டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் ‘சாம்பியன்’ + "||" + Australian Open Tennis: American player Sophia Kenin Champion

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் ‘சாம்பியன்’

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் ‘சாம்பியன்’
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க ‘இளம் புயல்’ சோபியா கெனின், முகுருஜாவை சாய்த்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தார்.
மெல்போர்ன்,

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை எட்டிவிட்ட இந்த டென்னிஸ் திருவிழாவில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் 15-ம் நிலை வீராங்கனை சோபியா கெனின் (அமெரிக்கா), முன்னாள் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரம் கார்பின் முகுருஜாவுடன் (ஸ்பெயின்) பலப்பரீட்சை நடத்தினார்.


ஆக்ரோஷமாக ஆடிய இவர்கள் முதல் செட்டில் 4-4 என்று சமநிலைக்கு வந்தனர். அதன் பிறகு 9-வது கேமில் சோபியாவின் சர்வீசை முறியடித்த முகுருஜா அதன் மூலம் முதலாவது செட்டை வசப்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து சுதாரித்துக் கொண்ட சோபியா துடிப்புடன் விளையாடி, முகுருஜாவை மிரள வைத்தார். அடுத்த இரு செட்டுகளிலும் சோபியாவின் அதிரடியான ஷாட்டுகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் முகுருஜா திணறினார். இவ்விரு செட்டுகளிலும் ஒரு சர்வீசை கூட விட்டுக்கொடுக்காத சோபியா கெனின், எதிராளியின் சர்வீஸ்களில் தலா 2 வீதம் தகர்த்து அசத்தினார். இறுதிகட்டத்தில் துல்லியமாக சர்வீஸ் போட முடியாமல் பதற்றத்தில் தகிடுதத்தம் போட்ட முகுருஜா, 3 டபுள் பால்டுடன் வெற்றியை சோபியாவுக்கு தாரை வார்த்தார்.

2 மணி 3 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் சோபியா கெனின் 4-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் முகுருஜாவை வீழ்த்தி கோப்பையை சொந்தமாக்கினார். சோபியா, கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை உச்சிமுகர்வது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அவர் 4-வது சுற்றை கூட தாண்டியதில்லை.

முன்னாள் விம்பிள்டன் சாம்பியனான முகுருஜா இந்த ஆட்டத்தில் தாறுமாறாக தவறுகளை இழைத்தார். பந்தை வலுவாக வெளியே மற்றும் வலையில் அடிப்பதிலும் (45 முறை), டபுள் பால்ட் செய்வதிலும் (8 முறை) சோபியாவை விட இரண்டு மடங்கு தவறு செய்ததால் சறுக்கலை சந்திக்க நேர்ந்தது.

2008-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய ஓபனை குறைந்த வயதில் ருசித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ள 21 வயதான சோபியா கெனின் ரூ.20 கோடியை பரிசுத்தொகையாக அள்ளினார். அத்துடன் நாளை வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் முதல்முறையாக டாப்-10 இடத்திற்குள் நுழைந்து 7-வது இடத்தை பிடிக்கிறார். தோல்வியை தழுவிய முகுருஜாவுக்கு ரூ.10 கோடி கிடைத்தது. 


கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் நிகோலா மெக்டிச் (குரோஷியா)- பார்போரா கிரெஜ்சிகோவா (செக்குடியரசு) கூட்டணி 5-7, 6-4 (10-1) என்ற செட் கணக்கில் ஜாமி முர்ரே (இங்கிலாந்து), பெதானி மாடக் சான்ட்ஸ் (அமெரிக்கா) இணையை தோற்கடித்து பட்டத்தை தட்டிச் சென்றது. மெக்டிச்- கிரெஜ்சிகோவா ஜோடிக்கு ரூ.90 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் 7 முறை சாம்பியனும், 2-ம் நிலை வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள டொமினிக் திம்மை (ஆஸ்திரியா) எதிர்கொள்கிறார்.

சூப்பர் பார்மில் உள்ள ஜோகோவிச் மீண்டும் பட்டம் வெல்ல அதிக வாய்ப்புள்ளது. அவர் மகுடம் சூடினால், தரவரிசையில் மறுபடியும் ‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏறுவார். அதே சமயம் இதுவரை எந்த கிராண்ட்ஸ்லாமும் வெல்லாத, டொமினிக் திம் அபார திறமை கொண்டவர் ஆவார். ஜோகோவிச்சுக்கு எதிராக 10 முறை மோதி அதில் 4-ல் வெற்றி பெற்றுள்ளார். அதுவும் கடைசி 5 மோதல்களில் 4-ல் வெற்றி கண்டுள்ளார். எனவே இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம். இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

கனவு நனவானது - சோபியா கெனின்

“ஆஸ்திரேலிய ஓபனை கையில் ஏந்தியதன் மூலம் எனது கனவு அதிகாரபூர்வமாக நனவாகி விட்டது. எனது மகிழ்ச்சியை விவரிக்க கூட என்னால் இயலவில்லை. இது மிகவும் உணர்வுபூர்வமான தருணம். இதற்காக நான் கடினமாக உழைத்து இருக்கிறேன். நீங்கள் கனவு கண்டு, அதை நோக்கி பயணித்தால் நிச்சயம் அது நிறைவேறும். கடந்த 2 வார காலம் எனது வாழ்க்கையில் மிகச்சிறந்த நாட்கள் ஆகும். எனது தந்தை மற்றும் பயிற்சியாளர் குழுவினர் இங்கு இருக்கிறார்கள். என்னை இந்த நிலைக்கு உயர்த்திய அவர்களுக்கு நன்றி.”

ரஷியாவில் பிறந்தவர்

ஆஸ்திரேலிய ஓபனை வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள அமெரிக்க மங்கை சோபியா கெனின், ரஷியாவை பூர்விகமாக கொண்டவர். அவரது பெற்றோர் அலெக்சாண்டர்-ஸ்வெட்லனா ரஷியாவைச் சேர்ந்தவர்கள். சோபியா கெனின், ரஷிய தலைநகர் மாஸ்கோவில் 1998-ம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்தார். சில மாதங்களிலேயே அவரது குடும்பம் அங்கிருந்து அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்து விட்டது. இதனால் தற்போது சோபியா கெனின், அமெரிக்கவாசி ஆகி விட்டார்.

சோபியாவின் ஆட்டத்தை பார்க்காத தாயார்

சோபியா கெனினின் தாயார் ஸ்வெட்லனா அமெரிக்காவில் இருக்கிறார். அவர் தனது மகளின் ஆட்டத்தை டி.வி.யில் பார்க்கவில்லை. அப்படி பார்த்தால் தனது மகள் தோற்று விடுவார் என்று தனக்கு தானே வைத்துள்ள ‘சென்டிமென்ட்’ காரணமாக அந்த சமயத்தில் வேறு விஷயங்களில் கவனம் செலுத்தி உள்ளார். இந்த தகவலை நிருபர்களிடம் தெரிவித்த சோபியா கெனின், வெற்றி பெற்றதும் எனது தாயாரிடம் போனில் பேசிய பிறகே அவர் நிம்மதியடைந்தார் என்றும் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 70-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் தனிமைப்படுத்தப்பட்டனர்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க உள்ள 70-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.