ஆல்பர்ட்டுக்கு இ-மெயில் அனுப்பி இருக்கிறார். அதில் ‘தற்போது பாகிஸ்தானில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு போட்டியில் பங்கேற்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மீண்டும் ஒரு முறை பாகிஸ்தானில் உள்ள பாதுகாப்பு சூழலை ஆய்வு செய்ய வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

* உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி பெண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா (6,417 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். கனடாவில் நடந்த ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் கால்இறுதிக்கு முன்னேறியதன் மூலம் நவோமி ஒசாகா முதலிடத்தை ஆக்கிரமித்துள்ளார். இந்த போட்டியில் 2-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்ட ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி (6,256 புள்ளிகள்) முதலிடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு சரிந்தார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியா வீரர் ஜோகோவிச் (12,325 புள்ளிகள்), ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் (7,945 புள்ளிகள்), சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் (7,460 புள்ளிகள்), ஆஸ்திரியா வீரர் டோமினிக் திம் (4,925 புள்ளிகள்) ஆகியோர் முறையே முதல் 4 இடங்களில் மாற்றமின்றி தொடருகின்றனர்.


Next Story