ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ்: சானியா மிர்சா ஜோடி அரைஇறுதிக்கு முன்னேற்றம்


ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ்: சானியா மிர்சா ஜோடி அரைஇறுதிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 16 Jan 2020 11:15 PM GMT (Updated: 16 Jan 2020 6:57 PM GMT)

ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா ஜோடி அரைஇறுதிக்கு முன்னேறியது.

ஹோபர்ட்,

ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா ஜோடி அரைஇறுதிக்கு முன்னேறியது.

சர்வதேச டென்னிஸ்

மொத்தம் ரூ.1.94 கோடி பரிசுத் தொகைக்கான ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

காயம் மற்றும் குழந்தை பெற்றதால் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த சீன ஓபன் டென்னிஸ் போட்டிக்கு பிறகு முதல்முறையாக களம் கண்ட இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா, உக்ரைன் வீராங்கனை நாடியா கிச்செனோக்குடன் இணைந்து பெண்கள் இரட்டையர் பிரிவில் பங்கேற்றுள்ளார்.

முதல் சுற்றில் ஒக்சனா கலாஷ்னிகோவா (ஜார்ஜியா)-மியூ கட்டோ (ஜப்பான்) இணையை வீழ்த்திய சானியா மிர்சா-நாடியா கிச்செனோக் ஜோடி நேற்று நடந்த கால்இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் வானியா கிங்-கிறிஸ்டினா மெக்ஹாலே இணையை எதிர்கொண்டது.

அரைஇறுதியில் சானியா மிர்சா ஜோடி

1 மணி 24 நிமிடம் நீடித்த விறுவிறுப்பான இந்த ஆட்டம் டைபிரேக்கர் வரை சென்றது. டைபிரேக்கரில் ஆதிக்கம் செலுத்திய சானியா மிர்சா-நாடியா கிச்செனோக் ஜோடி 6-2, 4-6, 10-4 என்ற செட் கணக்கில் வானியா கிங்- கிறிஸ்டினா மெக்ஹாலே கூட்டணியை வீழ்த்தி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.

அரைஇறுதி ஆட்டத்தில் 33 வயதான சானியா மிர்சா ஜோடி, தமரா ஜிடான்செக் (சுலோவேனியா) - மேரி போஸ்கோவா (செக்குடியரசு) இணையை சந்திக்கிறது.

சீன வீராங்கனை வெற்றி

இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் தகுதி சுற்று வீராங்கனை ஹீதர் வாட்சன் (இங்கிலாந்து) 6-7 (5-7), 6-4, 7-5 என்ற செட் கணக்கில் எலிசி மெர்டென்சை (பெல்ஜியம்) வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் சீன வீராங்கனை ஜாங் ஷூய் 6-1, 6-4 என்ற நேர்செட்டில் லாரென் டேவிசை (அமெரிக்கா) தோற்கடித்து அரைஇறுதிக்கு தகுதி கண்டார். ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா காயம் காரணமாக விலகியதால் ரஷிய வீராங்கனை குடெர்மிடோவா கால்இறுதியில் விளையாடாமலேயே அரைஇறுதிக்கு முன்னேறினார்.

Next Story