டென்னிஸ்

தனியார் போட்டிகளில் சூதாட்ட தரகர்கள் ஆபத்து: வீரர், வீராங்கனைகளுக்கு உலக டென்னிஸ் சங்கம் எச்சரிக்கை + "||" + Risk of Gambling Brokers in Private Matches: World Tennis Association warns players

தனியார் போட்டிகளில் சூதாட்ட தரகர்கள் ஆபத்து: வீரர், வீராங்கனைகளுக்கு உலக டென்னிஸ் சங்கம் எச்சரிக்கை

தனியார் போட்டிகளில் சூதாட்ட தரகர்கள் ஆபத்து: வீரர், வீராங்கனைகளுக்கு உலக டென்னிஸ் சங்கம் எச்சரிக்கை
தனியார் போட்டிகளில் சூதாட்ட தரகர்கள் ஆபத்து காணப்படுவதால் வீரர், வீராங்கனைகளுக்கு உலக டென்னிஸ் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாரீஸ்,

தனியார் போட்டிகளில் பங்கேற்கும் டென்னிஸ் வீரர், வீராங்கனைகளை சூதாட்ட தரகர்கள் அணுக ஆபத்து இருக்கிறது என்று உலக தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுதல் காரணமாக உலகமே ஸ்தம்பித்து போய் இருக்கிறது. அனைத்து வகையான சர்வதேச போட்டிகளும் ரத்து செய்யப்பட்டும், தள்ளிவைக்கப்பட்டும் இருப்பதால் விளையாட்டு உலகம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. பல நாடுகளில் ஊரடங்கு அமலில் இருப்பதால் வீரர், வீராங்கனைகள் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.


கடந்த மார்ச் மாதம் முதல் நடக்க இருந்த சர்வதேச டென்னிஸ் போட்டிகள் அனைத்தும் பாதிப்பை சந்தித்துள்ளன. பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி தள்ளி வைக்கப்பட்டது. ஜூன் மற்றும் ஜூலை மாதம் நடக்க இருந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜூலை மாதம் 13-ந் தேதி வரை டென்னிஸ் போட்டி எதுவும் நடைபெற வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சகஜ நிலை திரும்பி போட்டி எப்போது தொடங்கும் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

சர்வதேச போட்டிகள் எதுவும் இல்லாததால் டென்னிஸ் வீரர், வீராங்கனைகள் ஒரு சில காட்சி போட்டி மற்றும் ஆன்லைன் மூலம் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கிறார்கள். அனுமதி கிடைக்கும் நாடுகளில் தனியார்களும் டென்னிஸ் போட்டிகளை நடத்த முன்வந்துள்ளனர். முன்னணி வீரரான ஸ்பெயினின் ரபெல் நடால் தனது நாட்டில் நடத்தும் டென்னிஸ் அகாடமி மூலமும், செரீனா வில்லியம்சின் பயிற்சியாளரான பாட்ரிக், பிரான்ஸ் நாட்டில் செயல்பட்டு வரும் தனது டென்னிஸ் அகாடமி மூலமும் டென்னிஸ் போட்டி நடத்த முடிவு செய்து முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் உலக தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சங்கத்தின் ஊழல் கண்காணிப்பு மற்றும் நேர்மை பிரிவு டென்னிஸ் வீரர், வீராங்கனைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் ‘தனியார்கள் நடத்தும் போட்டிகளில் சூதாட்ட தரகர்கள் தலையிட்டு ஆட்டத்தின் முடிவை மாற்றும் (மேட்ச் பிக்சிங்) முயற்சியில் ஈடுபடக் கூடிய ஆபத்து இருக்கிறது. எனவே இந்த சூழ்நிலையில் டென்னிஸ் வீரர், வீராங்கனைகள் கவனமாக இருக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உலக தொழில்முறை டென்னிஸ் வீரர், வீராங்கனைகள் சங்கத்தின் ஊழல் கண்காணிப்பு மற்றும் நேர்மை பிரிவு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தொழில்முறை டென்னிஸ் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது நிலையற்றதாகும். இது டென்னிஸ் உலகினருக்கு சவாலான நேரமாகும். உள்ளூர் அரசு அனுமதிக்கும்பட்சத்தில் தனிப்பட்ட முறையில் சில கண்காட்சி போட்டிகள், மற்றும் ஆன்லைன் மூலமான போட்டிகள் நடத்தப்படுகிறது. இதுபோன்ற போட்டிகள் பலரின் விளையாட்டு மற்றும் வருவாய் ஆவலை அதிகரிக்கும் கவர்ச்சிகரமான வாய்ப்பு என்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். விளையாட வாய்ப்புகள் உருவாக்கப்படுவது வரவேற்க்கதக்கது தான். ஆனால் இதுபோன்ற சூழ்நிலைகளில் சூதாட்ட தரகர்கள் வீரர், வீராங்கனைகளை சூதாட்டத்துக்காக அணுகவும் வாய்ப்பு இருக்கிறது என்பதையும் கவனத்துக்கு கொண்டு வருகிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.