சின்சினாட்டி டென்னிஸ் பிலிஸ்கோவா, சோபியா கெனின் அதிர்ச்சி தோல்வி


சின்சினாட்டி டென்னிஸ் பிலிஸ்கோவா, சோபியா கெனின் அதிர்ச்சி தோல்வி
x
தினத்தந்தி 24 Aug 2020 11:00 PM GMT (Updated: 24 Aug 2020 8:03 PM GMT)

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.

நியூயார்க்,

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான கரோலினா பிலிஸ்கோவா (செக்குடியரசு) 5-7, 4-6 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 41-வது இடத்தில் உள்ள ரஷிய வீராங்கனை வெரோனிகா குடெர்மிடோவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு நடையை கட்டினார். இதேபோல் மற்றொரு ஆட்டத்தில் நடப்பு ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனும், உலக தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ளவருமான சோபியா கெனின் (அமெரிக்கா) 1-6, 6-7 (7-9) என்ற நேர்செட்டில் 60-ம் நிலை வீராங்கனையான அலிஸ் கோர்னெட்டிடம் (பிரான்ஸ்) வீழ்ந்து ஏமாற்றம் அளித்தார். மேலும் 2017-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் சாம்பியனான ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) தனது தொடக்க சுற்று ஆட்டத்திலேயே தோல்வி கண்டு வெளியேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 6-1, 6-3 என்ற நேர்செட்டில் தென்ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இன்னொரு ஆட்டத்தில் தரநிலையில் 10-வது இடத்தில் உள்ள டேவிட் கோபின் (பெல்ஜியம்) 7-6 (8-6), 6-4 என்ற நேர்செட்டில் குரோஷியாவின் போர்னா கோரிச்சை விரட்டியடித்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். முந்தைய சுற்று ஆட்டங்களில் டிகோ ஸ்வார்ட்ஸ்மேன் (அர்ஜென்டினா), டிமிட்ரோவ் (பல்கேரியா), ஜான் இஸ்னர் (அமெரிக்கா) ஆகியோர் வெற்றி கண்டனர்.

Next Story