அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஜோகோவிச், பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்


அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஜோகோவிச், பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 31 Aug 2019 11:24 PM GMT (Updated: 31 Aug 2019 11:24 PM GMT)

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், ரோஜர் பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.

நியூயார்க்,

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் 5-வது நாளான நேற்று முன்தினம் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் ஆண்கள் பிரிவு ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரரும், நடப்பு சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-4, 6-2 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் டெனிஸ் குட்லாவை தோற்கடித்து 12-வது முறையாக 4-வது சுற்றுக்கு முன்னேறினார். அமெரிக்க ஓபன் டென்னிசில் ஜோகோவிச் ருசித்த 72-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் அமெரிக்க ஓபனில் அதிக வெற்றியை குவித்தவர்களின் வரிசையில் அமெரிக்காவின் பீட் சாம்பிராசை (71 வெற்றி) பின்னுக்கு தள்ளி ஜோகோவிச் 5-வது இடத்தை பிடித்தார்.

4-வது சுற்றில் ஜோகோவிச், முன்னாள் சாம்பியன் வாவ்ரிங்காவை (சுவிட்சர்லாந்து) சந்திக்கிறார். முன்னதாக வாவ்ரிங்கா 3-வது சுற்றில் 6-4, 7-6 (11-9), 7-6 (7-4) என்ற செட் கணக்கில் இத்தாலி வீரர் லோரென்ஸியை வெளியேற்றினார்.

மற்றொரு ஆட்டத்தில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 6-2, 6-2, 6-1 என்ற நேர்செட்டில் 58-ம் நிலை வீரரான டேனியல் இவான்சை (இங்கிலாந்து) எளிதில் தோற்கடித்தார். இந்த வெற்றியை பெற பெடரருக்கு 1 மணி 20 நிமிட நேரமே தேவைப்பட்டது. 5 முறை சாம்பியனான பெடரர் 18-வது முறையாக 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். இதே போல் டேனில் மெட்விடேவ் (ரஷியா), டேவிட் கோபின் (பெல்ஜியம்), டிமிட்ரோவ் (பல்கேரியா) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-3, 6-2 என்ற நேர்செட்டில் செக்குடியரசின் கரோலினா முசோவாவை விரட்டியடித்து 18-வது முறையாக 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவரும், பிரெஞ்ச் ஓபன் சாம்பியனுமான ஆஷ்லி பார்டி (ஆஸ்திரேலியா) 7-5, 6-3 என்ற நேர்செட்டில் கிரீஸ் நாட்டு வீராங்கனை மரியா சக்காரியை வீழ்த்தினார்.

மற்ற ஆட்டங்களில் கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), மேடிசன் கீஸ் (அமெரிக்கா), ஸ்விடோலினா (உக்ரைன்), ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து), கியாங் வாங் (சீனா), பெட்ரா மார்டிச் (குரோஷியா) உள்ளிட்டோரும் வெற்றி பெற்று 4-வது சுற்றை எட்டினர்.

ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)-டெனிஸ் ஷபோவாலோவ் (கனடா) ஜோடி 6-3, 6-1 என்ற நேர்செட்டில் பிரான்சின் பிர்ரே ஹூயிஸ் ஹெர்பெர்ட்-நிகோலஸ் மஹூட் இணையை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

மற்றொரு ஆட்டத்தில் லியாண்டர் பெயஸ் (இந்தியா) -குல்லெர்மோ டுரன் (அர்ஜென்டினா) இணை 5-7, 2-6 என்ற நேர்செட்டில் மியோமிர் கென்மனோவிச் (செர்பியா)-காஸ்பெர் ரூட் (நார்வே) ஜோடியிடம் தோற்று வெளியேறியது.

Next Story