டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ரபெல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் + "||" + US Open Tennis: Rafael Nadal Improves to the Final

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ரபெல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ரபெல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
நியூயார்க்,

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடம் வகிப்பவரும், 18 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான ரபெல் நடால் (ஸ்பெயின்), 25-ம் நிலை வீரரான இத்தாலியின் மாட்டியோ பெரேட்டினியை எதிர்கொண்டார். 2 மணி 35 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான நடால் 7-6 (8-6), 6-4, 6-1 என்ற செட் கணக்கில் பெரேட்டினியை வீழ்த்தி 5-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த ஆட்டத்தில் பெரேட்டினி பந்தை அதிக முறை (44 தடவை) வெளியில் அடித்து புள்ளிகளை தாரை வார்த்தார்.


ஒட்டுமொத்த ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் நடால் இறுதி சுற்றை எட்டுவது இது 27-வது முறையாகும். 19-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முனைப்பில் ரபெல் நடால் உள்ளார்.

வெற்றிக்கு பிறகு நடால் கூறுகையில் ‘முதல் செட் ஆட்டம் எனக்கு சற்று ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. முதல் செட்டில் சர்வீசை பிரேக் செய்ய கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டேன். டைபிரேக்கரில் எனக்கு சற்று அதிர்ஷ்டம் கைகொடுத்தது. டைபிரேக்கரில் 2-5 என்ற கணக்கில் பின்தங்கி இருந்து சரிவை சமாளித்து அந்த செட்டையும் கைப்பற்றினேன். அதன் பிறகு ஆட்டத்தின் போக்கு எனக்கு சாதகமாக மாறியது. மிகவும் அமைதியாக ஆட்டத்தை தொடங்கினேன். பிறகு ஆக்ரோஷத்துடன் செயல்பட்டேன். அமெரிக்க ஓபன் போட்டியில் மீண்டும் இறுதிப்போட்டிக்கு வந்திருப்பது உற்சாகம் அளிக்கிறது’ என்றார்.

மற்றொரு அரைஇறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் டேனில் மெட்விடேவ் (ரஷியா), 78-ம் நிலை வீரரான கிரிகோர் டிமிட்ரோவுடன் (பல்கேரியா) மோதினார். மணிக்கு அதிகபட்சமாக 132 மைல் வேகத்தில் சர்வீஸ் போட்டு மிரட்டிய மெட்விடேவ் 7-6 (7-5), 6-4, 6-3 என்ற செட் கணக்கில் டிமிட்ரோவை சாய்த்து முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார்.

கால்இறுதியில் ஜாம்பவான் பெடரரை வீழ்த்தி அசத்திய டிமிட்ரோவ் இந்த ஆட்டத்திலும் முத்திரை பதிப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த வெற்றியை பெற மெட்விடேவுக்கு 2 மணி 38 நிமிடம் தேவைப்பட்டது. இந்த ஆண்டில் மெட்விடேவ் பெற்ற 50-வது வெற்றி இதுவாகும். இந்த சீசனில் அதிக வெற்றிகளை ருசித்த வீரர் மெட்விடேவ் தான் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

இந்திய நேரப்படி நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 1.30 மணிக்கு நடைபெறும் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் நடால்- டேனில் மெட்விடேவ் ஆகியோர் மோதுகிறார்கள். இருவரும் நேருக்கு நேர் மோதுவது இது 2-வது முறையாகும். கடந்த மாதம் நடந்த கனடா ஓபன் இறுதிஆட்டத்தில் நடால் நேர்செட்டில் மெட்விடேவை வீழ்த்தி இருந்தார். போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்1 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. மெக்சிகோ சர்வதேச டென்னிஸ்: ரபெல் நடால் ‘சாம்பியன்’
மெக்சிகோ சர்வதேச டென்னிஸ் போட்டியில், ரபெல் நடால் ‘சாம்பியன்’ பட்டம் வென்றார்.