ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் நடால், ஹாலெப்


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் நடால், ஹாலெப்
x
தினத்தந்தி 26 Jan 2020 12:09 AM GMT (Updated: 26 Jan 2020 12:09 AM GMT)

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நடால், ஹாலெப் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

மெல்போர்ன்,

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டங்கள் நேற்றும் தொடர்ந்து நடந்தது.

ஆண்கள் பிரிவில் ‘நம்பர் ஒன்’ வீரர் ஸ்பெயினின் ரபெல் நடால் 6-1, 6-2, 6-4 என்ற நேர் செட்டில் சக நாட்டவர் காரெனோ பஸ்தாவை எளிதில் வீழ்த்தினார். 5-ம் நிலை வீரர் டொமினிக் திம் (ஆஸ்திரியா) தன்னை எதிர்த்து நின்ற அமெரிக்காவின் டெய்லர் பிரைட்சை 6-2, 6-4, 6-7 (5-7), 6-4 என்ற செட் கணக்கில் விரட்டினார்.

அதே சமயம் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் புகுந்த ஆஸ்திரேலியாவின் நிக் கைர்ஜியோஸ், 3-வது தடையை கடக்க ஒரு யுத்தமே நடத்த வேண்டி இருந்தது. அவர் 17-ம் நிலை வீரர் கச்சனோவை சந்தித்தார். முதல் செட்டை தவிர்த்து மற்ற அனைத்து செட்டும் டைபிரேக்கர் வரை நகர்ந்த திரிலிங்கான இந்த ஆட்டத்தில் கைர்ஜியோஸ் 6-2, 7-6 (7-5), 6-7 (6-8), 6-7 (7-9), 7-6 (10-8) என்ற செட் கணக்கில் கச்சனோவை தோற்கடித்தார். 4 மணி 26 நிமிடங்கள் இந்த ஆட்டம் நீடித்தது. கைர்ஜியோஸ் 33 ஏஸ் சர்வீஸ்கள் வீசியது வெற்றிக்கு உதவிகரமாக அமைந்தது. அபாயகரமான வீரர்களில் ஒருவராக வர்ணிக்கப்படும் தரவரிசையில் 26-வது இடம் வகிக்கும் கைர்ஜியோஸ் 4-வது சுற்றில் நடாலுடன் மல்லுகட்டுகிறார்.

போபண்ணா ஜோடி வெற்றி

டேனில் மெட்விடேவ் (ரஷியா), கேல் மான்பில்ஸ் (பிரான்ஸ்), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), ஆந்த்ரே ருப்லெவ் (ரஷியா), வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) ஆகியோரும் 4-வது சுற்றை எட்டினர்.

ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் தோல்வி அடைந்த இந்திய வீரர் ரோகன் போபண்ணா, கலப்பு இரட்டையரில் உக்ரைன் வீராங்கனை நாடியா கிச்செனோக்குடன் கைகோர்த்தார். இதன் முதல் சுற்றில் போபண்ணா-கிச்செனோக் ஜோடி 7-5, 4-6 (10-6) என்ற செட் கணக்கில் லுட்மைலா கிச்செனோக் (உக்ரைன்)- ஆஸ்டின் கிராஜிசெக் (அமெரிக்கா) இணையை வென்றது.

பிளிஸ்கோவா தோல்வி

பெண்கள் பிரிவில் தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை 30-ம் நிலை வீராங்கனை ரஷியாவின் அனஸ்டசியா பாவ்லிசென்கோவா 7-6 (7-4), 7-6 (7-3) என்ற நேர் செட் கணக்கில் வெளியேற்றினார். இந்த ஆட்டம் 2 மணி 25 நிமிடங்கள் நீடித்தது. பிளிஸ்கோவாவுக்கு எதிராக 7-வது முறையாக மோதிய பாவ்லிசென்கோவா அதில் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

இதே போல் 7-ம் நிலை வீராங்கனை பெலின்டா பென்சிச்சுக்கு (சுவிட்சர்லாந்து) 6-0, 6-1 என்ற நேர் செட் கணக்கில் தரவரிசையில் 31-வது இடத்தில் உள்ள அனெட் கோன்டாவெய்ட் (எஸ்தோனியா) ‘செக்’ வைத்தார். ‘முன்னணி வீராங் கனைகள் தொடக்க கட்ட ஆட்டங்களிலேயே தோல்வி அடைவது சகஜம். அது தான் டென்னிஸ். கணிக்க முடியாத ஒரு விளையாட்டு டென்னிஸ்’ என்று பென்சிச் குறிப்பிட்டார்.

ஹாலெப் அபாரம்

விம்பிள்டன் சாம்பியனான சிமோனா ஹாலெப் 6-1, 6-4 என்ற நேர் செட்டில் புதின்ட்செவாவை (கஜகஸ்தான்) பந்தாடினார். ஹாலெப் 4-வது சுற்றில் எலிஸ் மெர்டென்சை (பெல்ஜியம்) சந்திக்கிறார். இதே போல் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கார்பின் முகுருஜா, 5-ம் நிலை வீராங்கனை எலினா ஸ்விடோலினாவை 6-1, 6-2 என்ற நேர் செட்டில் பதம் பார்த்தார். மற்றொரு முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) தனது 3-வது சுற்றில் கமிலா ஜியார்கியை (இத்தாலி) 6-2, 6-7 (4-7), 6-3 என்ற செட் கணக்கில் போராடி தோற்கடித்தார்.



 


போலந்து நாட்டின் இளம் புயல் ஸ்விடேக் 7-5, 6-3 என்ற நேர் செட்டில் டோனா வெகிச்சை (குரோஷியா) சாய்த்தார். ஆஸ்திரேலிய ஓபனில் முதல்முறையாக 4-வது சுற்றை எட்டியுள்ள 18 வயதான ஸ்விடேக் அடுத்து கோன்டாவெய்ட்டை எதிர்கொள்கிறார்.


Next Story