டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் “சாம்பியன்” பியான்கா ஆன்ட்ரீஸ்குவின் எழுச்சி + "||" + The rise of the US Open tennis "champion" Bianca Andreascu

அமெரிக்க ஓபன் டென்னிஸ் “சாம்பியன்” பியான்கா ஆன்ட்ரீஸ்குவின் எழுச்சி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் “சாம்பியன்” பியான்கா ஆன்ட்ரீஸ்குவின் எழுச்சி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கனடா வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்கு நேர் செட்டில் அமெரிக்க ஜாம்பவான் செரீனாவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
நியூயார்க்,

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் கடந்த 2 வார காலம் நடந்து வந்தது. இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை அரங்கேறிய பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் 8-ம் நிலை வீராங்கனையும், 6 முறை சாம்பியனுமான செரீனா வில்லியம்ஸ்(அமெரிக்கா), தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள பியான்கா ஆன்ட்ரீஸ்குடன் (கனடா) மல்லுகட்டினார்.


21 ஆண்டுகள் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் விளையாடிய அனுபவம் வாய்ந்த செரீனா வில்லியம்சுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கணிக்கப்பட்ட நிலையில் ‘இளம் புயல்’ ஆன்ட்ரீஸ்கு விசுவரூபம் எடுத்தார்.

அதிவேகமான ஷாட்டுகள் மூலம் மிரள வைத்த ஆன்ட்ரீஸ்கு, செரீனாவின் இரண்டு சர்வீஸ்களை முறியடித்து முதல் செட்டை எளிதில் வசப்படுத்தினார். 2-வது செட்டிலும் ஆன்ட்ரீஸ்குவின் ஆதிக்கமே முதலில் ஓங்கியது. ஒரு கட்டத்தில் 5-1 என்று முன்னிலையுடன் வெற்றிக்கனியை நெருங்கினார். அந்த சமயத்தில் எதிராளியின் ‘மேட்ச் பாயிண்ட்’ ஆபத்தில் இருந்து தன்னை தற்காத்துக் கொண்ட செரீனா வரிசையாக 4 கேம்களை வென்று 5-5 என்று சமனுக்கு கொண்டு வந்தார். உள்ளூர் ரசிகர்களின் கரகோஷமும், ஆதரவும் செரீனாவுக்கு தாறுமாறாக இருந்தது.

ஆனாலும் செரீனாவின் எழுச்சி சிறிது நேரத்திலேயே அடங்கிப் போனது. அடுத்த இரு கேம்களை தனதாக்கிய ஆன்ட்ரீஸ்கு இறுதியில் செரீனா தொட முடியாத அளவுக்கு ஒரு வலுவான ஷாட் அடித்து வெற்றிக்குரிய புள்ளியை சேகரித்து அதிர்ச்சி அளித்தார்.

1 மணி 40 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் பியான்கா ஆன்ட்ரீஸ்கு 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் செரீனாவை சாய்த்து முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் மகுடம் சூடினார். 8 டபுள் பால்ட்டும், பந்தை 33 முறை வெளியே அடித்தும் செய்த தவறுகள் செரீனாவுக்கு பின்னடைவாக அமைந்தது.

கனவு நனவான சந்தோஷத்தில் உணர்ச்சி வசப்பட்ட 19 வயதான பியான்கா ஆன்ட்ரீஸ்கு மைதானத்தில் சில வினாடிகள் உருண்டு புரண்டு முத்தமிட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். கனடா நாட்டவர் ஒருவர் கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை உச்சிமுகர்வது இதுவே முதல் முறையாகும்.

அமெரிக்க ஓபனில் பிரதான சுற்றில் அடியெடுத்து வைத்த முதலாவது ஆண்டிலேயே பட்டம் வென்ற முதல் வீராங்கனை என்ற சிறப்பும் பியான்கா ஆன்ட்ரீஸ்குவுக்கு கிடைத்தது. இதில் இன்னொரு சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால், செரீனா தனது முதலாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை ருசித்த போது, ஆன்ட்ரீஸ்கு பிறக்ககூடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாகை சூடிய பியான்கா ஆன்ட்ரீஸ்கு ரூ.27½ கோடியும், 2-வது இடத்தை பிடித்த செரீனா ரூ.13½ கோடியும் பரிசுத்தொகையாக பெற்றனர். இந்த வெற்றியின் மூலம் ஆன்ட்ரீஸ்கு இன்று வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறுகிறார். 

