அமெரிக்க ஓபன் பிரதான சுற்றுக்கு இந்திய வீரர் நாகல் தகுதி முதல் சுற்றில் பெடரருடன் மோதுகிறார்


அமெரிக்க ஓபன் பிரதான சுற்றுக்கு இந்திய வீரர் நாகல் தகுதி முதல் சுற்றில் பெடரருடன் மோதுகிறார்
x
தினத்தந்தி 24 Aug 2019 10:30 PM GMT (Updated: 24 Aug 2019 8:56 PM GMT)

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நாளை தொடங்குகிறது.

நியூயார்க், 

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நாளை தொடங்குகிறது. இதையொட்டி நடந்த தகுதி சுற்றின் கடைசி ரவுண்டில் இந்திய வீரர் சுமித் நாகல் 5-7, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் பிரேசில் வீரர் ஜோவ் மென்ஸிசை தோற்கடித்து பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்த ஆட்டம் 2 மணி 27 நிமிடங்கள் நீடித்தது.

சுமித் நாகல், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் கால்பதிப்பது இதுவே முதல் முறையாகும். கடந்த 10 ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் ஆண்கள் ஒற்றையர் பிரதான சுற்றில் ஆடும் 5-வது வீரர் சுமித் நாகல் ஆவார்.

சுமித் நாகலுக்கு முதல் சுற்றே நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு கடினமாக இருக்கப்போகிறது. அவர் முதல் ரவுண்டில் 20 கிராண்ட்ஸ்லாம் வென்ற ஜாம்பவனான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரை நாளை சந்திக்கிறார்.

அரியானாவைச் சேர்ந்த 22 வயதான நாகல் கூறுகையில், ‘நான் எல்லையில்லா மகிழ்ச்சியில் உள்ளேன். என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ரோஜர் பெடரருடன் ஆர்தர் ஆஷ் ஸ்டேடியத்தில் மோதுவது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாகும். என்றாவது ஒரு நாள் பெடரருடன் மோதுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அந்த வாய்ப்பு இப்போது கனிந்துள்ளது. பெடரர் டென்னிசின் கடவுள். அவருடன் விளையாடுவதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்’ என்றார். மற்றொரு இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த பிரஜ்னேஸ் குணேஸ்வரன் முதல் சுற்றில் 5-ம் நிலை வீரர் ரஷியாவின் டேனில் மெட்விடேவை எதிர்கொள்கிறார். கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் ஒற்றையர் பிரிவில் ஒரே நேரத்தில் 2 இந்தியர்கள் விளையாடுவது 1998-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

Next Story