‘வெற்றிகளை மறந்துவிட்டு, தோல்விகளை மட்டுமே பேசும் உலகம் இது’ - செரீனா வில்லியம்ஸ்


‘வெற்றிகளை மறந்துவிட்டு, தோல்விகளை மட்டுமே பேசும் உலகம் இது’ - செரீனா வில்லியம்ஸ்
x
தினத்தந்தி 14 Sep 2019 1:30 AM GMT (Updated: 13 Sep 2019 11:04 AM GMT)

பெண்கள் டென்னிஸ் உலகை வெகுகாலமாக தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த வில்லியம்ஸ் சகோதரிகளின் கதை சமீபகாலமாக மாற்றி எழுதப்பட்டு வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், வீனஸ் வில்லியம்ஸ் 15 வயது பள்ளி மாணவியிடம் தோற்றுப்போனார். அந்த சுவடு மறைவதற்குள், அவரது சகோதரியான செரீனா வில்லியம்ஸும், 19 வயது இளம் பெண்ணான பியான்கா ஆன்ட்ரீஸ்குவிடம் தோற்றிருக்கிறார். இது நடந்தது, சமீபத்தில் முடிந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில். இதனால் வில்லியம்ஸ் சகோதரிகள் இருவருமே, மனதளவில் உடைந்துபோய் உள்ளனர். தோல்வியில் துவண்டுவிடாமல், புன்னகையுடன் வலம் வரும், செரீனாவிடம் சிறு கலந்துரையாடல்....

வெற்றியும், தோல்வியும் சகஜமான ஒன்று. இருப்பினும் 2019-ம் வருடம் உங்களை கடுமையாக சோதிக்கிறதா?

வரலாறு என்றுமே ஒரேபோல் இருக்காது. வெற்றியாளர்களின் பெயர், காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும். இதை நான் நன்கு அறிவேன். நானும், வீனஸும், டென்னிஸ் உலகிற்குள் நுழைந்தபோது, பெரும் ஜாம்பவான்களை வீழ்த்தினோம். அன்று, வெற்றியின் சந்தோஷத்தை மட்டுமே உணர்ந்த நாங்கள், இன்று தோல்வி தரும் துக்கத்தையும் உணருகிறோம்.

நீங்கள் டென்னிஸில் பல உச்சங்களை தொட்டவர். ஆனால் சமீபகாலமாக, வெற்றி என்பது எட்டாக்கனியாகிவிட்டதே, ஏன்?

‘தலைமுறை மாற்றம்’ என்ற வார்த்தையை நன்கு அறிந்திருப்பீர்கள். அந்த தலைமுறை மாற்றம், தற்போது டென்னிஸ் உலகிலும் அரங்கேறிவருகிறது. எத்தனை நாட்கள்தான், இளம் தலைமுறையினர் குழந்தைகளாகவே இருக்க முடியும். அவர்களும், வெற்றியாளராக, சாதனையாளராக மாறவேண்டாமா?, அதைதான் காலம் நிகழ்த்தி கொண்டிருக்கிறது.

நீங்கள் வெல்லாத கோப்பை அல்ல. இருப்பினும் இன்றும் வெற்றி தாகத்தோடு இருப்பது எப்படி?

இளம் பெண்ணாக நான் நிறைய போட்டிகளையும், கோப்பைகளையும் வென்றிருக்கிறேன். ஆனால் ஒரு அன்னையாக, சில போட்டிகளை மட்டுமே வென்றிருக்கிறேன். என்னுடைய பெற்றோருக்கும், கணவர் அலெக்ஸிற்கும் பல வெற்றிகளை சமர்ப்பித்திருக்கிறேன். ஆனால், அன்பு மகள் ஒலிம்பியாவிற்கு பரிசளிக்கும் நோக்கில்தான், போட்டிகளில் கலந்து கொள்கிறேன்.

விம்பிள்டன் போட்டியில் வீனஸ், 15 வயது பள்ளி மாணவியிடம் வீழ்ந்தபோது, உங்களது அறிவுரை என்னவாக இருந்தது?

‘‘இதுவரை நீ வென்ற பட்டங்களை இவ்வுலகம் புகழாது. ஏன், நினைவில்கூட வைத்திருக்காது. ஆனால் பள்ளி மாணவியிடம் தோற்றதைதான், இறுதிவரை நினைவில் வைத்திருக்கும். ஏனெனில் வெற்றிகளை மறந்துவிட்டு, தோல்விகளை மட்டுமே பேசும் உலகில் நாம் வாழ்கிறோம். இது உன் சாபம் அல்ல, மனித குலத்திற்கே உரிய சாபம். அதனால் ஊர் சொல்லும் பழி பேச்சுக்களை மறந்துவிட்டு, விளையாட்டில் மட்டும் கவனத்தை செலுத்து. நடக்கவேண்டியவற்றை, உன் திறமை பார்த்து கொள்ளும்’’ என்று, வீனஸிற்கு நான் அறிவுரை கூறி யிருந்தேன். ஆனால் அடுத்த சில மாதங்களிலேயே அது எனக்கான அறிவுரையாக மாறியிருப்பது, ஆச்சரியமான ஒன்று.

Next Story