அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் நடால், ஒசாகா வோஸ்னியாக்கி வெளியேற்றம்


அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் நடால், ஒசாகா வோஸ்னியாக்கி வெளியேற்றம்
x
தினத்தந்தி 1 Sep 2019 11:00 PM GMT (Updated: 1 Sep 2019 7:15 PM GMT)

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால், ஒசாகா ஆகியோர் கால்இறுதிக்கு முந்தைய 4-வது சுற்றை எட்டியுள்ளனர்.

நியூயார்க்,

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் திருவிழா, நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்டில் சங் ஹியோனை (தென்கொரியா) எளிதில் வீழ்த்தினார். நடால் 4-வது சுற்றில் முன்னாள் சாம்பியன் மரின் சிலிச்சை (குரோஷியா) எதிர்கொள்கிறார். முன்னதாக சிலிச் 7-5, 3-6, 7-6 (6), 6-4 என்ற செட் கணக்கில் ஜான் இஸ்னரை (அமெரிக்கா) தோற்கடித்தார். சர்வீஸ் போடுவதில் வல்லவரான இஸ்னர் 40 ஏஸ் சர்வீஸ் வீசியும், சிலிச் சமாளித்து விட்டார்.

அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), ஆந்த்ரே ருப்லெவ் (ரஷியா), ஸ்வார்ட்ஸ்மான் (அர்ஜென்டினா), மான் பில்ஸ் (பிரான்ஸ்), பாப்லோ அன்டுஜார்( ஸ்பெயின்), பெரேட்டினி (இத்தாலி) ஆகியோரும் 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீராங்கனையுமான நவோமி ஒசாகா (ஜப்பான்) 6-3, 6-0 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் கோகோ காப்பை வெறும் 65 நிமிடங்களில் பந்தாடி 4-வது சுற்றை எட்டினார். 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் களம் கண்ட உள்ளூர் மங்கை 15 வயதான கோகோ காப் தோல்வியின் வேதனை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார். அவரை ஒசாகா கட்டித்தழுவி தேற்றினார். ஒசாகா அடுத்து பெலின்டா பென்சிச்சுடன் (சுவிட்சர்லாந்து) மோதுகிறார்.

மற்றொரு ஆட்டத்தில் 15-ம் நிலை வீராங்கனையான பியான்கா ஆன்ட்ரீஸ்கு (கனடா) 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கிக்கு (டென்மார்க்) அதிர்ச்சி அளித்தார். அமெரிக்க ஓபனில் முதல்முறையாக அடியெடுத்து வைத்துள்ள 19 வயதான ஆன்ட்ரீஸ்குவின் ஆட்டம் அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது.

4-வது சுற்றில் ஆன்ட்ரீஸ்கு, அமெரிக்க தகுதி நிலை வீராங்கனை டெய்லர் டவுன்சென்டை சந்திக்கிறார். 2-வது சுற்றில் விம்பிள்டன் சாம்பியன் ஹாலெப்பை விரட்டிய டெய்லர் டவுன்சென்ட் 3-வது சுற்றில் சோரனா கிர்ஸ்டியாவை (ருமேனியா) 7-5, 6-2 என்ற நேர் செட்டில் சாய்த்தார்.

ஜூலியா ஜார்ஜெஸ் (ஜெர்மனி), எலிஸ் மெர்டென்ஸ் (பெல்ஜியம்), கிறிஸ்டி ஆன் (அமெரிக்கா), டோனா வெகிச் (குரோஷியா) உள்ளிட்டோரும் தங்களது 3-வது சுற்று ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

கலப்பு இரட்டையர் பிரிவின் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ரோகன் போபண்ணா, அமெரிக்க வீராங்கனை அபிகைல் ஸ்பியர்ஸ் ஜோடி 6-3, 6-2 என்ற நேர் செட்டில் ரோசோல்ஸ்கா (போலந்து)- மெக்டிச் (குரோஷியா) இணையை வென்றது.

Next Story