டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நடால், ஹாலெப் கால்இறுதிக்கு முன்னேற்றம் + "||" + Australian Open Tennis: Nadal, Halep advance to quarter-finals

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நடால், ஹாலெப் கால்இறுதிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நடால், ஹாலெப் கால்இறுதிக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், ருமேனியா வீராங் கனை சிமோனா ஹாலெப் ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினார்கள்.
மெல்போர்ன்,

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் 8-வது நாளான நேற்று ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

ஆண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-3, 3-6, 7-6 (8-6), 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் நிக் கைர்ஜியோஸ்சை வெளியேற்றி கால்இறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற நடாலுக்கு 3 மணி 38 நிமிடம் தேவைப்பட்டது. கிராண்ட்ஸ்லாம் போட்டியில் நடால் கால்இறுதிக்கு முன்னேறுவது இது 41-வது முறையாகும். இதன் மூலம் அதிக முறை கால்இறுதிக்கு முன்னேறிய வீரர்கள் பட்டியலில் அமெரிக்காவின் ஜிம்மி கார்னோருடன் இணைந்து 3-வது இடத்தை நடால் பிடித்தார். இந்த வகையில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் (57 முறை) முதலிடத்திலும், செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் (46 முறை) 2-வது இடத்தில் உள்ளனர். கால்இறுதியில் ரபெல் நடால்-டொமினிக் திம் மோதுகிறார்கள்.


மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரியாவின் டொமினிக் திம், 10-ம் நிலை வீரரான கேல் மான்பில்சை (பிரான்ஸ்) எதிர்கொண்டார். 1 மணி 50 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் டொமினிக் திம் 6-2, 6-4, 6-4 என்ற நேர்செட்டில் கேல் மான்பில்சை விரட்டியடித்து கால்இறுதிக்கு முதல்முறையாக முன்னேறினார். .

வெற்றிக்கு பிறகு டொமினிக் திம் அளித்த பேட்டியில், ‘இந்த போட்டி தொடரில் நான் இதுவரை சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். எனது செர்வும் நன்றாக இருந்தது. முதல்முறையாக கால்இறுதிக்கு தகுதி பெற்று இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது’ என்று தெரிவித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) 6-2, 2-6, 4-6, 7-6 (7-2), 6-2 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவை போராடி வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார். கிராண்ட்ஸ்லாம் போட்டியில் வாவ்ரிங்கா கால்இறுதியை எட்டுவது இது 18-வது முறையாகும். இன்னொரு ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6-4, 6-4, 6-4 என்ற நேர்செட்டில் ரஷியாவின் ஆந்த்ரே ருப்லெவை தோற்கடித்து கால்இறுதிக்கு தகுதி அடைந்தார். அத்துடன் கடந்த 15 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று இருந்த ஆந்த்ரே ருப்லெவின் வெற்றி பயணத்துக்கும் முட்டுக்கட்டை போட்டார். கால்இறுதியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், வாவ்ரிங்காவுடன் மல்லுக்கட்டுகிறார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் விம்பிள்டன் சாம்பியனும், தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-4, 6-4 என்ற நேர்செட்டில் எலிஸ் மெர்டென்சை (பெல்ஜியம்) தோற்கடித்து கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். இதேபோல் மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 6-3, 6-3 என்ற நேர்செட்டில் நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்டென்சை வெளியேற்றி கால் இறுதிக்குள் நுழைந்தார்.

இன்னொரு ஆட்டத்தில் எஸ்தோனியா வீராங்கனை அனெட் கோன்டாவெய்ட் 6-7 (4-7), 7-5, 7-5 என்ற செட் கணக்கில் 18 வயதான போலந்து வீராங்கனை இகா ஸ்விடேக்கை வீழ்த்தி முதல்முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 2 மணி 42 நிமிடம் நீடித்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் கால்இறுதியை எட்டிய முதல் எஸ்தோனியா வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார். கால்இறுதியில் கோன்டாவெய்ட், சிமோனா ஹாலெப்பை சந்திக்கிறார். மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 30-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீராங் கனை அனஸ்டசியா பாவ்லிசென்கோவா 6-7 (5-7), 7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் சரிவில் இருந்து மீண்டு வந்து 18-ம் நிலை வீராங்கனையும், முன்னாள் சாம்பியனுமான ஏஞ்சலிக் கெர்பருக்கு (ஜெர்மனி) அதிர்ச்சி அளித்து 3-வது முறையாக கால்இறுதிக்கு தகுதி பெற்றார். கால்இறுதியில் பாவ்லிசென்கோவா, கார்பின் முகுருஜாவை சந்திக்கிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 8-வது முறையாக ஜோகோவிச் ‘சாம்பியன்’
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச், டொமினிக் திம்மை போராடி வீழ்த்தி 8-வது முறையாக பட்டத்தை வென்றார்.
2. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் ‘சாம்பியன்’
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க ‘இளம் புயல்’ சோபியா கெனின், முகுருஜாவை சாய்த்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தார்.
3. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் டொமினிக் திம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரியா வீரர் டொமினிக் திம், அலெக்சாண்டர் ஸ்வெரேவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
4. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் முகுருஜா- சோபியா ஆண்கள் பிரிவில் பெடரரை வெளியேற்றினார், ஜோகோவிச்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் பிரிவில் முகுருஜா, சோபியா கெனின் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர். ஆண்கள் பிரிவில் முன்னாள் சாம்பியன் பெடரரை நேர் செட்டில் ஜோகோவிச் சாய்த்தார்.
5. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : ரோஜர் பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.