சிறுமியிடம் வாழைப்பழ தோலை உரித்து தரச்சொன்ன டென்னிஸ் வீரர்... குவியும் கண்டனம்


சிறுமியிடம் வாழைப்பழ தோலை உரித்து தரச்சொன்ன டென்னிஸ் வீரர்... குவியும் கண்டனம்
x
தினத்தந்தி 21 Jan 2020 12:13 PM GMT (Updated: 21 Jan 2020 12:13 PM GMT)

வாழைப்பழத்தை உரித்து தரச் சொன்ன வீரரை கண்டித்த நடுவர். வீரருக்கு எதிராக இணையத்தில் கண்டனங்கள் குவிகின்றன.

மெல்போர்ன்

இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. இந்த தொடருக்கான தகுதிச்சுற்றில் விளையாடிய பிரான்ஸைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ஒருவர், வாழைப்பழத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். டென்னிஸ் போட்டிகளில் பந்துகளை எடுப்பதற்காக சிறுவர், சிறுமிகள் நியமிக்கப்பட்டிருப்பார்கள். பெரும்பாலும் இவர்கள் டென்னிஸ் பயிற்சி பெறும் சிறுவர்களாக இருப்பார்கள். டென்னிஸ் அனுபவத்திற்காக அவர்கள் பந்துகளை எடுக்கும் பணியில் இருப்பார்கள்.

இந்நிலையில் போட்டியின் நடுவே ஓய்வாக அமர்ந்திருந்த பிரான்ஸ் வீரர் எலியட் பெஞ்சட்ரிட், தன்னிடம் இருந்த வாழைப்பழத்தை உரித்து தரும்படி பந்துகளை எடுக்கும் சிறுமியிடம் கேட்டுள்ளார். அந்தப் பெண் வீரரின் வேண்டுகோளைக் கண்டு அதிர்ச்சியடைந்தாள்,  வாழைப்பழத்தை அந்த சிறுமியும் வாங்க, இதனைக் கண்ட நடுவர் ஜான் ப்ளூம் உடனடியாக பழத்தை வீரரிடமே திரும்ப அளிக்கும்படி கூறினார். சிறுமியை அங்கிருந்து வெளியேறும்படி கூறினார். 

இதனால் ஆத்திரமடைந்த அந்த வீரர் பழத்தை உறிக்காமலேயே பாதியை கடித்து தின்றுவிட்டு, மீதியை தனது பையில் போட்டுகொண்டு நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர் கைகளிலும் விரல்களிலும் கட்டுகள் இருப்பதால் அதை உரிப்பதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. டென்னிஸ் ரசிகர்கள் பலரும் வீரரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த சிறுமி வீரர்களின் வேலைக்காரர் இல்லை என்றும் அவரின் வேலையை மட்டும் பார்க்க விடுங்கள் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் நடுவரின் செயலுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.

பெஞ்சட்ரிட்  தனது எதிரியைத் தோற்கடித்து முக்கிய போட்டிக்கு தகுதி பெற்றார். 

Next Story