அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ரபெல் நடால் அரைஇறுதிக்கு முன்னேற்றம்


அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ரபெல் நடால் அரைஇறுதிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 6 Sep 2019 12:10 AM GMT (Updated: 6 Sep 2019 12:10 AM GMT)

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் அரைஇறுதிக்கு முன்னேறினார்.

நியூயார்க்,

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 6-4, 7-5, 6-2 என்ற நேர்செட்டில் 21-ம் நிலை வீரரான டியாகோ ஸ்வார்ட்ஸ்மானை (அர்ஜென்டினா) வீழ்த்தினார். இந்த ஆட்டம் 2 மணி 47 நிமிட நேரம் நீடித்தது.

3 முறை சாம்பியனான ரபெல் நடால் 8-வது முறையாக அரைஇறுதிக்கு முன்னேறி இருக்கிறார். நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் (செர்பியா), 3-ம் நிலை வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) ஆகியோர் தோல்வி கண்டு வெளியேறிய நிலையில் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ள ரபெல் நடால் 19-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

மற்றொரு கால்இறுதியில் உலக தரவரிசையில் 25-வது இடத்தில் இருக்கும் இத்தாலி வீரர் மாட்டியோ பெரேட்டினி 3-6, 6-3, 6-2, 3-6, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் 13-ம் நிலை வீரரான மான்பில்சை (பிரான்ஸ்) போராடி சாய்த்து அரைஇறுதிக்குள் நுழைந்தார். கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பெரேட்டினி அரைஇறுதியை எட்டுவது இதுவே முதல்முறையாகும். அரைஇறுதியில் நடால்- பெரேட்டினி ஆகியோர் மோதுகிறார்கள்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 12-வது இடத்தில் இருக்கும் பெலின்டா பென்சிச் (சுவிட்சர்லாந்து) 7-6 (7-5), 6-3 என்ற நேர்செட்டில் 23-ம் நிலை வீராங்கனையான டோனா வெகிச்சை (குரோஷியா) விரட்டியடித்து முதல்முறையாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள 19 வயது கனடா வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்கு 3-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் 26-ம் நிலை வீராங்கனையான எலிசி மெர்டென்சை (பெல்ஜியம்) வீழ்த்தி முதல்முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தார். இந்த ஆட்டம் 2 மணி 2 நிமிடம் நேரம் நடைபெற்றது. 1984-ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்க ஓபன் போட்டியில் அரைஇறுதிக்கு முன்னேறிய முதல் கனடா வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்கு ஆவார். அரைஇறுதியில் பெலின்டா பென்சிச், ஆன்ட்ரீஸ்குவை சந்திக்கிறார்.

வெற்றிக்கு பிறகு ஆன்ட்ரீஸ்கு அளித்த பேட்டியில், ‘கடந்த வருடம் அமெரிக்க ஓபன் போட்டியில் தகுதி சுற்றுடன் வெளியேறினேன். ஆனால் இந்த முறை அரைஇறுதி வரை முன்னேறி இருப்பதை என்னால் நம்பமுடியவில்லை. எல்லாமே கனவு போல் உள்ளது. உண்மையை சொல்லப்போனால் இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தையே வரவில்லை. கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு இது. இதே உத்வேகத்துடன் முன்னேறுவேன் என நினைக்கிறேன்’ என்றார்.

Next Story