டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் பெடரர் அதிர்ச்சி தோல்வி + "||" + US Open: Roger Federer Knocked Out After Losing To Grigor Dimitrov In Quarter-Finals

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் பெடரர் அதிர்ச்சி தோல்வி

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் பெடரர் அதிர்ச்சி தோல்வி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜாம்பவான் பெடரர் கால்இறுதியில், பல்கேரியா நாட்டு வீரரிடம் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார்.
நியூயார்க்,

நியூயார்க் நகரில் நடந்து வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த ஆண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 3-ம் நிலை வீரரும், 20 கிராண்ட்ஸ்லாம் வென்றவருமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 78-ம் நிலை வீரர் கிரிகோர் டிமிட்ரோவை (பல்கேரியா) எதிர்கொண்டார். இதில் அனுபவம் வாய்ந்த பெடரர் முதல் 3 செட்டுகளில் 2-ஐ கைப்பற்றினார். 4-வது செட்டின் போது கழுத்து வலியால் அவதிப்பட்ட அவர் சிகிச்சை பெற்றுக் கொண்டு தொடர்ந்து விளையாடினார். அதன் பிறகு அவரிடம் தடுமாற்றம் தெரிந்தது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட டிமிட்ரோவ் மளமளவென புள்ளிகளை குவித்து பெடரருக்கு அதிர்ச்சி அளித்தார்.


3 மணி 12 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் டிமிட்ரோவ் 3-6, 6-4, 3-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் பெடரரை வெளியேற்றி அரைஇறுதிக்கு முன்னேறினார். டிமிட்ரோவ் பெடரரை வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு அவருக்கு எதிராக 7 முறை மோதி தோற்று இருந்தார்.

5 முறை சாம்பியனான பெடரர் இறுதிப்போட்டியில் அவரது பிரதான எதிரி ரபெல் நடாலுடன் (ஸ்பெயின்) மோத வேண்டி வரலாம். அதுவும் முதல்முறையாக அவர்கள் அமெரிக்க ஓபனில் சந்திக்க வேண்டிய சூழல் உருவாகி இருப்பது சுவாரஸ்யமான அம்சம் என்றெல்லாம் கூறப்பட்ட நிலையில் பெடரர் கால்இறுதியோடு ஏமாற்றி விட்டார். எதிராளியை விட பெடரர் பந்தை வலுவாக வெளியே அடித்து விட்டு புள்ளிகளை தாரை வார்க்கும் தவறுகளை (60 முறை) அதிகமாக இழைத்தது பின்னடைவாக அமைந்தது.

தோல்விக்கு பிறகு பெடரரிடம் 38 வயதிலும் இன்னொரு கிராண்ட்ஸ்லாம் பட்டம் உங்களால் வெல்ல முடியும் என்று நினைக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பிய போது, ‘என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் என்னால் முடியும் என்று நம்புகிறேன். இன்னும் என்னால் நன்றாக ஆட முடியும் என்று நினைக்கிறேன். தோல்வி ஏமாற்றம் அளித்தாலும், மீண்டும் வருவேன்’ என்று பதில் அளித்தார்.

மெட்விடேவ் அபாரம்

மற்றொரு கால்இறுதியில் 5-ம் நிலை வீரரான ரஷியாவின் டேனில் மெட்விடேவ் 7-6 (6), 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் 2016-ம் ஆண்டு சாம்பியனான வாவ்ரிங்காவை (சுவிட்சர்லாந்து) வீழ்த்தி அரைஇறுதியை எட்டினார். 23 வயதான மெட்விடேவ், கிராண்ட்ஸ்லாமில் அரைஇறுதிக்கு வருவது இதுவே முதல்முறையாகும்.

இந்த வெற்றியின் மூலம் அவர் நவம்பர் மாதம் நடக்கும் டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. உலக டூர் சாம்பியன்ஷிப் போட்டிக்கும் தகுதி பெற்று இருக்கிறார். மெட்விடேவ் அரைஇறுதியில் டிமிட்ரோவுடன் மோதுகிறார்.

செரீனா 100-வது வெற்றி

பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 6 முறை சாம்பியனும், முன்னாள் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரருமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-1, 6-0 என்ற நேர் செட்டில் சீனாவின் வாங் கியானை பந்தாடினார். வெறும் 44 நிமிடங்களில் இந்த ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த செரீனா அமெரிக்க ஓபனில் 12-வது முறையாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்துள்ளார். அமெரிக்க ஓபனில் 37 வயதான செரீனாவின் 100-வது வெற்றியாக இது பதிவானது.

மற்றொரு கால்இறுதியில் ஸ்விடோலினா (உக்ரைன்) 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் இங்கிலாந்தின் ஜோகன்னா ஹோன்டாவை விரட்டினார். அமெரிக்க ஓபனில் அரைஇறுதிக்கு தகுதி பெற்ற முதல் உக்ரைன் வீராங்கனை என்ற சிறப்பை பெற்ற ஸ்விடோலினா அடுத்து செரீனாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்கா: கான்சாஸ் நகரில் துப்பாக்கிச் சூடு - 2 பேர் பலி, 15 பேர் காயம்
அமெரிக்காவின் கான்சாஸ் நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 பேர் பலியாகினர். மேலும் 15 பேர் காயமடைந்தனர்.
2. அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சுட்டுக்கொலை
அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
3. அமெரிக்காவில் 9 லட்சம் பேர் இந்தி மொழி பேசுகிறார்கள்
அமெரிக்காவில் 9 லட்சம் பேர் இந்தி மொழி பேசி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது
அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
5. அமெரிக்காவை புரட்டி போட்ட புயல்: 8 பேர் பலி
அமெரிக்காவை தாக்கிய புயல் காரணமாக 8 பேர் பலியாகினர்.