அமெரிக்க ஓபன் உள்பட எந்த டென்னிஸ் போட்டியிலும் பங்கேற்கப்போவதில்லை - சமந்தா ஸ்டோசுர்


அமெரிக்க ஓபன் உள்பட எந்த டென்னிஸ் போட்டியிலும் பங்கேற்கப்போவதில்லை - சமந்தா ஸ்டோசுர்
x
தினத்தந்தி 26 July 2020 11:55 PM GMT (Updated: 26 July 2020 11:55 PM GMT)

இந்த ஆண்டு நடக்கும் அமெரிக்க ஓபன் உள்பட எந்த டென்னிஸ் போட்டியிலும் பங்கேற்கப்போவதில்லை என்று சமந்தா ஸ்டோசுர் தெர்வித்துள்ளார்.


* இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் அஜித் சிங் நேற்று அளித்த பேட்டியில், ‘ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்த முறை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பதால் வீரர்களின் நடத்தையை கண்காணிப்பது கொஞ்சம் எளிது. ஏனெனில் இந்தியாவில் என்றால் 8 இடங்களில் போட்டி நடைபெறும். ஆனால் அமீரகத்தில் வெறும் மூன்று மைதானங்கள் தான். எது எப்படி என்றாலும் எங்களுக்கு பிரச்சினை இல்லை. போட்டி அட்டவணை வெளியானதும், கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் குழுவினரை முடிவு செய்வோம். தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து ஊதியம் பெறும் பட்டியலில் 8 ஊழல் தடுப்பு பிரிவு அலுவலர்கள் உள்ளனர்’ என்றார்.

*இந்த ஆண்டு நடக்கும் அமெரிக்க ஓபன் உள்பட எந்த டென்னிஸ் போட்டியிலும் பங்கேற்கப்போவதில்லை என்று ஆஸ்திரேலிய வீராங்கனையும், 2011-ம் ஆண்டு அமெரிக்க ஓபனை வென்றவருமான சமந்தா ஸ்டோசுர் கூறியுள்ளார். ஒரே பாலின ஈர்ப்பாளரான சமந்தா ஸ்டோசுர், லிஸ் ஆஸ்ட்லிங் என்ற பெண்ணுடன் இணைந்து ஒரே வீட்டில் வசிக்கிறார். கடந்த மாதம் ஆஸ்ட்லிங்குக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை அருகில் இருந்து கவனிக்கவும், கொரோனா பரவும் இந்த கடினமான காலக்கட்டத்தில் நடைமுறை சிக்கல்களை தவிர்க்கவும் எஞ்சிய சீசனில் ஓய்வு எடுக்க முடிவு செய்ததாக குறிப்பிட்ட 36 வயதான சமந்தா ஸ்டோசுர் அடுத்த ஆண்டு மீண்டும் களம் திரும்புவேன் என்றும் கூறினார்.

*சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், தமிழில் திருப்பி படிக்கும் விதமாக வெளியிட்ட ஒரு டுவிட்டர் பதிவில், ‘சூப்பர் நியூஸ் வந்தாச்சு.... ஜூலை 27-ந்தேதி ஆட்டத்தை தொடங்க வேண்டியது தான்’ என்று கூறியுள்ளார். இதனால் ஜூலை 27-ந்தேதி (இன்று) என்ன விசேஷம் என்று ரசிகர்கள் குழம்பி போய் உள்ளனர்.

* இங்கிலாந்தில், கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் முதல் முறையாக கவுண்டி கிரிக்கெட் போட்டியில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். தெற்கு லண்டனில் உள்ள ஓவலில் நேற்று தொடங்கிய சுர்ரே - மிடில்செக்ஸ் கவுண்டி அணிகள் இடையிலான 2 நாள் நட்புறவு ஆட்டத்தை ஏறக்குறைய ஆயிரம் ரசிகர்கள் ஸ்டேடியத்திற்குள் சமூக இடைவெளியுடன் அமர்ந்து கண்டுகளித்தனர்.


Next Story