ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 100-வது வெற்றியை பெற்றார், பெடரர்


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 100-வது வெற்றியை பெற்றார், பெடரர்
x
தினத்தந்தி 25 Jan 2020 12:12 AM GMT (Updated: 25 Jan 2020 12:12 AM GMT)

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் தனது 100-வது வெற்றியை 4 மணி நேரம் போராடி ருசித்தார். முன்னாள் சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் 3-வது சுற்றுடன் வெளியேற்றப்பட்டார்.

மெல்போர்ன்,

பெடரர் ‘100’

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 6 முறை சாம்பியனும், 3-ம் நிலை வீரருமான சுவிட்சர்லாந்து ஜாம்பவான் ரோஜர் பெடரர், தரவரிசையில் 47-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மனை சந்தித்தார். மில்மன், பெடரருக்கு கடும் குடைச்சல் கொடுத்ததால் களத்தில் அனல் பறந்தது. தலா 2 செட் வீதம் இருவரும் கைப்பற்றிய நிலையில், கடைசி செட் மேலும் விறுவிறுப்பானது. இதில் அவர்கள் தங்களது சர்வீஸ்களை மட்டும் புள்ளிகளாக மாற்றுவதில் கவனம் செலுத்தியதால் 6-6 என்று சமநிலை ஏற்பட்டது. இதையடுத்து சூப்பர் டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. டைபிரேக்கரில் தொடக்கத்தில் பெடரர் பந்தை வலையிலும், வெளியிலும் அடித்து தவறிழைக்க 4-8 என்ற கணக்கில் பின்தங்கி தோல்வியின் விளிம்புக்கு சென்றார். ஆனாலும் மனம் தளராமல் சுதாரித்து கொண்டு சரிவில் இருந்து மீண்ட பெடரர் தொடர்ச்சியாக 6 புள்ளிகளை வசப்படுத்தி ஒரு வழியாக வெற்றிக்கனியை பறித்தார். ஆஸ்திரேலிய நேரப்படி நள்ளிரவு 12 மணியை தாண்டியும் நீடித்த இந்த ஆட்டத்தில் பெடரர் 4-6, 7-6 (7-2), 6-4, 4-6, 7-6 (10-8) என்ற செட் கணக்கில் மில்மனை சாய்த்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றிக்காக பெடரர் 4 மணி 3 நிமிடங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. 38 வயதான பெடரர் ஆஸ்திரேலிய ஓபனில் ருசித்த 100-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் இங்கு ‘வெற்றியில் செஞ்சுரி’ போட்ட முதல் வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். பெடரர் ஆஸ்திரேலிய ஓபனில் 100 வெற்றிகளுடன் 14 ஆட்டங்களில் தோல்வியும் சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.




 


செரீனா ‘அவுட்’

பெண்கள் ஒற்றையர் பிரிவில் பல அதிர்ச்சி தோல்விகளை பார்க்க முடிந்தது. ஆஸ்திரேலிய ஓபனை 7 முறை வென்றரும், முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), 29-ம் நிலை வீராங்கனை சீனாவின் கியாங் வாங்கிடம் 4-6, 7-6 (2), 5-7 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார். இதே வாங்கை அமெரிக்க ஓபனில் செரீனா 6-1, 6-0 என்ற நேர் செட்டில் ஊதித்தள்ளினார். அதற்கு கியாங் வாங், இப்போது சுடச்சுட பதிலடி கொடுத்து விட்டார்.

38 வயதான செரீனா வில்லியம்ஸ் குழந்தை பெற்றுக் கொண்ட பிறகு எந்த கிராண்ட் ஸ்லாமும் வெல்லவில்லை. இன்னும் ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினால், அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவரான ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனை மார்கரெட் கோர்ட்டின் (24 கிராண்ட்ஸ்லாம்) சாதனையை சமன் செய்யலாம். அவரது கனவு இந்த முறையும் தகர்ந்து விட்டது. பந்தை வலுவாக வெளியே அடித்து எதிராளிக்கு புள்ளிகளை தாரை வார்க்கும் தவறுகளை அளவுக்கு அதிகமாக செய்ததால் (56 முறை) அது செரீனாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

ஒசாகாவும்...

இதே போல் பட்டம் வெல்லும் வாய்ப்பில் இருந்த நடப்பு சாம்பியனும், தரவரிசையில் 4-வது இடம் வகிப்பவருமான நவோமி ஒசாகா (ஜப்பான்), அமெரிக்காவின் 15 வயதான கோகோ காப்பிடம் 3-6, 4-6 என்ற நேர் செட்டில் ‘சரண்’ அடைந்தார். 67 நிமிடங்களில் ஒசாகாவின் சவாலுக்கு முடிவு கட்டிய கோகோ காப், முதல் சுற்றில் வீனஸ் வில்லியம்சை வெளியேற்றியது நினைவிருக்கலாம்.

மற்றபடி பெண்கள் பிரிவில் ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா), கிவிடோவா (செக்குடியரசு), ஆண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் ஜோகோவிச் (செர்பியா), மிலோஸ் ராவ்னிக் (கனடா), மரின் சிலிச் (குரோஷியா), பாபியோ போக்னினி (இத்தாலி) உள்ளிட்டோர் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.



 


விடைபெற்றார் வோஸ்னியாக்கி

டென்னிசில் இருந்து விடைபெற்ற வோஸ்னியாக்கி தனக்கு வழங்கப்பட்ட நினைவுப்பரிசை ரசிகர்களுக்கு காண்பித்தகாட்சி.
முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கரோலினா வோஸ்னியாக்கி (டென்மார்க்), இந்த ஆஸ்திரேலிய ஓபனுடன் தனது 15 ஆண்டு கால டென்னிஸ் வாழ்க்கைக்கு முழுக்கு போடப்போவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார். நேற்று தனது 3-வது சுற்றில் ஆன்ஸ் ஜாபெரிடம் (துனிசியா) 5-7, 6-3, 5-7 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இத்துடன் டென்னிசில் இருந்து விடைபெற்ற வோஸ்னியாக்கி, ரசிகர்கள் மத்தியில் பேசும் போது உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டார். ‘கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்ல வேண்டும், நம்பர் ஒன் இடத்தை அலங்கரிக்க வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. அது நிறைவேறிய திருப்தியுடன் விலகுகிறேன்’ என்றார். 29 வயதான வோஸ்னியாக்கி 2018-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபனை தனதாக்கினார். அவர் வென்ற ஒரே கிராண்ட்ஸ்லாம் மகுடம் இது தான்.



Next Story