அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஒசாகா வெளியேற்றம்


அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஒசாகா வெளியேற்றம்
x
தினத்தந்தி 4 Sep 2019 12:24 AM GMT (Updated: 4 Sep 2019 12:24 AM GMT)

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனை ஜப்பானின் ஒசாகா 4-வது சுற்றுடன் வெளியேற்றப்பட்டார்.

நியூயார்க்,

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன.

ஆண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான ஸ்பெயினின் ரபெல் நடால் 6-3, 3-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் 2014-ம் ஆண்டு சாம்பியனான மரின் சிலிச்சை (குரோஷியா) வெளியேற்றி 9-வது முறையாக கால்இறுதிக்குள் நுழைந்தார்.

நடால் கால்இறுதியில் 21-ம் நிலை வீரரான அர்ஜென்டினாவின் டியாகோ ஸ்வார்ட்ஸ்மானை எதிர்கொள்கிறார். முன்னதாக ஸ்வார்ட்ஸ்மான் 4-வது சுற்றில் 6-ம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவை 3-6, 6-2, 6-4, 6-3 செட் கணக்கில் விரட்டினார். ஸ்வார்ட்ஸ்மான், நடாலுக்கு எதிராக இதுவரை 7 முறை மோதி அவை அனைத்திலும் தோல்வி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல் கேல் மான்பில்ஸ் (பிரான்ஸ்) 6-1, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் பாப்லோ அன்டுஜாரையும் (ஸ்பெயின்), மாட்டியோ பெரேட்டினி (இத்தாலி) 6-1, 6-4, 7-6 (6) என்ற நேர் செட் கணக்கில் ஆந்த்ரே ருப்லெவையும் (ரஷியா) வீழ்த்தி கால்இறுதியை எட்டினர். 1977-ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்க ஓபனில் கால்இறுதிக்கு முன்னேறிய முதல் இத்தாலி வீரர் என்ற பெருமையை பெரேட்டினி பெற்றார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான ஜப்பானின் நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை தரவரிசையில் 12-வது இடம் வகிக்கும் பெலின்டா பென்சிச் (சுவிட்சர்லாந்து) 7-5, 6-4 என்ற நேர் செட்டில் சாய்த்தார்.

தோல்வியின் மூலம் ஒசாகா ‘நம்பர் ஒன்’ இடத்தை இழக்கிறார். வருகிற 9-ந்தேதி வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ஆஷ்லி பார்டி (ஆஸ்திரேலியா) மீண்டும் முதலிடத்தை பிடிக்கிறார்.

மற்றொரு ஆட்டத்தில் டோனா வெகிச் (குரோஷியா) 6-7 (5-7), 7-5, 6-3 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் ஜூலியா ஜார்ஜெசை தோற்கடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

15-ம் நிலை வீராங்கனையான பியான்கா ஆன்ட்ரீஸ்கு (கனடா) தன்னை எதிர்த்த டெய்லர் டவுன்சென்டை (அமெரிக்கா) 6-1, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டியில் முதல்முறையாக கால்இறுதிக்குள் கால்பதித்தார்.

இதே போல் எலிசி மெர்டென்ஸ் (பெல்ஜியம்) 6-1, 6-1 என்ற நேர் செட்டில் அமெரிக்க தகுதி நிலை வீராங்கனை கிறிஸ்டி ஆனை துவம்சம் செய்தார். கால்இறுதியில் எலிசி மெர்டென்ஸ், ஆன்ட்ரீஸ்குவை சந்திக்கிறார்.


Next Story