அமெரிக்க ஓபன் டென்னிஸ்; பெடரர், செரீனா வில்லியம்ஸ் கால்இறுதிக்கு முன்னேற்றம்


அமெரிக்க ஓபன் டென்னிஸ்; பெடரர், செரீனா வில்லியம்ஸ் கால்இறுதிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 3 Sep 2019 1:24 AM GMT (Updated: 3 Sep 2019 1:24 AM GMT)

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர், செரீனா வில்லியம்ஸ் கால்இறுதிக்கு முன்னேறினார்கள். காயம் காரணமாக ஜோகோவிச் பாதியில் விலகினார்.

நியூயார்க்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் 7-வது நாளான நேற்று முன்தினம் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

இதில் ஆண்கள் பிரிவு ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரரும், நடப்பு சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), 2016-ம் ஆண்டு சாம்பியனான வாவ்ரிங்காவை (சுவிட்சர்லாந்து) எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் வாவ்ரிங்கா 6-4, 7-5, 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது இடது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜோகோவிச் போட்டியில் இருந்து விலகினார். இதனால் வாவ்ரிங்கா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வாவ்ரிங்கா 6-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறி இருக்கிறார்.

வெற்றிக்கு பிறகு வாவ்ரிங்கா அளித்த பேட்டியில், ‘ஜோகோவிச்சுக்காக வருந்துகிறேன். அவர் ஒரு அற்புதமான சாம்பியன். இருவருக்கும் இடையே சில அருமையான போட்டிகள் அரங்கேறி இருக்கின்றன. எனது இந்த சிறப்பான ஆட்டத்தை தக்க வைத்து கொள்ள விரும்புகிறேன். ஆபரேஷனுக்கு பிறகு பழைய நிலைக்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று தெரிவித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் டேனில் மெட்விடேவ் (ரஷியா) 3-6, 6-3, 6-2, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் தகுதி சுற்று வீரரான ஜெர்மனியின் டோமினிக் கோப்பெரை வீழ்த்தி முதல்முறையாக கால்இறுதிக்குள் நுழைந்தார். கால்இறுதி ஆட்டத்தில் மெட்விடேவ், வாவ்ரிங்காவை எதிர்கொள்கிறார்.

இன்னொரு ஆட்டத்தில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவரும், உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-2, 6-2, 6-0 என்ற நேர்செட்டில் 15-ம் நிலை வீரரான டேவிட் கோபினை (பெல்ஜியம்) எளிதில் தோற்கடித்து 13-வது முறையாக கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த வெற்றியை பெற பெடரருக்கு 79 நிமிடமே தேவைப்பட்டது.

மற்றொரு ஆட்டத்தில் பல்கேரியா வீரர் டிமிட்ரோவ் 7-5, 6-3, 6-4 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை விரட்டியடித்து முதல்முறையாக கால்இறுதிக்கு தகுதி பெற்றார். கால்இறுதியில் டிமிட்ரோவ், பெடரரை சந்திக்கிறார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் 22-ம் நிலை வீராங்கனையான பெட்ரா மார்டிச்சை (குரோஷியா) வீழ்த்தி 16-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 18-வது இடத்தில் இருக்கும் சீன வீராங்கனை கியாங் வாங் 6-2, 6-4 என்ற நேர்செட்டில் 2-ம் நிலை வீராங்கனையும், பிரெஞ்ச் ஓபன் சாம்பியனுமான ஆஷ்லி பார்டிக்கு (ஆஸ்திரேலியா) அதிர்ச்சி அளித்து முதல்முறையாக கால்இறுதிக்குள் நுழைந்தார். 2014-ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்க ஓபன் போட்டியில் கால்இறுதிக்கு முன்னேறிய முதல் சீன வீராங்கனை கியாங் வாங் ஆவார். கால்இறுதியில் கியாங் வாங், செரீனா வில்லியம்சுடன் மோதுகிறார்.

இன்னொரு ஆட்டத்தில் தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ள இங்கிலாந்து வீராங்கனை ஜோஹன்னா கோன்டா 6-7 (1-7), 6-3, 7-5 என்ற செட் கணக்கில் 3-ம் நிலை வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) வீழ்த்தி முதல்முறையாக கால்இறுதிக்குள் கால் பதித்தார். முதல் செட்டை இழந்த ஜோஹன்னா கோன்டா, 2-வது செட்டிலும் 1-3 என்ற கணக்கில் பின்தங்கிய நிலையில் இருந்து எழுச்சி பெற்று வெற்றியை தனதாக்கி பிரமாதப்படுத்தினார்.

மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா 7-5, 6-4 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ்சை சாய்த்து முதல் முறையாக கால்இறுதிக்குள் நுழைந்தார். கால்இறுதியில் ஸ்விடோலினா, ஜோஹன்னா கோன்டாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)-டேனிஸ் ஷபோவாலோவ் (கனடா) ஜோடி 3-6, 4-6 என்ற நேர்செட்டில் இங்கிலாந்தின் ஜாமி முர்ரே- நீல் குப்ஸ்கி இணையிடம் தோல்வி கண்டு வெளியேறியது.

கலப்பு இரட்டையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)- அபிகைல் ஸ்பியர்ஸ் (அமெரிக்கா) இணை 5-7, 6-7 (4-7) என்ற நேர்செட்டில் பாப்ரைஸ் மார்டின் (பிரான்ஸ்)- ராகுய்ல் அடாவோ (அமெரிக்கா) ஜோடியிடம் தோல்வி கண்டது.

Next Story