அடுத்த ஆண்டு விம்பிள்டனில் பெடரர், செரீனா ஆடுவார்கள் - தலைமை நிர்வாகி நம்பிக்கை


அடுத்த ஆண்டு விம்பிள்டனில் பெடரர், செரீனா ஆடுவார்கள் - தலைமை நிர்வாகி நம்பிக்கை
x
தினத்தந்தி 13 April 2020 12:23 AM GMT (Updated: 13 April 2020 12:23 AM GMT)

அடுத்த ஆண்டு விம்பிள்டனில் பெடரர், செரீனா ஆடுவார்கள் என்று விம்பிள்டன் டென்னிஸ் கமிட்டியின் தலைமை செயல் அதிகாரி ரிச்சர்ட் லீவிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

லண்டன், 

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் உயரிய அந்தஸ்து பெற்றது விம்பிள்டன் டென்னிஸ். கொரோனா அச்சம் காரணமாக லண்டனில் நடக்க இருந்த இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் போட்டி ரத்தானது. இரண்டாம் உலகப்போருக்கு பிறகு இப்போது தான் விம்பிள்டன் போட்டியை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டு இருக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் விம்பிள்டன் மகுடத்தை அதிக முறை சூடியவர் என்ற பெருமை சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (8 முறை) வசம் உள்ளது. 

கால் முட்டி காயத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஆபரேஷன் செய்திருந்த பெடரர், புல்தரை போட்டியான விம்பிள்டனில் பங்கேற்க ஆர்வமுடன் காத்திருந்தார். விம்பிள்டன் ரத்தானதும் அதிர்ச்சிக்குள்ளானார். இதே போல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 7 முறை விம்பிள்டனை ருசித்துள்ள முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும் பெருத்த ஏமாற்றத்திற்கு உள்ளானார். 38 வயதான இருவரும் ஓய்வு காலத்தை நெருங்கி வருகிறார்கள். இதனால் அடுத்த ஆண்டு விம்பிள்டனில் கால்பதிப்பார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக விம்பிள்டன் டென்னிஸ் கமிட்டியின் தலைமை செயல் அதிகாரி ரிச்சர்ட் லீவிஸ் கூறுகையில், ‘அடுத்த ஆண்டு விம்பிள்டனில் பெடரர், செரீனா இருவரின் ஆட்டத்தையும் மீண்டும் பார்க்க விரும்புகிறோம். அவர் கள் கலந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. 2021-ம் ஆண்டு விம்பிள்டன் இன்னும் ஜாலியாக, உற்சாகம் நிறைந்ததாக இருக்கும். தற்போதைய நிலைமையில் இந்த ஆண்டு இறுதிவரை டென்னிஸ் போட்டி நடக்க வாய்ப்பில்லை என்று ஆஸ்திரேலிய டென்னிஸ் சங்க தலைமை செயல் அதிகாரி கிரேக் டிலே கூறியதில் எனக்கு உடன்பாடு இல்லை. நாம் நினைப்பதை விட சீக்கிரமாகவே டென்னிஸ் போட்டிகள் தொடங்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.

Next Story