டென்னிஸ்

டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி: ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி ‘சாம்பியன்’ + "||" + Tennis Championship Tournament: Australian hero Ashley Barty 'Champion'

டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி: ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி ‘சாம்பியன்’

டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி: ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி ‘சாம்பியன்’
பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்டி, உக்ரைனின் ஸ்விடோலினாவை வீழ்த்தி சாம்பியன் கோப்பையுடன் ரூ.31 கோடி பரிசுத்தொகையையும் கைப்பற்றினார்.
ஷென்ஜென்,

டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் 49-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் ஷென்ஜென் நகரில் நடந்து வந்தது. டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே கால்பதித்த இந்த டென்னிஸ் திருவிழாவில் லீக் மற்றும் நாக்-அவுட் முடிவில் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரம் ஆஷ்லி பார்டியும் (ஆஸ்திரேலியா), நடப்பு சாம்பியனும் 8-ம் நிலை வீராங்கனையுமான எலினா ஸ்விடோலினாவும் (உக்ரைன்) இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர்.


இந்த நிலையில் இவர்களில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் நேற்று அரங்கேறியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இருவரும் தங்களது சர்வீஸ்களை புள்ளிகளாக மாற்றுவதில் கவனமுடன் செயல்பட்டனர். இதனால் சமநிலை நீடித்து வந்த நிலையில், 10-வது கேமில் ஸ்விடோலினாவின் சர்வீசை முறியடித்து ஆஷ்லி பார்டி முதல் செட்டை வசப்படுத்தினார்.

2-வது செட்டில் ஸ்விடோலினா ஓரளவு சவால் கொடுத்தாலும் அவரது 3 சர்வீஸ்களை முறியடித்து இந்த செட்டையும் ஆஷ்லி தனதாக்கினார். 1 மணி 27 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் ஆஷ்லி பார்டி 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஸ்விடோலினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கினார். தோல்வியே சந்திக்காமல் கம்பீரமாக இறுதி சுற்றுக்கு வந்த ஸ்விடோலினா, முக்கியமான ஆட்டத்தில் ஜொலிக்க தவறி விட்டார். ஆஷ்லி பார்டிக்கு எதிராக ஸ்விடோலினா சந்தித்த முதல் தோல்வி இதுதான். இதற்கு முன்பு 5 முறை ஆஷ்லி பார்டியை தோற்கடித்து இருந்தார்.

சாம்பியன் பட்டத்திற்குரிய பரிசு ரூ.24 கோடியாகும். மேலும் போட்டியில் பங்கேற்பு கட்டணம் ரூ.2¾ கோடி, ரவுண்ட்-ராபின் லீக் சுற்றில் ஒவ்வொரு வெற்றிக்கும் ரூ.2.16 கோடி என்று மொத்தம் ரூ.31 கோடியை பரிசுத்தொகையாக ஆஷ்லி பார்டி அள்ளினார். டென்னிஸ் வரலாற்றில் ஒரு தொடரில் வழங்கப்பட்ட அதிகபட்ச பரிசுத்தொகை இது தான். 2-வது இடம் பிடித்த ஸ்விடோலினாவுக்கு ரூ.17 கோடி கிட்டியது.

இந்த பட்டத்தை ஆஸ்திரேலிய மங்கை ஒருவர் உச்சிமுகர்வது கடந்த 43 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும். கடைசியாக 1976-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் எவோன் கூலாகாங் காவ்லி இந்த பட்டத்தை வென்று இருந்தார். மேலும் பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதலாவது ஆண்டிலேயே வாகை சூடிய 5-வது மங்கை என்ற சிறப்பையும் ஆஷ்லி பார்டி பெற்றார். இதற்கு முன்பு அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் (2001-ம் ஆண்டு), ரஷியாவின் மரிய ஷரபோவா (2004), செக்குடியரசின் பெட்ரா கிவிடோவா (2011), சுலோவக்கியாவின் டொமினிகா சிபுல்கோவா (2016) ஆகியோர் தங்களது முதலாவது சீசனிலேயே வெற்றி கண்டிருந்தனர்.

இனி புதிய சீசன் தொடங்குவது வரை ஆஷ்லி பார்டி தான் நம்பர் ஒன். ஆண்டின் இறுதியில் நம்பர் ஒன் இடத்தை ஆஸ்திரேலிய வீராங்கனை தக்கவைத்திருப்பது இதுவே முதல்முறையாகும்.

23 வயதான ஆஷ்லி பார்டி 2014-ம் ஆண்டின் இறுதியில் டென்னிசில் இருந்து விலகி, சிறிது காலம் கிரிக்கெட் விளையாடினார். ஆஸ்திரேலிய அணிக்காக பெண்கள் பிக்பாஷ் கிரிக்கெட்டிலும் பங்கேற்றார். அதன் பிறகு கிரிக்கெட்டை துறந்து டென்னிசில் மறுபிரவேசம் செய்து இப்போது உச்சத்தை எட்டியிருக்கிறார். தனது முதலாவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக பிரெஞ்ச் ஓபனை வென்றது நினைவு கூரத்தக்கது. 


 இதன் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான டைமியா பாபோஸ் (ஹங்கேரி)- கிறிஸ்டினோ மிலாடெனோவிச் (பிரான்ஸ்) கூட்டணி 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் பார்போரா ஸ்டிரிகோவா (செக்குடியரசு)-ஹிசை சு-வெய் (சீனதைபே) இணையை தோற்கடித்து மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தோல்வியே சந்திக்காமல் பட்டத்துக்கு முத்தமிட்ட இவர்களுக்கு ரூ.7 கோடி பரிசுத்தொகையாக கிடைத்தது.