அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் செரீனா வில்லியம்ஸ்; கனடா வீராங்கனையை எதிர்கொள்கிறார்


அமெரிக்க ஓபன் டென்னிஸ்:  இறுதிப்போட்டியில் செரீனா வில்லியம்ஸ்; கனடா வீராங்கனையை எதிர்கொள்கிறார்
x
தினத்தந்தி 6 Sep 2019 3:57 AM GMT (Updated: 7 Sep 2019 2:03 AM GMT)

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

நியூயார்க்,

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான 37 வயது செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), உலக தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினாவை சந்தித்தார்.

70 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் 6 முறை சாம்பியனான செரீனா வில்லியம்ஸ் 6-3, 6-1 என்ற நேர்செட்டில் ஸ்விடோலினாவை வீழ்த்தி 10-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். முதல் செட்டில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற ஸ்விடோலினா அதன் பிறகு செரீனாவின் அதிரடி ஷாட்டுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியதுடன், முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பையும் நழுவவிட்டார்.

2017-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்கு பிறகு செரீனா கிராண்ட்ஸ்லாம் பட்டம் எதுவும் வெல்லவில்லை. இந்த ஆண்டு நடந்த விம்பிள்டன் போட்டியில் அவர் இறுதிப்போட்டி வரை முன்னேறி பட்டம் வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டார். அமெரிக்க ஓபனில் செரீனா மகுடம் சூடினால், அதிக (24) கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் மார்க்கரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்து விடுவார்.

மற்றொரு அரைஇறுதியில் தரவரிசையில் 12-வது இடத்தில் இருக்கும் பெலின்டா பென்சிச் (சுவிட்சர்லாந்து), 15-ம் நிலை வீராங்கனையான 19 வயது பியான்கா ஆன்ட்ரீஸ்குவுடன் (கனடா) மோதினார். 2 மணி 13 நிமிட நேரம் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் ஆன்ட்ரீஸ்கு 7-6 (7-3), 7-5 என்ற செட் கணக்கில் பெலின்சா பென்சிச்சை வெளியேற்றி முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். அமெரிக்க ஓபன் போட்டியில் பிரதான சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் முறையிலேயே ஆன்ட்ரீஸ்கு இறுதிப்போட்டிக்கு முன்னேறி பிரமிக்க வைத்துள்ளார். 2014-ம் ஆண்டு விம்பிள்டனுக்கு பிறகு கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற முதல் கனடா வீராங்கனை என்ற பெருமையை ஆன்ட்ரீஸ்கு பெற்றுள்ளார்.

வெற்றிக்கு பிறகு ஆன்ட்ரீஸ்கு கூறுகையில் ‘சிறு வயது முதலே இந்த தருணம் குறித்து நான் எப்பொழுதும் கனவு காண்பது உண்டு. எனது அந்த கனவு நனவாகும் என்று மக்கள் பலரும் நினைத்து இருக்கமாட்டார்கள். ஆனால் எனது நம்பிக்கையை தொடர்ந்தேன். மேட்ச் புள்ளியை (வெற்றி) பெற்றதும் அதிர்ச்சியில் உறைந்தேன். அதேநேரத்தில் அந்த புள்ளியை பெறுவது மிகவும் கடினமானதாக இருந்தது. உண்மையிலேயே நான் இறுதிப்போட்டிக்கு முன்னேற தகுதியானவள் என்று நினைக்கிறேன்.

செரீனா வில்லியம்ஸ் ஓய்வு பெறுவதற்கு முன்பு அவருடன் விளையாட வேண்டும் என்று நான் எப்பொழுதும் விரும்பியது உண்டு. அருமையான சாம்பியனான அவருக்கு எதிராக விளையாடுவதை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். செரீனாவும் அவருடைய முதல் தர ஆட்டத்தை வெளிப்படுத்துவார். நானும் எனது உயர்ந்த தர ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன். இதில் சிறந்த வீராங்கனை வெற்றி பெறுவார் என்று நினைக்கிறேன்’ என்றார்.

இந்திய நேரப்படி நாளை அதிகாலை (1.30 மணி) நடைபெறும் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி சுற்றில் செரீனா வில்லியம்ஸ்-பியான்கா ஆன்ட்ரீஸ்கு மோதுகிறார்கள். இருவரும் நேருக்கு நேர் மோதுவது இது 2-வது முறையாகும். கடந்த மாதம் நடந்த கனடா ஓபன் இறுதிப்போட்டியில் இருவரும் சந்தித்தனர். இதில் செரீனா வில்லியம்ஸ் 1-3 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த நிலையில் காயம் காரணமாக பாதியிலேயே விலகியது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஓபனில் பட்டம் வெல்லும் வீராங்கனைக்கு ரூ.27½ கோடியும், இறுதிப்போட்டியில் தோல்வி அடைபவருக்கு ரூ.13½ கோடியும் பரிசாக கிடைக்கும். இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்1 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.


Next Story