ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் முகுருஜா- சோபியா ஆண்கள் பிரிவில் பெடரரை வெளியேற்றினார், ஜோகோவிச்


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் முகுருஜா- சோபியா ஆண்கள் பிரிவில் பெடரரை வெளியேற்றினார், ஜோகோவிச்
x
தினத்தந்தி 30 Jan 2020 10:30 PM GMT (Updated: 30 Jan 2020 8:46 PM GMT)

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் பிரிவில் முகுருஜா, சோபியா கெனின் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர். ஆண்கள் பிரிவில் முன்னாள் சாம்பியன் பெடரரை நேர் செட்டில் ஜோகோவிச் சாய்த்தார்.

மெல்போர்ன்,

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரம் ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா), 15-ம் நிலை வீராங்கனை சோபியா கெனினை (அமெரிக்கா) சந்தித்தார். சுட்டெரித்த 38 டிகிரி செல்சியஸ் வெயிலுக்கு மத்தியில் இருவரும் ஆக்ரோஷமாக மட்டையை சுழட்டினர்.

இதில் எதிர்பாராத வகையில் சோபியா கெனின் 7-6 (8-6), 7-5 என்ற நேர் செட்டில் ஆஷ்லிக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இரண்டு செட்டிலும் 5-4, 5-3 வீதம் முன்னிலையுடன் செட்டை வெல்லும் வாய்ப்புக்கு வந்து ஆஷ்லி பார்ட்டி கோட்டை விட்டது குறிப்பிடத்தக்கது. ஒற்றையர் பிரிவில் 42 ஆண்டுகளாக எந்த உள்நாட்டினரும் ஆஸ்திரேலிய ஓபனை உச்சிமுகர்ந்ததில்லை. அந்த ஏக்கத்தை ஆஷ்லி பார்ட்டி தணிப்பார் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

21 வயதான சோபியா கெனின், கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் இறுதிப்போட்டிக்கு வந்திருப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு அவர் 4-வது சுற்றை கூட தாண்டியது கிடையாது.

2008-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய ஓபனில் இறுதிப்போட்டிக்குள் கால்பதித்த இளம் வீராங்கனை என்ற சிறப்புக்குரிய சோபியா கெனின் கூறுகையில், ‘இப்படியொரு தருணத்துக்காக எனது 5 வயதில் இருந்தே கனவு கண்டேன். அந்த கனவு இப்போது நனவாகியுள்ளது. மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை. முதல் செட்டில் எதிராளிக்கு இரண்டு செட் பாயிண்ட் வாய்ப்பு கிடைத்த போதிலும் என்னால் வெற்றி பெற முடியும் என்று நம்பினேன். நம்பிக்கையை இழந்து விடாதே என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். ஒரு வேளை முதல் செட்டை இழந்தால் கூட இன்னும் நம்மால் முடியும் என்ற நம்பிக்கையோடு விளையாடி இருப்பேன். ரசிகர்கள் எல்லோரும் ஆஷ்லி பார்ட்டி வெல்ல வேண்டும் என்று விரும்பி இருப்பார்கள். அதற்காக ஆஸ்திரேலிய ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டார்.

மற்றொரு அரைஇறுதியில் 3-ம் நிலை வீராங்கனையும், விம்பிள்டன் சாம்பியனுமான சிமோனா ஹாலெப் (ருமேனியா), தரவரிசையில் 32-வது இடம் வகிக்கும் கார்பின் முகுருஜாவுடன் (ஸ்பெயின்) மோதினார். வலுவான வீராங்கனைகள் மல்லுகட்டியதால் களத்தில் அனல் பறந்தது. இருவரும் மாறி மாறி புள்ளிகள் சேர்த்த வண்ணம் இருந்ததால் முதலாவது செட் டைபிரேக்கருக்கு நகர்ந்தது. டைபிரேக்கரிலும் இதே நிலை நீடித்த போதிலும் கடைசியில் ஹாலெப் பந்தை வலையில் அடித்து விட்டு எதிராளிக்கு வெற்றிக்குரிய புள்ளியை தாரை வார்த்தார்.

இதைத் தொடர்ந்து 2-வது செட்டில் ஒருகட்டத்தில் ஹாலெப் 5-3 என்று முன்னிலை பெற்றார். அதன் பிறகு சரிவில் இருந்து மீண்ட முகுருஜா வரிசையாக 4 கேம்களை சொந்தமாக்கினார். வலைக்கு அருகே ஓடிவந்து பந்தை லாவகமாக திருப்பும் யுக்தியில் முகுருஜா அபாரமாக செயல்பட்டார்.

2 மணி 5 நிமிடங்கள் நீடித்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முகுருஜா 7-6 (10-8), 7-5 என்ற நேர் செட்டில் ஹாலெப்பை வீழ்த்தி, ஆஸ்திரேலிய ஓபனில் முதல்முறையாக இறுதிசுற்றை எட்டினார். 10 ஏஸ் சர்வீஸ்கள் வீசியது முகுருஜாவின் வெற்றிக்கு உதவிகரமாக அமைந்தது.

முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான 26 வயதான முகுருஜா, ஏற்கனவே விம்பிள்டன், பிரெஞ்ச் ஓபன் ஆகிய கிராண்ட்ஸ்லாம்களை கைப்பற்றி இருக்கிறார். நாளை (சனிக்கிழமை) நடக்கும் இறுதி ஆட்டத்தில் அவர் சோபியா கெனினுடன் மோத உள்ளார்.

இரவில் நடந்த ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), 3-ம் நிலை வீரரும், 6 முறை சாம்பியனுமான ரோஜர் பெடரருடன் (சுவிட்சர்லாந்து) கோதாவில் குதித்தார். இதில் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய பெடரர் 5-2 என்று முன்னிலை கண்டார். அதன் பிறகு எழுச்சி பெற்ற ஜோகோவிச் டைபிரேக்கர் வரை போராடி முதலாவது செட்டை தனதாக்கினார். இதைத் தொடர்ந்து இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை எடுத்து கொண்டு தொடர்ந்து ஆடிய பெடரர் அடுத்த இரு செட்டுகளில் ஜோகோவிச்சின் அதிரடியான ஷாட்டுகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் முழுமையாக பணிந்தார். வெறித்தனமாக ஆடிய ஜோகோவிச் 7-6 (7-1), 6-4, 6-3 என்ற நேர் செட்டில் பெடரரை தோற்கடித்து 8-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 2 மணி 18 நிமிடங்கள் நடந்தது.

38 வயதான பெடரருக்கு எதிராக 50-வது முறையாக மோதியுள்ள ஜோகோவிச் அதில் ருசித்த 27-வது வெற்றி இதுவாகும். 7 முறை சாம்பியனான ஜோகோவிச் இறுதி ஆட்டத்தில் டொமினிக் திம் (ஆஸ்திரியா) அல்லது அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) ஆகியோரில் ஒருவரை நாளை மறுதினம் சந்திப்பார்.

கலப்பு இரட்டையர் கால்இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, உக்ரைனின் நாடியா கிச்சனோக் ஜோடி 0-6, 2-6 என்ற நேர் செட்டில் கிராஜ்சிகோவா (செக்குடியரசு), நிகோலா மெக்டிச் (குரோஷியா) இணையிடம் வீழ்ந்தது. போபண்ணா நடையை கட்டியதன் மூலம் ஆஸ்திரேலிய ஓபனில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

Next Story