ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: தோல்வியின் விளிம்பில் இருந்து தப்பிய பெடரர்


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: தோல்வியின் விளிம்பில் இருந்து தப்பிய பெடரர்
x
தினத்தந்தி 28 Jan 2020 11:09 PM GMT (Updated: 28 Jan 2020 11:09 PM GMT)

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் சாம்பியன் ரோஜர் பெடரர் தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டு அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளார்.

மெல்போர்ன்,

மெல்போர்ன் நகரில் நடந்து வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற இந்த போட்டியில் ஒற்றையர் பிரிவில் நேற்று கால்இறுதி ஆட்டங்கள் நடந்தன.

ஆண்கள் பிரிவில் ஒரு ஆட்டத்தில் 6 முறை சாம்பியனும், 3-ம் நிலை வீரருமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), தரவரிசையில் 100-வது இடத்தில் உள்ள டெனிஸ் சான்ட்கிரினை (அமெரிக்கா) சந்தித்தார். 3-வது சுற்று போன்று இந்த ஆட்டத்திலும் பெடரர் ஆரம்பத்தில் தடுமாறினார். முதல் செட்டை வசப்படுத்திய பெடரர் அடுத்த 2 செட்டுகளை கோட்டை விட்டார். 4-வது செட்டிலும் சான்ட்கிரினின் ஆதிக்கமே ஓங்கியது. ஒரு கட்டத்தில் 5-4 என்று முன்னிலை பெற்று சான்ட்கிரின் வெற்றியின் விளிம்புக்கு சென்றார். ஆனால் மூன்று முறை ‘மேட்ச் பாயிண்ட்’ வாய்ப்பில் பந்தை வெளியே அடித்து விட்டு தவறிழைத்தார். அதன் பிறகு இந்த செட் டைபிரேக்கருக்கு நகர்ந்தது. டைபிரேக்கரிலும் சான்ட்கிரின் ஆட்டத்தை வெல்லும் நிலைக்கு வந்தார். இதில் 4 முறை மேட்ச் பாயிண்ட் வாய்ப்பு கிடைத்தும் அதை சாதகமாக மாற்ற முடியாமல் வீணடித்தார்.

மொத்தம் 7 முறை, எதிராளியின் ‘மேட்ச் பாயிண்ட்’ கண்டத்தில் இருந்து தப்பி பிழைத்த பெடரர் சுதாரித்துக் கொண்டு சரிவில் இருந்து மீண்டார். டைபிரேக்கரில் 4-வது செட்டை தனதாக்கியதோடு, கடைசி செட்டில் சான்ட்கிரினை மீள விடாமல் அவரது சவாலுக்கு முடிவு கட்டினார்.

3 மணி 31 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான இந்த ஆட்டத்தில் பெடரர் 6-3, 2-6, 2-6, 7-6 (10-8), 6-3 என்ற செட் கணக்கில் சான்ட்கிரினை வீழ்த்தி 15-வது முறையாக அரைஇறுதிக்கு முன்னேறினார். 28 வயதான சான்ட்கிரின் மணிக்கு அதிகபட்சமாக 212 கிலோமீட்டர் வேகம் வரை சர்வீஸ் போட்டார். 27 ஏஸ் சர்வீஸ்களை வீசினார். ஆனாலும் அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை. அதே சமயம் 38 வயதான பெடரர் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு களத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டு விளையாடினாலும் தனது அனுபவ ஆட்டத்தின் மூலம் திறம்பட சமாளித்து விட்டார். ‘இந்த ஆட்டத்தில் சில தருணங்களில் அதிர்ஷ்டம் எனக்கு கைகொடுத்தது. அற்புதம் நடக்கும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டவன். இந்த ஆட்டத்தில் நான் விளையாடிய விதம், வெற்றிக்கு தகுதியானது கிடையாது. ஆனாலும் வெற்றியாளராக இங்கு நிற்பது மகிழ்ச்சி அளிக்கிறது.’ என்று கூறி பெடரர் நிம்மதி பெருமூச்சு விட்டார்.

அரைஇறுதியிலும் பெடரருக்கு மிகப்பெரிய ‘சோதனை’ காத்திருக்கிறது. அவர் அடுத்து 7 முறை சாம்பியனும், 2-ம் நிலை வீரருமான நோவக் ஜோகோவிச்சை (செர்பியா) எதிர்கொள்கிறார். இவர்கள் இருவரும் நேருக்கு நேர் மல்லுகட்டுவது இது 50-வது முறையாகும். இதுவரை மோதியதில் பெடரர் 23 ஆட்டத்திலும், ஜோகோவிச் 26 ஆட்டத்திலும் வெற்றி கண்டிருக்கிறார்கள். முன்னதாக ஜோகோவிச் கால்இறுதியில் 6-4, 6-3, 7-6 (7-1) என்ற நேர் செட் கணக்கில் கனடாவின் மிலோஸ் ராவ்னிக்கை தோற்கடித்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரம் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி 7-6 (8-6), 6-2 என்ற நேர் செட் கணக்கில் முன்னாள் விம்பிள்டன் சாம்பியனான பெட்ரா கிவிடோவாவை (செக்குடியரசு) வெளியேற்றி அரைஇறுதியை எட்டினார். கடந்த ஆண்டு இதே சுற்றில் கிவிடோவாவிடம் தோற்று இருந்த ஆஷ்லி பார்ட்டி அதற்கு வஞ்சம் தீர்த்துக் கொண்டார்.



 


1984-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய ஓபனில் அரைஇறுதி சுற்றை அடைந்த முதல் ஆஸ்திரேலிய வீராங்கனை என்ற பெருமையை பெற்ற ஆஷ்லி பார்ட்டி கூறுகையில், ‘கிவிடோவா நம்ப முடியாத அளவுக்கு போட்டி அளிக்கக்கூடிய எதிராளி. ஒவ்வொரு புள்ளிக்கும் தயாராக இருக்க வேண்டியது முக்கியம். அவருக்கு எதிராக விளையாடி எனது திறமையை பரிசோதிக்க எப்போதும் விரும்புகிறேன். அவர் கடும் சவால் கொடுக்கும் போது எனது முழு திறமையை வெளிக்கொணர முடிகிறது’ என்றார்.

மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் சோபியா கெனின் 6-4, 6-4 என்ற நேர் செட்டில் ஆன்ஸ் ஜாபெரை (துனிசியா) வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தார். 21 வயதான சோபியா கெனின், கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் அரைஇறுதிக்கு வருவது இதுவே முதல் முறையாகும். அரைஇறுதியில் அவர் ஆஷ்லி பார்ட்டியுடன் மோத உள்ளார்.

கலப்பு இரட்டையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ், லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டாபென்கோ ஜோடி 2-6, 5-7 என்ற நேர் செட்டில் பெதானி மாடெக் சான்ட்ஸ் (அமெரிக்கா)- ஜாமி முர்ரே (இங்கிலாந்து) இணையிடம் பணிந்தது. இந்த ஆண்டுடன் டென்னிசில் இருந்து விடைபெறுவதாக அறிவித்து விட்ட 46 வயதான லியாண்டர் பெயசுக்கு இது தான் கடைசி ஆஸ்திரேலிய ஓபனாகும். அதுவும் ஏமாற்றத்தில் முடிந்து போய் விட்டது.


Next Story