டென்னிஸ் வீரர் நிஷிகோரி கொரோனாவால் பாதிப்பு


டென்னிஸ் வீரர் நிஷிகோரி கொரோனாவால் பாதிப்பு
x
தினத்தந்தி 18 Aug 2020 12:01 AM GMT (Updated: 18 Aug 2020 12:01 AM GMT)

டென்னிஸ் வீரர் நிஷிகோரி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

நியூயார்க்,

ஜப்பானை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரரான நிஷிகோரி அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் வசித்து வருகிறார். தற்போது உலக தரவரிசையில் 31-வது இடத்தில் இருக்கும் நிஷிகோரி நியூயார்க்கில் வருகிற 31-ந் தேதி முதல் செப்டம்பர் 13-ந் தேதி வரை நடைபெறும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி மற்றும் அதற்கு முன்னதாக வருகிற 20-ந் தேதி தொடங்கும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி ஆகியவற்றில் பங்கேற்க திட்டமிட்டு தயாராகி வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் நிஷிகோரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் 10 நாட்கள் தன்னைத் தானே தனிமைப்படுத்தி கொண்டு இருக்கும் நிஷிகோரி சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்வது குறித்து அவர் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. இருப்பினும் அவர் அமெரிக்க ஓபனில் ஆடுவது சந்தேகம் என்று தெரிகிறது.

இது குறித்து 30 வயதான நிஷிகோரி கூறுகையில், ‘கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டுக்கான சின்சினாட்டி ஓபன் போட்டியில் இருந்து விலகி இருக்கிறேன். நானும், எனது அணியினரும் வருகிற வெள்ளிக்கிழமை மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய இருக்கிறோம். அதன் பிறகு புதிய தகவலை அளிக்கிறேன்’ என்றார். நிஷிகோரி அமெரிக்க ஓபனில் 2014-ம் ஆண்டில் இறுதிப்போட்டிக்கும், 2016, 2018-ம் ஆண்டுகளில் அரைஇறுதிக்கும் முன்னேறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story