டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் நடால், ஒசாகா வெற்றி + "||" + US Open Tennis: In first round, Nadal and Osaka wins

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் நடால், ஒசாகா வெற்றி

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் நடால், ஒசாகா வெற்றி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், ஜப்பான் வீராங்கனை ஒசாகா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
நியூயார்க்,

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளிலும் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டங்கள் தொடர்ந்து நடந்தன. ஆண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-3, 6-2, 6-2 என்ற நேர்செட்டில் 60-ம் நிலை வீரரான ஜான் மில்மேனை (ஆஸ்திரேலியா) தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 15-வது முறையாக அமெரிக்க ஓபன் போட்டியில் பங்கேற்றுள்ள நடால் இங்கு முதல் சுற்றில் தோல்வி கண்டதில்லை என்ற பெருமையை தக்க வைத்துக்கொண்டார்.


மற்றொரு ஆட்டத்தில் 6-ம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 6-1, 6-3, 3-6, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் மால்டோவா வீரர் ராடு அல்போட்டை போராடி வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

ஆனால் சில முன்னணி வீரர்கள் முதல் தடையை கடக்க முடியாமல் தகிடுதத்தம் போட்டனர். தரவரிசையில் 8-வது இடம் வகிக்கும் சிட்சிபாஸ் (கிரீஸ்) 4-6, 7-6 (7-5), 6-7 (7-9), 5-7 என்ற செட் கணக்கில் 43-ம் நிலை வீரரான ஆந்த்ரே ருபெலேவிடம் பணிந்தார். உலக தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள பாவ்டிஸ்டா அகுட் (ஸ்பெயின்) 6-3, 1-6, 4-6, 6-3, 3-6 என்ற செட் கணக்கில் கஜகஸ்தான் வீரர் மிகைல் குகுஷ்கினிடம் வீழ்ந்தார்.

ஸ்பெயின் வீரர் பாப்லோ அன்டுஜருக்கு எதிரான ஆட்டத்தில் 5 செட்கள் வரை போராடிய இங்கிலாந்து வீரர் கைல் எட்முன்ட் தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தார். இந்த ஆட்டம் 4 மணி 21 நிமிட நேரம் வரை நீடித்தது.

பட்டம் வெல்ல வாய்ப்புள்ள வீரர்களில் ஒருவராக கருதப்பட்ட 4-ம் நிலை வீரரான டொமினிக் திம் (ஆஸ்திரியா) 4-6, 6-3, 3-6, 2-6 என்ற செட் கணக்கில் இத்தாலி வீரர் தாமஸ் பாபியனோவிடம் தோற்று வெளியேறினார்.

பெண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான நவோமி ஒசாகா (ஜப்பான்) 6-4, 6-7 (5-7), 6-2 என்ற செட் கணக்கில் ரஷிய வீராங்கனை அன்னா பிலின்கோவாவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். ஒசாகா 2-வது செட்டை டைபிரேக்கரில் இழந்தாலும், கடைசி செட்டில் மீண்டெழுந்து வெற்றியை தனதாக்கினார். மற்றொரு ஆட்டத்தில் விம்பிள்டன் சாம்பியன் சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-3, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் நிகோல் கிப்சை (அமெரிக்கா) விரட்டியடித்து 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். நிகோல் கிப்ஸ் சமீபத்தில் வாய் புற்றுநோய்க்கு ஆபரேஷன் செய்து களம் திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு ஆட்டத்தில் 2017-ம் ஆண்டு சாம்பியனான ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 3-6, 4-6 என்ற நேர்செட்டில் தகுதி நிலை வீராங்கனையான அன்னா கலின்ஸ்கயாவிடம் (ரஷியா) சரண் அடைந்தார்.

இதே போல் தரவரிசையில் 13-வது இடத்தில் இருக்கும் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான சக நாட்டை சேர்ந்த விக்டோரியா அஸரென்காவுக்கு அதிர்ச்சி அளித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து), ஜூலியா ஜார்ஜஸ் (ஜெர்மனி), பியான்கா ஆன்ட்ரிஸ்கு (கனடா), புதின்சேவா (கஜகஸ்தான்), ஜெலினா ஆஸ்டாபென்கோ (லாத்வியா), அனெட் கொன்டாவெய்ட் (எஸ்தோனியா) ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றியை ருசித்து 2-வது சுற்றை எட்டினர்.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் ‘சாம்பியன்’
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றினார். அவர் வென்ற 19-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.
2. அமெரிக்க ஓபன் டென்னிஸ்; செரீனாவை வீழ்த்தி பட்டம் வென்றார் பியான்கா
அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் செரீனாவை வீழ்த்தி கனடாவின் பியான்கா பட்டம் வென்றார்.
3. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ரபெல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
4. அமெரிக்க ஓபன் டென்னிஸ்; இறுதி போட்டிக்கு முன்னேறினார் நடால்
அமெரிக்க ஓபன் டென்னிசில் ரபேல் நடால் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
5. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ரபெல் நடால் அரைஇறுதிக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் அரைஇறுதிக்கு முன்னேறினார்.