ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், பெடரர் கால்இறுதிக்கு தகுதி


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், பெடரர் கால்இறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 27 Jan 2020 12:04 AM GMT (Updated: 27 Jan 2020 12:04 AM GMT)

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், பெடரர் கால்இறுதிக்கு தகுதி பெற்றனர்.

மெல்போர்ன்,

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ள இந்த போட்டியில் ஒற்றையர் பிரிவில் நேற்று 4-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன.

ஆண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-4, 6-4 என்ற நேர் செட்டில் டியாகோ ஸ்வாட்ஸ்மனை (அர்ஜென்டினா) வெளியேற்றி 11-வது முறையாக கால்இறுதியை எட்டினார்.

6 முறை சாம்பியனான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), 67-ம் நிலை வீரர் மார்டோன் புக்சோவிக்சுடன் (ஹங்கேரி) மோதினார். இதில் முதல் செட்டை கோட்டைவிட்ட பெடரர் அடுத்த செட்டுகளில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி, எதிராளியை அடக்கினார். 4-6, 6-1, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றியை ருசித்த பெடரர் 15-வது முறையாக ஆஸ்திரேலிய ஓபனில் கால்இறுதிக்கு முன்னேறினார். ஆஸ்திரேலிய ஓபனில் அதிக முறை கால்இறுதியை எட்டிய வீரர் என்ற பெருமையும் பெடரருக்கு கிடைத்தது.

அமெரிக்காவின் டெனிஸ் சான்ட்கிரின் தன்னை எதிர்த்த பாபியோ போக்னினியை (இத்தாலி) 7-6 (7-5), 7-5, 6-7 (2-7), 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். மணிக்கு அதிகபட்சமாக 208 கிலோமீட்டர் வேகம் வரை சர்வீஸ் போட்ட சான்ட்கிரின், 21 ஏஸ் சர்வீஸ்களையும் வீசி மிரட்டினார். கனடாவின் மிலோஸ் ராவ்னிக் 6-4, 6-3, 7-5 என்ற நேர் செட்டில் மரின் சிலிச்சை (குரோஷியா) விரட்டினார். கால்இறுதி ஆட்டங்களில் சான்ட்கிரின் பெடரரையும், மிலோஸ் ராவ்னிக், ஜோகோவிச்சையும் சந்திக்க உள்ளனர்.



 


பெண்கள் பிரிவில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) 6-3, 1-6, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் அலிசன் ரிஸ்கேவை போராடி வீழ்த்தினார். கடந்த ஆண்டு விம்பிள்டன் 4-வது சுற்றில் இதே அலிசன் ரிஸ்கேவிடம் ஆஷ்லி தோற்று இருந்தார். அதற்கு இப்போது பழிதீர்த்துக் கொண்டார்.

துனிசியா நாட்டு வீராங்கனை ஆன்ஸ் ஜாபெர் 7-6(7-4), 6-1 என்ற நேர் செட் கணக்கில் சீன வீராங்கனை கியாங் வாங்கை சாய்த்து கால்இறுதிக்குள் நுழைந்தார். இதன் மூலம் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டி ஒன்றில் கால்இறுதி சுற்றை எட்டிய அரபு மொழி பேசும் நாட்டைச் சேர்ந்த முதல் வீராங்கனை என்ற வரலாற்று சாதனைக்கு ஆன்ஸ் ஜாபெர் சொந்தக்காரர் ஆனார். தரவரிசையில் 78-வது இடம் வகிக்கும் 25 வயதான ஆன்ஸ் ஜாபெர் கூறுகையில் ‘சிறந்த ஆட்டத்தின் மூலம் துனிசியா மற்றும் அரபு நாட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்க முயற்சிக்கிறேன். துனிசியாவில் எனது 3 வயதில் இருந்து 17 வயது வரை பயிற்சி மேற்கொண்டேன். அதனால் நான் 100 சதவீதம் துனிசியாவின் தயாரிப்பு தான். எனது ஆட்டத்தை எங்கள் நாட்டில் அதிகாலையில் பார்த்து நிறைய பேர் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளனர். உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது’ என்றார்.

மற்ற ஆட்டங்களில் செக்குடியரசின் பெட்ரா கிவிடோவா 6-7(4-7), 6-3, 6-2 என்ற செட் கணக்கில் மரியா சக்காரியையும் (கிரீஸ்), அமெரிக்காவின் சோபியா கெனின் 6-7(5-7), 6-3, 6-0 என்ற செட் கணக்கில் சக நாட்டவர் 15 வயதான கோகோ காப்பையும் வீழ்த்தினர். கிராண்ட்ஸ்லாமில் முதல்முறையாக கால்இறுதிக்கு வந்துள்ள சோபியா கெனின் அடுத்து ஆன்ஸ் ஜாபெரை சந்திக்கிறார்.

கலப்பு இரட்டையர் பிரிவு இந்தியர்களுக்கு மகிழ்ச்சிகரமாக அமைந்தது. இந்திய மூத்த வீரர் லியாண்டர் பெயஸ், லாத்வியா வீராங்கனை ஆஸ்டாபென்கோவுடன் இணைந்துள்ளார். இவர்கள் முதல் சுற்றில் 6-7 (4-7), 6-3 (10-6) என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஸ்டோம் சான்டெர்ஸ், மார்க் போல்மன்ஸ் இணையை வீழ்த்தினர்.

இந்திய வீரர் ரோகன் போபண்ணா, உக்ரைன் வீராங்கனை நாடியா கிச்செனோக் ஜோடி தங்களது 2-வது சுற்றில் 6-4, 7-6 (7-4) என்ற நேர் செட் கணக்கில் நிகோல் மெலிசார் (அமெரிக்கா)- புருனோ சோர்ஸ் (பிரேசில்) இணையை தோற்கடித்து கால்இறுதியை உறுதி செய்தது.


Next Story