டென்னிஸ்

முன்னணி 8 வீரர்கள் பங்கேற்கும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடக்கம் + "||" + The men's tennis championship tournament for the top 8 players starts today

முன்னணி 8 வீரர்கள் பங்கேற்கும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடக்கம்

முன்னணி 8 வீரர்கள் பங்கேற்கும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடக்கம்
முன்னணி 8 வீரர்கள் பங்கேற்கும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது.
லண்டன்,

ஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டி நிறைவடைந்ததும், டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் நடத்தப்படுகிறது. இதன்படி 50-வது ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டன் நகரில் இன்று தொடங்கி 17-ந்தேதி வரை நடக்கிறது. இதில் ஒற்றையர் பிரிவில் களம் காணும் 8 வீரர்களும், ஜாம்பவான்கள் ஆந்த்ரே அகாசி, ஜோர்ன் போர்க் என்ற பெயரில் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.


‘அகாசி’ பிரிவில் ‘நம்பர் ஒன்’ வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்), டேனில் மெட்விடேவ் (ரஷியா), ஸ்டெபனாஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்), நடப்பு சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) ஆகியோரும், ‘போர்க்’ பிரிவில் 2-ம் நிலை வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா), ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), டொமினிக் திம் (ஆஸ்திரியா), மேட்டோ பெரேட்டினி (இத்தாலி) ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். ரவுண்ட் ராபின் அடிப்படையில் ஒவ்வொரு வீரரும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரைஇறுதிக்கு முன்னேறுவார்கள்.

ரபெல் நடால், ஜோகோவிச் ஆகியோர் இடையே ஆண்டின் இறுதியில் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பது யார்? என்பதில் கடும் போட்டி நிலவுகிறது. இந்த போட்டியின் முடிவில் அது தீர்மானிக்கப்படும். தரவரிசையில் ஜோகோவிச்சை விட 640 புள்ளிகள் கூடுதலாக பெற்றுள்ள நடால் தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டியை எட்டினால் நம்பர் ஒன் இடத்தை சிக்கலின்றி தக்க வைத்துக் கொள்ள முடியும்.

வயிற்றில் ஏற்பட்ட காயம் காரணமாக பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் இருந்து பாதியில் விலகிய ரபெல் நடால் இந்த தொடர் முழுவதும் தன்னால் விளையாட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனாலும் அவரால் முழு உடல்தகுதியுடன் ஆட முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. டென்னிஸ் உலகில் பல சாதனைகளை நிகழ்த்தி இருக்கும் 33 வயதான நடால், இன்னும் இந்த பட்டத்தை ஒரு போதும் உச்சிமுகர்ந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் பாரீஸ் மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்று சூப்பர் பார்மில் உள்ள 5 முறை சாம்பியனான ஜோகோவிச் இங்கு சாம்பியன் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது.

6 முறை சாம்பியனான 38 வயதான ரோஜர் பெடரர் 2011-ம் ஆண்டுக்கு பிறகு வெற்றி பெற்றதில்லை. நீண்ட கால ஏக்கத்தை தணிப்பாரா? என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகிறது.

இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.64 கோடியாகும். இதில் பட்டம் வெல்லும் வீரருக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை ரூ.9.13 கோடியாகும். இது தவிர பங்கேற்பு கட்டணம், ரவுண்ட் ராபின் லீக் வெற்றி, அரைஇறுதி வெற்றிக்குரிய பரிசு இவை எல்லாவற்றையும் கணக்கிட்டால் தோல்வியே சந்திக்காமல் ஒரு வீரர் மகுடம் சூடும் போது மொத்தம் ரூ.19½ கோடி பரிசுத்தொகையும், 1,500 தரவரிசை புள்ளிகளையும் தட்டிச் செல்லலாம்.

இரட்டையர் பிரிவிலும் டாப்-8 ஜோடிகள் கலந்து கொள்கிறது. இரட்டையர் பிரிவில் தோல்வி பக்கமே செல்லாமல் பட்டம் வெல்லும் ஜோடிக்கு ரூ.3¾ கோடி பரிசுத்தொகையாக கிடைக் கும்.

முதல் நாளான இன்று ஜோகோவிச்-பெரேட்டினி, பெடரர்-டொமினிக் திம் ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.