டென்னிஸ்

ஏ.டி.பி சேலஞ்சர் டென்னிஸ்: தொடர்ச்சியாக வென்று சாதிப்பேன் - இந்திய வீரர் சுமித் நாகல் பேட்டி + "||" + ATP Challenger Tennis: I Won It Again - Interview with Indian Player Sumit Nagel

ஏ.டி.பி சேலஞ்சர் டென்னிஸ்: தொடர்ச்சியாக வென்று சாதிப்பேன் - இந்திய வீரர் சுமித் நாகல் பேட்டி

ஏ.டி.பி சேலஞ்சர் டென்னிஸ்: தொடர்ச்சியாக வென்று சாதிப்பேன் - இந்திய வீரர் சுமித் நாகல் பேட்டி
அர்ஜென்டினாவில் நடந்த ஏ.டி.பி.சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சுமித் நாகல் ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றினார்.
பியூனஸ் அயர்ஸ்,

ஏ.டி.பி.சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டி அர்ஜென்டினாவில் உள்ள பியூனஸ் அயர்சில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 161-வது இடத்தில் இருந்த இந்திய வீரர் சுமித் நாகல், 166-வது இடத்தில் உள்ள அர்ஜென்டினா வீரர் பாகுன்டோ பாக்னிஸ்சை எதிர்கொண்டார்.


பயிற்சியாளர் இல்லாமல் களம் கண்ட சுமித் நாகல் அபாரமாக செயல்பட்டு 6-4, 6-2 என்ற நேர்செட்டில் பாகுன்டோ பாக்னிஸ்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். இந்த வெற்றியை பெற சுமித் நாகலுக்கு 1 மணி 40 நிமிடம் தேவைப்பட்டது.

அரியானாவை சேர்ந்த 22 வயதான சுமித் நாகல் வென்ற 2-வது ஏ.டி.பி. சேலஞ்சர் பட்டம் இதுவாகும். 2017-ம் ஆண்டு பெங்களூருவில் நடந்த சேலஞ்சர் போட்டியில் முதல் பட்டத்தை வென்று இருந்தார். இந்த வெற்றியின் மூலம் சுமித் நாகல் 80 தரவரிசை புள்ளியும், ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசும் பெற்றார். இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த பாகுன்டோ பாக்னிஸ்க்கு 49 தரவரிசை புள்ளியும், ரூ.3 லட்சம் ரொக்கப்பரிசும் கிடைத்தது.

இந்த வெற்றியின் மூலம் சுமித் நாகல் ஒற்றையர் தரவரிசையில் 26 இடங்கள் முன்னேறி 135-வது இடத்தை பிடித்துள்ளார். இது அவருடையை சிறந்த தவரிசையாகும். இதற்கு முன்பு அதிகபட்சமாக கடந்த மாதம் தொடக்கத்தில் சுமித் நாகல் 159-வது இடத்தில் இருந்தார். சமீபத்தில் நடந்த அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் சுமித் நாகல், முன்னாள் நம்பர் ஒன் வீரரான ரோஜர் பெடரருக்கு (சுவிட்சர்லாந்து) எதிராக ஒரு செட்டை வென்று தோல்வி அடைந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2-வது இடம் பெற்ற பாகுன்டோ பாக்னிஸ் தரவரிசையில் 16 இடங்கள் ஏற்றம் கண்டு 150-வது இடத்தை பிடித்துள்ளார்.

வெற்றிக்கு பிறகு சுமித் நாகல் அளித்த ஒரு பேட்டியில், ‘அர்ஜென்டினாவில் நான் விளையாடுவது இதுவே முதல்முறையாகும். ஐரோப்பிய கண்டத்தில் அதிக போட்டிகள் இல்லாததால் இங்கு வந்து விளையாட நான் முடிவு செய்தேன். இந்த போட்டியில் சிறந்த திறனை வெளிப்படுத்த முடியும் என்று நினைத்தேன். இந்த வார தொடக்கம் முதலே நான் சிறப்பாக செயல்பட்டேன். இந்த வெற்றியின் மூலம் ‘டாப்-100’ வரிசையை நெருங்கி இருப்பதுடன், அந்த இலக்கை எட்ட முடியும் என்ற நம்பிக்கையை கிடைத்து இருக்கிறது. கடந்த வருடம் சிலி நாட்டு வீரர் கிறிஸ்டியன் காரின் தொடர்ச்சியாக 3 சேலஞ்சர் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றார். அதேபோல் நானும் தொடர்ச்சியாக வென்று சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அமெரிக்க ஓபன் போட்டியில் பெடரருடன் மோதிய ஆட்டத்தில் மிகவும் நம்பிக்கையுடன் செயல்பட்டேன். ஒரு வீரர் நம்பிக்கையுடன் செயல்படும் போது எல்லாமே மாறும். அது தான் டென்னிஸ். அது உங்களை தோற்கடிக்க முடியாதவராக உருவாக்கும். இந்திய டென்னிஸ் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது. ஒற்றைய தரவரிசையில் சில வீரர்கள் ‘டாப்-200-க்குள் இடம் பிடித்துள்ளனர்’ என்று தெரிவித்தார்.