37 வயதான செரீனா வில்லியம்ஸ் இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று இருக்கிறார். இன்னும் ஒரு கிராண்ட்ஸ்லாம் வென்றால், அதிக கிராண்ட்ஸ்லாம் குவித்த சாதனையாளரான ஆஸ்திரேலியாவின் மார்க்கரெட் கோர்ட்டின் (24 கிராண்ட்ஸ்லாம்) சாதனையை சமன் செய்து விடுவார். இந்த முறை அச்சாதனையை எட்டும் முனைப்புடன் காத்திருந்த செரீனாவின் கனவை ஆன்ட்ரீஸ்கு தகர்த்து விட்டார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டியில் செரீனா கடைசியாக 2017-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனை கைப்பற்றி இருந்தார். குழந்தை பெற்றுக்கொண்டு சிறிது காலம் ஒதுங்கி இருந்த செரீனா மறுபிரவேசம் செய்த பிறகு 4 முறை கிராண்ட்ஸ்லாம் இறுதி ஆட்டத்திற்கு (2018 மற்றும் 2019-ம் ஆண்டில் விம்பிள்டன் 2 முறையும், அமெரிக்க ஓபன் 2 முறையும்) முன்னேறிய போதிலும், அதை பட்டமாக மாற்ற முடியவில்லை.

செரீனா கூறுகையில், ‘பியான்கா அற்புதமாக விளையாடினார். அவரை நினைத்து நான் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன். இந்த வெற்றிக்கு அவர் தகுதியானவர். நான் இன்னும் நன்றாக ஆடியிருக்கலாம். சாதனையை விரட்டிப்பிடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லவே தொடர்ந்து முயற்சிக்கிறேன்.’ என்று குறிப்பிட்டார்.

கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெதானி மாடக் சான்ட்ஸ் (அமெரிக்கா) - ஜாமி முர்ரே (இங்கிலாந்து) கூட்டணி 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஹாவ் சிங் சான் (சீனதைபே) - மைக்கேல் வீனஸ் (நியூசிலாந்து) இணையை தோற்கடித்து பட்டத்தை சொந்தமாக்கியது.

அமெரிக்க ஓபன் கலப்பு இரட்டையர் பட்டத்தை அடுத்தடுத்து ஒரு ஜோடி வெல்வது 1982-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

கனவு நனவானது

“எனது மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை. இந்த தருணத்தை அடைவதற்காக நான் உண்மையிலேயே கடினமாக உழைத்து இருக்கிறேன். இந்த வெற்றியின் மூலம் எனது நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது. செரீனா, டென்னிஸ் விளையாட்டில் ஒரு ஜாம்பவான். அவருக்கு எதிராக விளையாடும் அளவுக்கு இந்த நிலையை எட்டியிருப்பது வியப்புக்குரியது. இங்கு குழுமியிருக்கும் பெரும்பாலான ரசிகர்கள் செரீனா வெல்ல வேண்டும் என்று தான் விரும்பியிருப்பார்கள் என்பதை அறிவேன். அவர்களுக்காக நான் வருந்துகிறேன். எனது பெற்றோர் தான் எனக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக இருக்கிறார்கள். முதல் நாளில் இருந்தே என்னை நம்பிக்கையோடு ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். இல்லாவிட்டால் என்னால் சாதித்து இருக்க முடியாது ”

பியான்கா ஆன்ட்ரீஸ்குவின் எழுச்சி

19 வயதான பியான்கா ஆன்ட்ரீஸ்கு ஓராண்டுக்கு முன்பு தரவரிசையில் 208-வது இடத்தில் இருந்தார். அதன் பிறகு நம்ப முடியாத அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ள அவர் தற்போது அமெரிக்க ஓபனை கையில் ஏந்தியதோடு, உலக தரவரிசையில் 5-வது இடத்தையும் பிடித்துள்ளார்.

இவரது பெற்றோர் நிகு-மரியா, ருமேனியா நாட்டைச் சேர்ந்தவர்கள். தொழிலுக்காக கனடாவுக்கு இடம் பெயர்ந்த அவரது பெற்றோர் மகளுக்காக அங்கேயே நிரந்தரமாக குடியேறி விட்டார். ஆன்ட்ரீஸ்கு முதல் முறையாக டென்னிஸ் மட்டையை கையில் எடுத்த போது அவருக்கு வயது 7.

இந்த ஆண்டில் டாப்-10 இடத்திற்குள் உள்ள வீராங்கனைகளை 8 முறை சந்தித்து அனைத்திலும் ஆன்ட்ரீஸ்கு வெற்றி பெற்று இருக்கிறார்.

‘டீன்ஏஜ்’ பருவமுடைய ஒருவர் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வது கடந்த 13 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும். கடைசியாக 2006-ம் ஆண்டு ரஷியாவின் மரிய ஷரபோவா அமெரிக்க ஓபனில் தனது 19-வது வயதில் பட்டம் வென்று இருந்தார்.